கிண்டி : கிண்டியில், சாலையை ஆக்கிரமித்து கட்டிய, 30 ஆண்டு பழமை வாய்ந்த இரண்டு வீடுகள் இடிக்கப்பட்டன.அடையாறு மண்டலம், 174வது வார்டு, கிண்டி, நரசிங்கபுரம், நான்காவது தெரு, 300 அடி நீளம், 30 அடி அகலம் கொண்டது.
இந்த தெரு வழியாக, பிற பகுதிகளுக்கு செல்ல முடியும்.அதே பகுதியைச் சேர்ந்த, சோமு, சகுந்தனா என்பவர்கள், 30 ஆண்டுகளுக்கு முன், இந்த தெருவை ஆக்கிரமித்து, 650 சதுர அடி பரப்பளவில், இரண்டு வீடுகள் கட்டினர்.இதனால், சாலை அகலம் குறைந்து, போக்கு வரத்து தடைபட்டது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.2019 ஜன., 7ம் தேதி, அனுமதி பெறாமல் கட்டிய இந்த இரண்டு கட்டடங்களுக்கு, மாநகராட்சி, 'சீல்' வைத்தது. வருவாய்த்துறை வழியாக, சாலையை அளந்து அறிக்கை தாக்கல் செய்ய, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.சாலை இடத்தில், இரண்டு வீடுகள் கட்டி உள்ளதாக, வருவாய்த்துறை அறிக்கை அளித்தது.
இதையடுத்து, நேற்று, அடையாறு மண்டல உதவி ஆணையர் திருமுருகன் முன்னிலையில், மாநகராட்சி ஊழியர்கள், இரண்டு வீடுகளையும், பொக்லைன் கொண்டு இடித்து தரைமட்டமாக்கினர். தொடர்ந்து, கட்டட கழிவுகளை அகற்றி, சாலை விரிவாக்கத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE