மைசூரு : சொந்த ஊரில், ம.ஜ.த., பலத்தை குறைக்கவும், பா.ஜ.,வின் பலம் அதிகரிப்பதை தவிர்க்கும் நோக்கிலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வகுத்த திட்டத்துக்கு, காங்கிரசாரே முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலில், மைசூரு, சாமுண்டீஸ்வரி தொகுதியில், அன்றைய முதல்வர் சித்தராமையாவை, தோற்கடித்தவர், ஜி.டி.தேவகவுடா.செல்வாக்கு மிக்க ஒக்கலிகர் தலைவரான இவர், தற்போது, ம.ஜ.த.,விலிருந்து, மனதளவில் ஒதுங்கியுள்ளார். இவரை காங்கிரசுக்கு இழுக்கும் முயற்சி நடக்கிறது.இவ்விஷயத்தில், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அதிக ஆர்வம் காண்பிக்கிறார். இதன் மூலம் சொந்த ஊரில், ம.ஜ.த.,வை பலவீனப்படுத்துவதுடன், பா.ஜ.,வின் வேர் விரிவடைவதை தடுப்பதும், அவர் திட்டமாகும்.
காங்கிரசில், ஜி.டி.தேவகவுடா சேர்ந்தால், தன் மீது ஒட்டியுள்ள ஒக்கலிகருக்கு எதிரானவர் என்ற அவப்பெயரை போக்கி, அச்சமுதாயத்தினர் ஓட்டுகளை ஈர்க்க, உதவியாக இருக்கும்.பழைய மைசூரு பகுதியில், கட்சியை பலப்படுத்த கனவு காணும் பா.ஜ.,வின் முயற்சியை தோற்கடிக்கலாம் என்பதும் சித்துவின் எண்ணம்.காங்கிரசில் சேர்ந்தால், தன்னுடன் வரும், எம்.எல்.ஏ., ஒருவருக்கும், வாய்ப்பளிக்க வேண்டும் என, ஜி.டி.தேவகவுடா, நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் சித்தராமையா திட்டத்துக்கு, காங்கிரசார் தடைக்கல்லாக நிற்கின்றனர். ஜி.டி.தேவகவுடா, காங்கிரசில் சேர்ந்தால், எதிர்க்காலத்தில் தங்களுக்கு பாதிப்பாக இருக்கும். இதனால், அவர் கட்சிக்கு வராமல் இருக்கும் வழிகளை பார்த்து வருகின்றனர்.இதற்கிடையில், சித்தராமையா திட்டத்தை தெரிந்து கொண்ட குமாரசாமி, ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்களை ஒன்று சேர்த்து, ஜி.டி.தேவகவுடா காங்கிரசுக்கு செல்லும் சூழ்நிலை உருவாகாமல், அரசியல் சக்ரவியூகம் வகுப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE