மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான நகரமாக, கோவையை மத்திய அரசு தேர்வு செய்து, 10 ஆண்டுகளாகியும், ஒரு கோடி ரூபாய் கூட நிதி ஒதுக்காத தமிழக அரசு, கடைசி நேரத்திலும் ஒரு குழப்பமான அறிவிப்பையே வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள இரண்டாம் நிலை நகரங்களில், 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, 19 நகரங்களை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தகுதியான நகரங்களாக, கடந்த 2011ம் ஆண்டில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தேர்வு செய்தது.
இதில், தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட ஒரே நகரம், கோவை மட்டுமே. இதற்கான நிதியில் பாதியை மத்திய அரசு வழங்குமென்றும் அறிவிக்கப்பட்டது. இதே நாளில் அறிவிக்கப்பட்ட கொச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இத்திட்டம், மூன்றாண்டுகளுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
பல நகரங்களில் இதற்கான பணி நிறைவடையும் நிலையில் உள்ளன. ஆனால், கோவை நகரில் இதற்கான விரிவான திட்ட அறிக்கை கூட தயார் செய்யப்படவில்லை. 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன், ஏழாண்டுகளுக்கு முன்பே கோவையில் நேரில் ஆய்வு செய்துவிட்டு, கோவை நகரம், மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றத் தகுதியான வழித்தடம் மற்றும் கட்டமைப்புடன் இருப்பதாகக் கூறிச் சென்றார். அதற்குப் பின்னும், சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு கூட மேற்கொள்ளப்படவில்லை.
'சிஸ்ட்ரா எம்விஏ கன்சல்டிங் இண்டியா பிரைவேட் லிமிடெட்-ரைட்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனம், ஜெர்மன் அரசின் நிதியுதவியுடன் முதற்கட்ட கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 136 கி.மீ.,க்கு ஐந்து வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்குவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து, 2019ம் ஆண்டிலேயே அறிக்கை கொடுத்துவிட்டது. அதற்குப் பின்னும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் விடவில்லை; அதற்காக நிதியும் ஒதுக்கவில்லை.
இந்நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 6,683 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. உடனே அதற்கு பல தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப் பட்டது. ஆனால், உண்மையில் பட்ஜெட் உரையில் நிதி ஒதுக்கீடு செய்ததாக எந்தத் தகவலும் இல்லை.
பட்ஜெட்டின், 58ம் பக்கத்தில் இதுகுறித்த சில வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.அதில், 'கோவையில் 6,683 கோடி ரூபாய் மதிப்பில், முதற்கட்டமாக 44 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அது பரிசீலிக்கப்படுகிறது' என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.
இதேபோல, கடந்த பத்தாண்டுகளில் பல முறை சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. இப்போதும் நிதி ஒதுக்கியதாகவோ, திட்டத்தை ஏற்றுக்கொண்டதாகவோ எந்தத் தெளிவான அறிவிப்பும் இல்லை. இதேபோன்று விமான நிலைய விரிவாக்கத்துக்கும் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. கோவை வரும் பிரதமரிடம் இந்த இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதற்கு தொழில் அமைப்புகள் தயாராகி வருகின்றன.
-நமது சிறப்பு நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE