சிலர் கொஞ்சம் கூட சிரிக்க மாட்டார்கள். சிரிப்பு என்பதே அவர்களுக்கு பிடிக்காது. சிரித்துக்கொண்டே இருந்தால் நம்மை எல்லோரும் ஏமாற்றி விடுவார்கள் என்று நினைத்து எப்போதும் கடுகடுவென்றே இருப்பார்கள். இது போன்றவர்கள் எப்போது பார்த்தாலும் டென்ஷன், கோபம் என இருப்பார்கள்.
இப்படித்தான் ஒருவர் எப்போதும் டென்ஷனாகவே இருப்பார். சிரிப்பில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் கஞ்சத்தனம் உண்டு. அவர் தன் வாழ்வின் இறுதி கட்டத்தில் படுத்த படுக்கையாக இருந்தார். திடீரென கண் விழித்து பார்த்தவர் மூச்சு வாங்கியபடி தன் மனைவி கமலாவை கூப்பிட்டு "கமலா நீ எங்கே இருக்க? என்றார். அவளும் சோகமாக உங்க பக்கத்துல தான் இருக்கிறேன் என்றாள்.
“பேரன் குமாரு எங்க இருக்கான்?” “அவனும் உங்கள் பக்கத்தில்தான் உட்கார்ந்திருக்கிறான்” என்றாள். “மருமக எங்க” என்றான். “அவளும் உங்க கிட்ட தான் நிக்கிறா” என்றாள். உடனே அந்த கஞ்சன் "அப்புறம் ஏன் தேவையில்லாம அடுப்படியில் லைட் எரிஞ்சிக்கிட்டிருக்கு" என்றான். இது போல் வாழ்க்கையில் கடைசி வரை சிரிப்பில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் சிலர் கஞ்சத்தனம் காட்டுவதுண்டு.
நகைச்சுவை
நகைச்சுவையாக பேசுவது மட்டுமல்ல நகைச்சுவைக்கு மனம் விட்டு சிரிப்பதும் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஒரு கோபம் பத்து நோய்களை உண்டாக்கும். ஆனால் ஒரு சிரிப்பு பத்து ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களை நமக்கு துணையாக கொண்டு வரும். பல்வேறு நோய்களும் ஒற்றை சிரிப்பில் காணாமல் போய்விடும். ஒரு சிரிப்பு 100 மருந்துகளுக்கு சமம். பெரிய சண்டை கூட சின்ன சிரிப்பில் அடங்கிப் போய்விடும்.
ஒரு வீட்டில் கணவன் மனைவிக்கு கடும் வாக்குவாதம். மனைவிக்கு கணவன் மேல் கடும் கோபம். அவனை பார்த்து "ஏழுலகம் தேடினாலும் என்ன மாதிரி உங்களுக்கு ஒரு பொண்டாட்டி கிடைக்கமாட்டாள்" என்றாள். கணவனும் சோகமாக மூஞ்சியை வைத்துக் கொண்டு "எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. மறுபடியும் உன்ன மாதிரி ஒரு பொண்டாட்டியை ஏழு உலகத்துலயும் தேட" என சண்டை சிரிப்பில் முடிந்தது.
வீட்டில் பையனுக்கு கிருஷ்ணர் வேஷம் போட்டுக் கொண்டிருந்தாள் என் மனைவி. ஆனால் பையன் பிடிவாதம் பண்ணிக்கொண்டிருந்தான். உடனே மனைவி சொன்னாள் “டேய் நான் காலேஜ் படிக்கும்போது பேய் மாதிரி வேஷம் போட்டு போனேன். எனக்கு இரண்டாவது பரிசு கொடுத்தாங்க தெரியுமா” என்றாள். உடனே நான் சொன்னேன் “நீ வேஷம் போடாம போய் இருந்தால் முதலாவது பரிசு கொடுத்து இருப்பாங்க” என்றேன். மறுபடியும் பேயாக மாறிவிட்டாள் என் மனைவி.
சிரிப்பது அபூர்வம்
நகைச்சுவை என்பது நமது வாழ்க்கையில் ஒன்றாக கலந்து இருக்க வேண்டும். பலர் உம்மணாம்மூஞ்சி போல எப்போதும் இருப்பது உண்டு. எதற்கும் அசைந்து கொடுக்க மாட்டார்கள். காசு கொடுத்தாலும் கூட சிரிக்க மாட்டார்கள். நாம் குழந்தையாக இருக்கும் பொழுது 200 முறை சிரிக்கிறோம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தினமும் 10 முறை சிரிப்பதே அபூர்வம் ஆகிவிடுகிறது.
அன்றாடம் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும், செய்யும் ஒவ்வொரு செயலிலும் மெல்லிய நகைச்சுவை இழையோட வேண்டும். நகைச்சுவையை தன் மனமும் பிறர் மனமும் புண்படாமல் எடுத்துக்காட்டும் பொழுது அந்த இடத்தில் சந்தோஷம் அதிகரிக்கிறது. நீங்கள் வருத்தப்படும்பொழுது, அழும் பொழுது, கோபப்படும் போதும் உங்களை ஆறுதல் படுத்த ஒரு கைதான் வரும். ஆனால் நீங்கள் மற்றவர்களை நகைச்சுவையால் சந்தோஷப்படுத்தும் பொழுது இரண்டு கைகளையும் தட்டி உங்களை கட்டி அணைத்துக்கொள்ள பலரும் வருவார்கள்.
வங்கி கடன் வேண்டி விண்ணப்பித்து ஓராண்டாகியும் கிடைக்கவில்லை. தலைமை மேலாளரை ஒருமுறை பார்த்து விடலாம் என நினைத்து எனது மனைவியை அழைத்துக் கொண்டு போய் சந்தித்தேன். என்னிடம் பல விவரங்களைக் கேட்டவர் கையோடு எனது விண்ணப்பத்தை அனுமதி செய்து கொடுத்தார். கிளம்பும்போது "கடன் உங்கள் பேருலதான வாங்குறீங்க. நீங்க மட்டும் வந்திருக்கலாமே. ஏன் உங்க மனைவியை கூப்பிட்டு கொண்டு வந்தீர்கள்" என்றார்.
நான் சொன்னேன் "பிரான்ச் மேனேஜரதான் முதலில் பார்த்தேன் அவரு தான் ஒரு தடவை உங்க கஷ்டத்த தலைமை மேலாளர் நேர்ல பார்த்தா உங்களுக்கு உடனே லோன் தர வாய்ப்பிருக்கு அப்படின்னாரு. அதான் மனைவிய கூப்பிட்டுக் கொண்டு வந்தேன்" என்றேன். தலைமை மேலாளர் என்னை கட்டி அணைத்துக் கொண்டார்.
சுருங்கும் தசைகள்
நாம் சிரிக்கும் பொழுது முப்பதுக்கும் மேற்பட்ட தசைகள் சுருங்கி விடுகின்றன. பத்துக்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் சுரக்கின்றன. இளமையை நீடிக்கும் என்டார்பின்களும், காதலை தூண்டும் ஆம்பிட்டமின்களும் பெருகுகின்றன. ஆனால் அதே நேரம் நாம் அழும் பொழுது ஐந்து தசைகள்தான் வேலை செய்கின்றன அட்ரீனலின் என்ற வேதிப்பொருள் மட்டுமே சுரக்கிறது
இது உடல் வளர்ச்சியை, கோபத்தை, பொறாமையை துாண்டுகிறது.சிலர் கோபம் தலைக் கேறினால் நாயைப் போல கத்த ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அவர்களை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை. ஒரு முறை கோபம் தலைக்கேறிய கணவன் பயங்கர சத்தமாக கத்த ஆரம்பித்தான்.
அதேநேரம் தெருவில் போய்க் கொண்டிருந்த ஒரு நாயும் சத்தமாக குரைக்க தொடங்கியது. அந்த நாய் சத்தத்தை கேட்டதும் கத்திக் கொண்டிருந்த கணவன் தனது கத்தலை நிறுத்திக் கொண்டான். கொஞ்ச நேரம் கழித்து தெருவில் நாயும் குரைப்பதை நிறுத்திவிட்டது. மனைவி உடனே கணவனைப் பார்த்து " அந்த நாய் நிறுத்தி விட்டது. நீங்கள் ஆரம்பியுங்கள்" என்றாள். கணவனுக்கு தன் தவறு புரிந்தது.
மாணவனும் ஆசிரியரும்
ஒரு மாணவன் பேருந்தில் போய்க் கொண்டிருந்தான். அடுத்த நிறுத்தத்தில் ஏறிய அவன் பள்ளி ஆசிரியர் உட்காருவதற்கு இடமில்லாமல் அவன் அருகில் வந்து நின்றார். அந்த மாணவன் உடனே எழுந்து நின்றான். அவர் அவன் தோளை பிடித்து அமுக்கி உட்காரவைத்து "மரியாதை மனசில் இருந்தா போதும். நீ உட்கார்ந்து கொள்" என்றார். அவன் அமைதியாக உட்கார்ந்து விட்டான்.பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்றது. மறுபடியும் அவன் எந்திரிக்க, "தம்பி! எனக்கு உடம்புல பலம் இருக்கு. உன் மரியாதைக்கு நன்றி. நீ உட்கார்ந்து கொள்" என்றார்.
குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருந்த மாணவன் அடுத்த நிறுத்தம் வந்ததும் அவன் தோளை பிடித்திருந்த வாத்தியார் கைகளை எடுத்தாவாறே தேம்பி அழ ஆரம்பித்தான். "ஐயா, நீங்க ஏறுன பஸ்ஸ்டாப்ல நான் இறங்க வேண்டியவன். நீங்க என்னை இறங்கவிடாம உட்கார வச்சு, உட்கார வச்சு மூன்று ஸ்டாப் கொண்டு வந்துட்டீங்க" என அழ ஆரம்பித்தான். இவ்வாறு மரியாதை நிமித்தம் செய்யும் செயல்கள் கூட நகைச்சுவையாக மாறி விடுவதுண்டு.
நகைச்சுவையாக பேசுபவர்கள் அருகில் அரைமணி நேரம் இருந்தால் போதும். அன்றைய தினம் முழுவதும் சந்தோஷமாகவே இருக்கும்.குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டாமல் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் அப்போதுதான் குழந்தைகளும் நல்ல முறையில் வளர்வார்கள். கெட்ட வார்த்தைகள் பேசும் கோபக்கார பெற்றோரின் குழந்தைகள் தாங்கள் கேட்ட அனைத்து கெட்ட வார்த்தைகளையும் மற்றவர்களிடம் பேச ஆரம்பிக்கிறார்கள்.
சிரிப்புக்கு பஞ்சமில்லாத வீட்டில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வளர்கிறார்கள். விலையில்லாத, அணிவதற்கு எளிதான, எப்பொழுதும் சூடிக்கொள்ளும், எல்லோரும் விரும்பும் ஆபரணம் தான் புன்னகை. புன்னகை பூப்போம். ஆரோக்கியம் காப்போம்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,
மருத்துவ இதழியலாளர்,
மதுரை98421 67567
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE