புதுச்சேரியில் ஆட்சி பறிபோன பின்னணி: காங்கிரசார் பட்டியலி்ட்டு குமுறல்| Dinamalar

இந்தியா

புதுச்சேரியில் ஆட்சி பறிபோன பின்னணி: காங்கிரசார் பட்டியலி்ட்டு குமுறல்

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (1)
Share
புதுச்சேரி : ஓயாத கோஷ்டி பூசல், கட்சியின் விசுவாசிகள் புறக்கணிப்பு போன்ற காரணங்களால் புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தை இழந்து பரிதாபமான நிலைக்கு காங்., தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, என்.ஆர். காங்., கட்சியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை காங்., கட்சி கைப்பற்றியது. முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை
புதுச்சேரியில் ஆட்சி பறிபோன  பின்னணி: காங்கிரசார் பட்டியலி்ட்டு குமுறல்

புதுச்சேரி : ஓயாத கோஷ்டி பூசல், கட்சியின் விசுவாசிகள் புறக்கணிப்பு போன்ற காரணங்களால் புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தை இழந்து பரிதாபமான நிலைக்கு காங்., தள்ளப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, என்.ஆர். காங்., கட்சியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை காங்., கட்சி கைப்பற்றியது. முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது.மொத்தம் 30 எம்.எல். ஏ.,க்களை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.,க்களை நியமிக்கலாம். நியமன எம்.எல்.ஏ.,க்களின் பெயர்களை மாநில அரசு பரிந்துரை செய்து, கவர்னருக்கு அனுப்பும். அந்த பட்டியலை மத்திய உள்துறைக்கு கவர்னர் அனுப்பி வைப்பார்.மாநில அரசின் பரிந்துரையை ஏற்று நியமன எம்.எல்.ஏ.,க்களை மத்திய உள்துறை நியமித்து அறிவிக்கும். இந்த நடைமுறையே மரபாக பின்பற்றப்படுகிறது.


கோஷ்டி மோதல்


முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டாகியும், காங்., கட்சியில் நிலவிய கோஷ்டி பூசலால், நியமன எம்.எல்.ஏ.,க் களின் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை. ஒவ்வொருவரும் ஒரு பெயரை சிபாரிசு செய்ததால் மோதல் எழுந்தது. இதனால், நியமன எம்.எல்.ஏ.,க்கள் பெயர்களை பரிந்துரை செய்வதில் பெரும் இழுபறி ஏற்பட்டது.பெயர்களை பரிந்துரை செய்வதை மாநில அரசு தாமதப்படுத்தியதால், கடந்த 2017ம் ஜூலை மாதத்தில், பா.ஜ., தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை மத்திய அரசு நேரடியாக நியமனம் செய்தது. அதிர்ச்சி அடைந்த காங்., தரப்பினர், கோர்டிற்கு சென்றனர்.

காங்., நடத்திய சட்ட போராட்டங்களின் எதிரொலியாக, நியமன எம்.எல்.ஏ.,க்களை மத்திய அரசு நேரடியாக நியமனம் செய்தது செல்லும் என்பது உறுதியானது. அவர்களுக்கு ஓட்டு அளிக்கும் உரிமையும் கிடைத்தது. இதனால், பா.ஜ., தரப்பு பெரும் உற்சாகம் அடைந்தது. இது, புதுச்சேரியில் பா.ஜ.,வின் வேகமான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.


வியாபாரிகளுக்கு சீட்

இந்நிலையில், காங்., கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள், 3 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததால் காங்., ஆட்சி கலகலத்தது. கடைசியில், சொந்த கட்சியினரின் செயல்பாடுகளால் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுத்து நிற்கிறது.எம்.எல்.ஏ.,க்களின் தொடர் ராஜினாமா பின்னணியில் பா.ஜ., இருப்பதாக காங்., தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், பின்னணியில் யார் இருந்தாலும், காரணம் எதுவாக இருந்தாலும், கடந்த தேர்தல் நேரத்தில் காங்., கட்சியில் சீட் அளிப்பதில் பின்பற்றிய நடைமுறையே, தற்போதைய பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் என்று காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர்.

சீனியர் காங்., நிர்வாகிகள் கூறும்போது, 'கட்சிக்காக நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்து வருகிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் சீட் கேட்பதும், எங்களுக்கு மறுக்கப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இதற்கான விலையை காங்., கட்சி இப்போது கொடுத்துள்ளது. அதாவது, பாரம்பரியமாக காங்., கட்சியில் இருப்பவர்களுக்கும், கட்சி விசுவாசிகளுக்கும் சீட் தராமல், வெளியில் இருந்து வந்தவர்களுக்கே தந்தனர். தேர்தலில் செலவு செய்வார்களா என, பணத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து வியாபாரிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும், கட்சிக்கு புதிதாக வந்தவர்களுக்கும் சீட்களை வாரி வழங்கினர். அவர்கள்தான் ராஜினாமா செய்து வெளியேறி உள்ளனர்' என குமுறினர்.


சீனியர்கள் புறக்கணிப்பு


'சீனியர்களை புறக்கணித்து, கட்சிக்கு புதிதாக வந்தவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கியதும் காங்., கட்சியின் சரிவுக்கு காரணம்' என கூறும் அரசியல் நோக்கர்கள், 4 முறை வெற்றி பெற்று அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்த லட்சுமிநாராயணன் போன்றவர்களை சபாநாயகராக நியமிக்காமல், முதல்முறையாக வெற்றி பெற்ற, கட்சிக்கு புதிதாக வந்த சிவக்கொழுந்துவுக்கு அந்த பதவி வழங்கப்பட்டதையும், அதிருப்தியில் இருந்த லட்சுமிநாராயணன் வெளியேறியதையும் சுட்டிக் காட்டினர்.


தலைவர் மாற்றம்

மாநில காங்., தலைவராக பதவி வகித்த நமச்சிவாயம் கடந்தாண்டு திடீரென நீக்கப்பட்டார். இது, ஆதரவாளர்கள் மத்தியிலும், வன்னிய சமுதாயத்தினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற காங்கிரசின் கொள்கை அடிப்படையில், கட்சி தலைவர் பதவியில் இருந்து நமச்சிவாயம் நீக்கப்பட்டதாக காரணம் கூறினாலும், கோஷ்டிபூசல் எதிரொலியாகவும், பழி வாங்கும் நடவடிக்கையாகவும் அவர் நீக்கப்பட்டதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். கட்சி தலைவர் பதவியைவிட்டு அவரை நீக்காமல் இருந்திருந்தால், காங்., கட்சியிலேயே அவரும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்திருக்க வாய்ப்புள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தலைகீழ் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்காது என காங்., நிர்வாகிகள் ஆதங்கப்படுகின்றனர்.

ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என நாராயணசாமி கூறி வந்த நிலையில், நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார். இதை தொடர்ந்து, காங்., ஆட்சி கவிழ்ந்தது; நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தது.சொந்த கட்சியினரை புறக்கணித்தது, கோஷ்டி பூசலுக்கான விலையை காங்., கட்சி தற்போதுதந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X