தாம்பரம் : சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதை தடுக்க நடந்து வரும், 'கட் அண்ட் கவர்' கால்வாய் பணிகளை, நகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம் ரயில்வே மேம்பாலம் அருகே, கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் விதமாக, சுரங்கப்பாதை உள்ளது. இப்பதையில், நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன.ஆண்டுதோறும் பருவ மழையின்போது, கிழக்கு தாம்பரத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பு, தனியார் கல்லுாரியை ஒட்டிய பகுதிகளில் பெய்யும் மழை நீர், எம்.இ.எஸ்., சாலை வழியாக, இச்சுரங்கப் பாதையில் தேங்கும். இதனால், குறைந்தது இரண்டு நாட்களுக்காவது, வாகன போக்குவரத்து தடைபடும்.தாம்பரம் நகராட்சி நிர்வாகம், மின் மோட்டார் வைத்து, தேங்கிய நீரை வெளியேற்றி, சுத்தானந்த பாரதி தெருவில் விட்டாலும், மழை நீர் செல்ல வழியின்றி, குடியிருப்பு பகுதியிலேயே தேங்கும்.
இதை தடுக்க, எம்.இ.எஸ்., சாலை முதல் இரும்புலியூர் ஏரி வரை, 'கட் அண்ட் கவர்' கால்வாய் கட்டும் பணிகள் துவங்கி உள்ளன.பொது மக்கள் கூறிய தாவது:கால்வாய் கட்டுவதற்காக, குழி தோண்டப்பட்டுள்ளதால், மின் கம்பங்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருகின்றன. இதனால், பழைய ஜி.எஸ்.டி., சாலை வழியாக, பயணிக்கும் வாகன ஓட்டிகள், அச்சத்துடேனயே பயணிக்கின்றனர்.எனவே, தாம்பரம் நகராட்சி மற்றும் மின் வாரிய அதிகாரிகள் இணைந்து, மின் கம்பங்களை இடமாற்றி அமைக்கும் பணிகளை, விரைவில் துவக்க வேண்டும். மேலும், பணியை முழுவதுமாக கண்காணிக்க வேண்டும்.
கால்வாய் பணிகளை முடித்தவுடன், சாலையையும் புதுப்பித்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சுத்தானந்த பாரதி, பரலி நெல்லையப்பர், செங்கேணியம்மன் கோவில் தெருக்கள் வாயிலாக, இரும்புலியூர் ஏரி வரை, 2,723 அடி துாரம், 3 அடி அலகம், 3.3 அடி உயரத்திற்கு, கால்வாய் கட்டப்பட உள்ளது. கால்வாயின் இரண்டு பக்க சுவர்கள், 25 செ.மீ., அளவிலும், மேல்பக்க மூடி, 15 செ.மீ., அளவிலும் அமைய உள்ளன. ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், 1.89 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள இக்கால்வாய் பணிகள், மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட உள்ளன. மொத்தம் உள்ள, 2,723 அடி துாரத்தில், 886 அடி துாரத்திற்கு, எட்டு உயர் அழுத்த மின்கம்பங்களும், இரும்புலியூர் ஏரி அருகே, ஒரு தாழ்வு அழுத்த மின்கம்பமும் உள்ளன.
இவற்றை, இடமாற்றம் செய்ய, மின்வாரியத்திற்கு பரிந்துரைத்து உள்ளோம். அவர்களிடம் இருந்து, மின்கம்பங்களை இடமாற்றுவதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வந்தவுடன், அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு, அவை, இடமாற்றப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE