பல்லாவரம் : அனகாபுத்துாரில், 12 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வாக கட்டப்பட்ட, அனகாபுத்துார் - தரப்பாக்கம் மேம்பாலம், நேற்று மாலை, பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
அனகாபுத்துாரை ஒட்டியுள்ள, தரப்பாக்கம், கோவூர், போரூர், இரண்டாம் கட்டளை, கெருகம்பாக்கம், ராமாபுரம் பகுதி மக்கள், அனகாபுத்துார், பம்மல், பல்லாவரம் பகுதிகளுக்கு செல்ல, பல கி.மீ., துாரம் சுற்றி கொண்டு செல்ல வேண்டும்.அதே நேரத்தில், தரப்பாக்கத்தில் இருந்து அடையாற்றை கடந்தால், எளிதாக இப்பகுதிகளுக்கு சென்று விடலாம். அந்த பாதையில், பொதுமக்களின் வசதிக்காக, மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 2008ல், அனகாபுத்துார் -- தரப்பாக்கம் பகுதிகளை இணைக்கும் வகையில், அடையாறு ஆற்றின் மேல், 4.70 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.
இதில், 80 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், அனகாபுத்துார் பகுதியில் மேம்பாலம் இறங்க வேண்டிய, இந்திய விமானப் படைக்கு சொந்தமான இடத்தில், 1,000 சதுர அடி நிலம் தேவைப்பட்டது.அந்த நிலம் கிடைக்காததால், மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், தேவையான நிலத்தை, சில மாதங்களுக்கு முன், பாதுகாப்பு துறை வழங்கியதை அடுத்து, மேம்பாலம் கட்டும் பணி, வேகமாக நடந்தது.தற்போது, இப்பணிகள் முடிந்து, இம்மேம்பாலம், பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. நேற்று மாலை, தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., இம்மேம்பாலத்தை திறந்து வைத்தார். அதைதொடர்ந்து, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE