ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டையில், சேதமடைந்த சாய்கங்கை கால்வாயை கட்ட, 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கி உள்ளன.தமிழக- - ஆந்திர அரசுகள் இடையே, 1983ல், தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தம் போடப்பட்டது.
இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், ஜூலை- - ஆகஸ்ட் இடையே, 8 டி.எம்.சி., ஜனவரி - -ஏப்ரல் இடையே, 4 டி.எம்.சி., என, இரு தவணைகளில், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தர வேண்டும். இதற்காக, கண்டலேறு அணையில் இருந்து, வெங்கடகிரி, ராப்பூர், காளஹஸ்தி, வரதய பாளையம், சத்தியவேடு வழியே தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, ஜீரோபாயின்ட் வழியே, பூண்டி நீர்த்தேக்கம் வரை, 177 கி.மீட்டர் துாரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. கால்வாய் அமைக்கும் பணி, 13 ஆண்டுகளாக நடந்து, 1996ல், முதல் முறையாக தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வந்தது.கால்வாய் உடைப்பு போன்ற காரணங்களால், கிருஷ்ணா நீர், தமிழகத்திற்கு வர, 10 நாட்கள் ஆனது.
சத்ய சாய்பாபா டிரஸ்ட் மூலம், கால்வாய் சீரமைத்ததால், தற்போது, தண்ணீர், நான்கு நாட்களில், தமிழகம் வருகிறது.கால்வாயின், 3வது கி.மீட்டரில் உள்ள, ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் முதல், 10வது கி.மீட்டரில் உள்ள ஆலப்பாக்கம் வரை, இடைப்பட்ட பகுதிகளில், நான்கரை கி.மீட்டர் அளவிற்கு, கால்வாய் பெருமளவு சேதம் அடைந்துள்ளது. சிமென்ட் பலகைகள் சரிந்தும், உடைந்தும் உள்ளது.முட்புதர்கள் வளர்ந்து உள்ளன. சேதம் அடைந்த கால்வாய் பகுதிகளை சீரமைக்க, தமிழக அரசு, 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.ஒரு ஆண்டு காலத்திற்குள், இந்த பணிகளை முடிக்க வேண்டும். தற்போது, கால்வாயில்தண்ணீர் செல்வதால், கால்வாய் ஓரங்களில் உள்ள முட்புதர்கள் அகற்றும் பணி, நடந்து வருகிறது.கால்வாய் ஓரங்களில் கான்கிரீட் அமைத்து, பணிகள் நடக்கும். இத்தகவலை பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE