கந்தன்சாவடி : கந்தன்சாவடியில் இயங்கி வரும், 230 கி.வோல்ட் திறன் உடைய, தரமணி, துணை மின் நிலையத்தில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சென்னை, கந்தன்சாவடி, எம்.ஜி.ஆர்., சாலையில், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை இயங்கி வருகிறது. அதன் அருகில், 230 கி.வோல்ட் திறன் உடைய, தரமணி, துணை மின் நிலையம் உள்ளது.தரமணி, துணை மின் நிலையத்தில் இருந்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள, பல பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன் அருகில், 400 கி.வோல்ட் திறன் உடைய, துணை மின் நிலையம், பல கோடி ரூபாய் மதிப்பில், அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம், 230 கி.வோல்ட் திறன் உடைய, துணை மின் நிலையத்தின், தரைப்பகுதியில் உள்ள கோரைப்புல், திடீரென பற்றி எரிந்தது.இதையடுத்து, தீ, மளமளவென, துணை மின் நிலையம் முழுதும் பரவி, எரிய ஆரம்பித்தது. தகவல் அறிந்து, திருவான்மியூர், துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர்.ஆனால், துணை மின் நிலையத்தில், இணைப்பு துண்டிக்கப்படாததால், தீயணைப்பு வீரர்கள் செய்வதறியாது திகைத்தனர்.பின், சாமர்த்தியமாக, விவசாயத்திற்கு நீர் பாய்ச்சுவதுபோல, தரைப்பகுதியில் இறைத்து, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
துணை மின் நிலையத்தில் பீடர் மாற்றும் போது, அதிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி, கோரைப் புல் மீது விழுந்ததால், தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கு, துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு வரவுள்ளார். இதற்காக, அவர் வந்து செல்லும் வழித்தடத்திற்கான ஒத்திகை, நேற்று நடத்தப்பட்டது.இந்நிலையில், சட்டப் பல்கலைக்கு, மிக அருகில் உள்ள, துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மின் வாரியம் தனி கவனம் செலுத்துமா?துணை மின் நிலையத்தில் இதுபோன்ற, தீ விபத்து ஏற்பட்டு சேதமானால், அதை, சரி செய்ய காலதாமதம் ஏற்படும். இதனால், சுற்று வட்டார பகுதிக்கு, ஒரு சில நாட்கள், மின் தடைக்கான வாய்ப்பும் உள்ளது.
தரமணி துணை மின் நிலையத்தை பொருத்தவரை, பல மாதங்களாக வளர்ந்து, காய்ந்துபோன கோரைப்புல் அகற்றாததே, இந்த, தீ விபத்துக்கு காரணமாக அமைந்தது.எனவே, இதுபோன்ற துணை மின் நிலையங்களில் கோரைப்புல், எளிதில் தீ பற்றும் புதர்கள் வளர்வதை, அவ்வப்போது அகற்ற, மின் வாரியம் தனி கவனம் செலுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE