புதுச்சேரி : நாராயணசாமி விதைத்ததை அறுவடை செய்துள்ளார் என அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., கூறினார்.
அவர் அளித்த பேட்டி:சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் படுதோல்வி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது. மக்களிடம் அனுதாபம் பெற, நாராயணசாமி உண்மைக்கு புறம் பான கருத்துக்களை கூறியுள்ளார்.நம்பிக்கை கோரும் தீர்மான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறிய காங்.,- தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் உண்மை நிலையை மக்கள் உணர்ந்துள்ளனர். பின், கவர்னரிடம் அமைச்சரவை கலைப்பு கடிதம் கொடுத்தனர். சட்டசபையை எவ்வளவு கொச்சைபடுத்த முடியுமோ அந்த அளவுக்கு நாராயணசாமி கொச்சைப்படுத்தி பேசினார்.
ஆளும் காங்., அரசின் 2 அமைச்சர்கள் விலகிய போதே, நாராயணசாமி வெளியேறி இருக்க வேண்டும். காங்., கட்சியில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகிய போது, எதிர்கட்சிகளை விலைக்கு வாங்கிடலாம் என காத்திருந்த காங்., கட்சிக்கு இது சரியான பாடம். காங்., - தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு தேர்தலில் சீட் கொடுப்பதில்லை.அரசு கவிழ்ந்ததற்கும், அ.தி.மு.க.வுக்கும், எதிர்கட்சிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. உங்கள் கட்சியில் நீங்கள் சீட் கொடுத்து எம்.எல்.ஏ., ஆனவர்கள், ராஜினாமா செய்து சென்றனர்.
கடந்த 30 ஆண்டு அரசியலில் என்ன செய்தோம், எத்தனை பேரை பழிவாங்கியிருப்போம் என்பதை நாராயணசாமி நினைத்து பார்க்க வேண்டும். என்ன விதைத்தாரோ அதை அறுவடை செய்துள்ளார். மக்களின் எண்ணத்தை காங்.,- தி.மு.க.,எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மூலம் நிருப்பித்துள்ளனர்.சட்டசபைக்கு வர முடியாத கம்யூ., கட்சிகள், சட்டசபை நடவடிக்கை குறித்து பேச தகுதியில்லை. எங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை கோர விருப்பம் இல்லை. தமிழகத்தில் 3வது முறையாக அ.தி.மு.க., ஆட்சி மலரும் போது, புதுச்சேரியிலும் அ.தி.மு.க., ஆட்சி மலரும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE