மதுரை : மதுரை ஆவினில் நெய் மற்றும் பட்டர் பிரிவில் ஓராண்டில் ரூ.5.60 கோடி முறைகேடு நடந்துள்ளதாக கமிஷனர் நந்தகோபாலுக்கு விசாரணை குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றரையாண்டுகளாக பொது மேலாளராக இருந்த ஜனனி சவுந்தர்யா மாற்றம் செய்யப்பட்ட பின் திண்டுக்கல் ஆவின் பொது மேலாளர் ராமநாதன் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். பல துறைகளில் முறைகேடு நடந்துள்ளதாக முதல்வர் தனிப்பிரிவு மற்றும் ஓய்வூதியர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் அடிப்படையில் ராமநாதன் உத்தரவில் ஏ.ஜி.எம்., (அக்கவுண்ட்) ராமலிங்கம் தலைமையில் ஏ.ஜி.எம்.,கள் சேகர் (டையிரி) வேலுச்சாமி (கொள்முதல்), மாரியப்பன் (ஸ்டோர் இன்ஜினியர்) மற்றும் ஜான் (தணிக்கை) உள்ளிட்டோர் கொண்ட குழு இரண்டு வாரங்களாக விசாரணை நடத்தியது.
நெய் பிரிவில் கொள்முதல் செய்யப்பட்ட காலி ஜார்கள் (டப்பா) இருப்பில் இல்லாதது தெரிந்தது. 5 லிட்., நெய் ஜார்கள் 13,800, ஒரு லிட்., நெய் ஜார் 11 ஆயிரம் மற்றும் ஏராளமான 200, 100 மி., ஜார்கள் குறைந்திருந்தது. பட்டர் இருப்பில் 12 டன் குறைந்திருந்தது. ஜார்கள் குறித்த இருப்பு பதிவு விவரங்கள் 2020, ஜூன் முதல் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு பிரிவில் மட்டும் ரூ.5.60 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதற்கான விரிவான அறிக்கை கமிஷனர் நந்தகோபாலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஆவின் ஊழியர்கள் கூறியதாவது: முறைகேடு குறித்த அறிக்கை மட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ராமநாதன் ஆவின் கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். காண்ட்ராக்ட் லேபர், கேண்டீன், கொரோனா கால சாப்பாடு, கொள்முதல், டெண்டர்கள், பணி நியமனங்கள் என அடுத்தடுத்து குழு விசாரணை நடத்த இருந்த நிலையில் அவரது விடுவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிக்கை அடிப்படையில் துறை செயலாளர் கோபால், கமிஷனர் நந்தகோபால் முதற்கட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சாதிப்பாரா புதிய பொது மேலாளர்டி.ஆர்.ஓ., அந்தஸ்தில் உள்ள கருணாகரன் ஆவின் பொது மேலாளராக பொறுப்பேற்றார். தற்போதுள்ள அதிகாரிகளுக்கு முன்கூட்டி தெரிவிக்காமல் விமானம் மூலம் மதுரை வந்து இப்பொறுப்பை ஏற்றது பலர் கவனத்தை ஈர்த்துள்ளது. ராமநாதன் போல் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கருணாகரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE