இந்திய பெண் அரசியல்வாதிகளில் முத்திரை பதித்தவர், ஜெயலலிதா. கடின உழைப்பால் சினிமா, அரசியல் வானில் உச்சம் தொட்டவர். இவரது பிறந்த தினமான பிப்., 24, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
கர்நாடகாவின் மைசூரில், 1948 பிப்., 24ல் பிறந்தார். இளம் வயதில் பரத நாட்டியம், கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார். சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. தன் திறமையால், 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார். எம்.ஜி.ஆர்., -- ஜெயலலிதா ஜோடி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
அரசியல் நுழைவு
எம்.ஜி.ஆர்., வழிகாட்டுதல்படி, 1982ல் அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினரானார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1984ல் ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1984ல் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்ற போது நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், அ.தி.மு.க., -அமோக வெற்றி பெற்றது.இதில், ஜெயலலிதாவின் பங்கு முக்கியமானது.
எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், 1988ல் ஜெ., -- ஜானகி அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. கடந்த, 1989 சட்டசபை தேர்தலில், ஜெ., தலைமையிலான, அ.தி.மு.க., 'சேவல்' சின்னத்தில் போட்டியிட்டு, 27 இடங்களில் வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் வென்ற ஜெயலலிதா, முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். பின், ஜானகி ஒதுங்கிக் கொள்ள அ.தி.மு.க., ஒன்றிணைந்தது.
இமாலய வெற்றி
அ.தி.மு.க., கூட்டணி, 1991 தேர்தலில் இமாலய வெற்றி பெற்றது. முதன் முறையாக ஜெயலலிதா முதல்வரானார். பின்னர் 2001, 2011 தேர்தல்களிலும் வென்று முதல்வரானார். கடந்த, 2016 தேர்தலிலும் வென்று, எம்.ஜி.ஆருக்கு பின், தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகி சாதித்தார். 2016 செப்., 22ல் உடல்நலம் பாதிக்கப்பட்டார். 75 நாள் சிகிச்சைக்கு பின் டிச., 5ல் காலமானார்.
6 முறை முதல்வர்
தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர். இந்தியாவின் நீண்டகாலம் பதவி வகித்த பெண் முதல்வர்களில், 2வது நபர். தேர்தல் மூலம் தேர்வான தமிழகத்தின் முதல் பெண் முதல்வர். 29 ஆண்டுகளாக அ.தி.மு.க., வின் பொதுச்செயலர். தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர். ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர்.
100 யூனிட் மின்சாரம்
உலகத்தமிழ் மாநாடு, மழை நீர் சேகரிப்பு, தொட்டில் குழந்தை, மகளிர் போலீஸ் ஸ்டேஷன், பெண் கமாண்டோ படை, லாட்டரி ஒழிப்பு, அம்மா உணவகம்.மேலும், இலவச லேப்டாப், தாலிக்கு தங்கம், அரசு கேபிள் டிவி, 100 யூனிட் மின்சார சலுகை, முல்லை பெரியாறு அணை நீர்மட்டம், 142 அடியாக உயர்த்தியது போன்றவை இவரது சாதனை திட்டங்களில் முக்கியமானவை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE