பொது செய்தி

தமிழ்நாடு

மது விற்பனையால் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
சென்னை:'நடப்பு நிதியாண்டில், 'டாஸ்மாக்' வாயிலாக அரசுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும்,'' என, தமிழக அரசின் நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்தார்.சென்னை, தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:தமிழக அரசின், பல்வேறு நடவடிக்கைகளால், நடப்பு நிதியாண்டில், மாநிலத்தின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி, 2.02 சதவீதமாக இருக்கும். அதேசமயம், மத்திய பட்ஜெட்டில்,

சென்னை:'நடப்பு நிதியாண்டில், 'டாஸ்மாக்' வாயிலாக அரசுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும்,'' என, தமிழக அரசின் நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை, தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:தமிழக அரசின், பல்வேறு நடவடிக்கைகளால், நடப்பு நிதியாண்டில், மாநிலத்தின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி, 2.02 சதவீதமாக இருக்கும். அதேசமயம், மத்திய பட்ஜெட்டில், தேசிய அளவிலான வளர்ச்சி, ௭.௭ சதவீதம் வீழ்ச்சி அடையும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில், 5 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி இருக்கும். வரிகள் வாயிலாக, மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய், 18 சதவீதம் குறைந்துள்ளது. மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், ௩ சதவீத அளவுக்கு நிதிப்பற்றாக்குறை இருக்கலாம்.கடன் வாங்கி, எந்தச் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன; அதனால், மாநிலத்தின் வளர்ச்சி தொடர்ந்து இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

கடன் அளவு அதிகரிப்பிற்கு ஏற்ப, தமிழகத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.பெட்ரோல், டீசல் விலை உயர்வால், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், மாநிலத்தின் வரி வருவாய் குறையாமல் இருக்கவும், 2020 மே மாதம், விற்பனை வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, மாநிலத்தின் வரி விதிப்பு காரணம் அல்ல.மத்திய அரசிடம் இருந்து, தொடர்ந்து வரி வருவாய் கிடைக்கிறது. ஆனால், அதன் அளவு குறைகிறது.

நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து, தமிழகத்திற்கு வர வேண்டியது, 32 ஆயிரத்து, 849 கோடி ரூபாய் என, மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.தற்போது அது, 23 ஆயிரத்து, 39 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், மாநிலத்தின் வரி வருவாய் குறைந்திருந்தாலும், அதை ஈடு செய்வதற்காக, கூடுதலாக கடன் பெற்று, அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

'டாஸ்மாக்' மது கடைகள் மூடப்பட்டிருந்ததால், 2020 ஏப்., - ஜூன் காலாண்டில், மது விற்பனை குறைவாக இருந்தது; பின், அதிகரித்தது. நடப்பு நிதியாண்டில், மது வகைகள் மீதான விற்பனை வரி, ஆயத்தீர்வை வாயிலாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அரசின் மானிய செலவை பொறுத்த வரை, மின் கட்டணம், உணவு மானியத்திற்கு அதிகம் செலவிடப்படுகிறது. தமிழகத்தின் கடன் அளவு, நடப்பு நிதியாண்டில், 24.9 சதவீதமாக உள்ளது; அடுத்த நிதியாண்டில், 26.69 சதவீதமாக அதிகரிக்கும்.இவ்வாறு கிருஷ்ணன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X