கோவை:கோவை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளி விட்டு, மங்களூர் டூ (பொள்ளாச்சி வழியாக) ராமேஸ்வரம் ரயிலை அறிவித்திருப்பது, கோவை மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்ல பொள்ளாச்சி வழியாக, தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த காலத்தில், அந்த ரயில் தினமும் ஓடியது. சுமார், 15 ஆண்டுகளுக்கு முன், மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதைக்காக, அந்த ரயில் நிறுத்தப்பட்டது. பின், பொள்ளாச்சி - திண்டுக்கல் வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது.
பல கோடி ரூபாய் செலவழித்து, போத்தனுாரில் இருந்து பொள்ளாச்சி வரையிலும் அகல பாதை பணி முடிக்கப்பட்டு விட்டது.இப்பணி முடிந்து, நான்கு ஆண்டுகளாகியும், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸை மீண்டும் இயக்கவில்லை. இந்த ரயில் இயக்கப்பட்டால், கோவை மற்றும் மதுரை பெருநகரங்களுக்கு நேரடி இணைப்பு கிடைக்கும் என, பலரும் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, கோவை - பொள்ளாச்சி - பழநி - திண்டுக்கல் - மதுரை - ராமேஸ்வரம் சென்று வரும் வகையில், தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கலாம் என, தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு, சேலம் கோட்டத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், அதற்கு மாறாக, மங்களூருவில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வாரம் இருமுறை இயக்கலாம். மதுரை - திண்டுக்கல் - பழநி - பொள்ளாச்சி - போத்தனுார் - பாலக்காடு வழியாக இயக்கலாம் என, வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
கோவை புறக்கணிப்பு
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் அனுப்பியுள்ள பதிலில், 'கோவை-ராமேஸ்வரம் ரயில் இயக்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக, மங்களூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வாரம் இருமுறை இயக்கப்படும். பொள்ளாச்சி, உடுமலை, பழநி, மதுரை செல்லும் பயணிகள் பயன்படுத்தலாம்' என, கூறியுள்ளார்.
அதாவது, ஏற்கனவே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸை மீண்டும் இயக்காமல், வாரம் இரு முறை என, புதிய ரயிலை இயக்கப் போவது தெரியவந்துள்ளது. இதிலிருந்து, கோவையை முற்றிலுமாக புறக்கணித்திருப்பது வெளிப்படையாக தெரிய வந்து உள்ளது.ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில் என்பதாலும், அகல ரயில் பாதைக்காக நிறுத்தப் பட்டது என்பதாலும், கோவை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸை மீண்டும் பழைய வழித்தடத்திலேயே இயக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மக்கள் ஏமாற்றம்
கோவை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்பட்டால், மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில், மருதமலை முருகன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பழனி முருகன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், ராமேஸ்வரம் கோவில் மற்றும் ஏர்வாடி தர்காவுக்குச் செல்லும் வகையில், ஆன்மிக சிறப்பு ரயிலாகவும் அமையும்.
இதுதவிர, வர்த்தக நிறுவனத்தினர், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பணி நிமித்தமாக ரெகுலராக பயன்படுத்துவர். ராமேஸ்வரத்தில் இருந்து மீன், கருவாடு, மதுரையில் இருந்து பூக்கள், ஒட்டன்சத்திரம் காய்கறிகள் பொள்ளாச்சி சந்தைக்கு கொண்டு வரலாம்.கோவையில் இருந்து பம்ப் செட், கிரைண்டர் மற்றும் ஜவுளி பொருட்கள், நீலகிரி மலை காய்கறிகளை மேட்டுப்பாளையம் வழியாக கொண்டு வந்து, ராமேஸ்வரம் வரையிலான நகரங்களுக்கு எடுத்துச் செல்ல போக்குவரத்து வழித்தடமாக அமையும்.
சரக்குகள் கொண்டு செல்லவும், பயணிகள் பயணிக்கவும் ஏதுவாக இருப்பதால், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்கினால், ரயில்வே துறைக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்பதால், கோவை மக்களின் கோரிக்கையை ரயில்வே பரிசீலித்து, மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'பொள்ளாச்சி டூ மேட்டுப்பாளையம்'
ரயில் பயணிகள் கூறியதாவது:மங்களூர் டூ ராமேஸ்வரம் செல்ல வாரம் இருமுறை ரயில் என்பதே வரவேற்கத்தக்கது. சிறப்பு ரயிலாக இயக்கலாம். கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்ல, ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த, நிறுத்தப்பட்ட ரயிலையே மீண்டும் இயக்கச் சொல்கிறோம்.கோவை பயணிகள் பொள்ளாச்சி சென்று, மங்களூர் எக்ஸ்பிரசை பயன்படுத்தலாம் என்கின்றனர்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்ல, தற்போது ரயில் சேவையே இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.கோவை - போத்தனுார் - பொள்ளாச்சி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்; அந்த ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும்.
அதாவது, பொள்ளாச்சி - போத்தனுார் - கோவை - மேட்டுப்பாளையம் வரை, காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கினால், ஏராளமானோர் பயணிப்பர். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸை மீண்டும் இயக்க வேண்டும்.இவ்வாறு, பயணிகள் கூறினர்.
'தலைமையகம் முடிவு செய்யும்'
சேலம் கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் அண்ணாதுரை கூறுகையில், ''கொரோனா காலத்தில், சில ரயில்கள் நிறுத்தப்பட்டன. நோய் தொற்று பிரச்னை முழுமையாக தீர்ந்ததாக, ரயில்வே தலைமையகத்தில் இருந்து அறிவிப்பு வரும் பட்சத்தில், பயணிகள் ரயில் இயக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ரயில் பெட்டிகள் தயார் நிலையில் இருக்கின்றன.
கோவை - ராமேஸ்வரம் (பொள்ளாச்சி வழியாக) ரயில் இயக்க, பலதரப்பு மக்களிடம் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தெற்கு ரயில்வே தலைமையகம் இதுகுறித்து முடிவு செய்யும்,'' என்றார்.
'தொடர்கிறது இன்னல்'
'ராக்' ரவீந்திரன் கூறுகையில், ''கோவை - போத்தனுார் - பொள்ளாச்சி - பழநி - திண்டுக்கல் பாதை, அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு, நான்கு ஆண்டுகளாகி விட்டன. இன்னமும் கோவை - ராமேஸ்வரம் உள்ளிட்ட பல ரயில்கள் இயக்கப்படவில்லை. கோவையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸை மீண்டும் இயக்க வேண்டும்,'' என்றார்.
'தொழில்நுட்ப ஆய்வு அவசியம்'
கோவை எம்.பி., நடராஜன் கூறியதாவது:அகல ரயில் பாதை பணிக்காக, ஏற்கனவே இயக்கப் பட்ட ரயில் சேவை நிறுத்தப்பட்டது.பல கோடி ரூபாய் செலவழித்து,போத்தனுார் - பொள்ளாச்சி அகல ரயில் பாதை ஏற்படுத்தப்பட்டது. மலைப்பகுதி வழியாக, பாதை செல்கிறது. தொழில்நுட்ப பிரச்னை இருக்கிறதா என, கொங்கன் ரயில்வே இன்ஜினியர்களை வரவழைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
கேரளாவுக்கு ரயில் இயக்கும்போது, வாளையாறு பகுதியில் யானைகள் கடக்கும் பகுதிகள் இருக்கின்றன. அப்பகுதிகளில் ரயிலின் வேகம் குறைக்கப்படுகிறது. அதேபோல், கோவை - பொள்ளாச்சி ரயில் இயக்குவதில், தொழில்நுட்ப பிரச்னை இருப்பின், வேகத்தை குறைக்கலாம்.
எங்களது கோரிக்கையை புறந்தள்ளி விட்டு, மங்களூரில் இருந்து ராமேஸ்வரம் செல்ல ரயில் அறிவித்திருக்கின்றனர். கோவை மக்கள் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் பயணிக்க வேண்டுமெனில், பொள்ளாச்சி செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE