திருப்புவனம் : திருப்புவனத்தில் அரசு பஸ் ஊழியர்களை மாணவர்கள் கும்பலாக சேர்ந்து மிரட்டுவதால் ஊழியர்கள் திகைத்து வருகின்றனர்.
திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 163 கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. தினசரி பள்ளி மாணவர்கள் திருப்புவனம், மதுரைக்கு இந்த பஸ்களில் சென்று வருகின்றனர். தற்போது ஒருசில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படுகின்றன.
பள்ளி செல்லும் மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு வருவதும், மாணவிகளை கேலி செய்வதுமாக செல்கின்றனர். தட்டி கேட்கும் கண்டக்டர், டிரைவர்களை கூட்டமாக சேர்ந்து மிரட்டுகின்றனர்.
நேற்று மாலை மதுரையில் இருந்து திருப்பாச்சேத்தி சென்ற அரசு பஸ்சின் படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் பயணம் செய்தனர். கண்டக்டர் அறிவுறுத்தியும் மாணவர்கள் கேட்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கண்டித்த பின் பஸ்சினுள் சென்றனர்.
போலீசார் தரப்பில் கூறுகையில், மாணவர்களை பெற்றோர்கள் தான் கண்காணித்து தவறு செய்பவர்களை கண்டிக்க வேண்டும், போலீசார் நடவடிக்கை எடுத்தால் அவர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும், என்றனர்.
போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், தினசரி மாணவர்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு மிரட்டுவது, கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பஸ்சில் பயணம் செய்யும் மற்றவர்களும் கண்டிப்பதில்லை. எனவே மாவட்ட காவல்துறையினர் தவறு செய்யும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE