பெங்களூரு : அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., தயாராவதை தொடர்ந்து, காங்கிரஸ் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.
கட்சியின் மாநில பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா உத்தரவுபடி, மார்ச் முதல் வாரம், 100 சட்டசபை தொகுதிகளில், பாத யாத்திரை நடத்த உள்ளனர்.அடுத்தடுத்த தேர்தல்களில், தொடர்ந்து தோல்வியை சந்தித்து துவண்டுள்ள, காங்கிரஸ் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி யூட்ட, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.அடுத்த கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு, இப்போதிருந்தே தயாராக வேண்டும். பாதயாத்திரை மூலம், மக்களை சென்றடைய வேண்டும் என, காங்., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய நிலையில், மத்திய, மாநில அரசுக்கு எதிராக போராட, பல விஷயங்கள் உள்ளது. மக்கள் விவாதிக்கும் விஷயங்களையே முன் வைத்து, பாத யாத்திரை நடத்தினால், பலனிருக்கும் என்பது, காங்., மேலிடத்தின் எண்ணமாகும்.கர்நாடகாவின், 224 சட்டசபை தொகுதிகளில், 67ல் மட்டும், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பல தொகுதிகளில் கட்சிக்கு பலமிருந்தும், சரியான தலைமை இல்லாததால், உள்ளூர் தலைவர்களின் அதிருப்தி உட்பட, பல காரணங்களால், தொகுதிகளை காங்., பறிகொடுத்தது.இத்தகைய தொகுதிகளில், பாத யாத்திரை நடத்தி, தலைவர்களிடையே நிலவும் சிறு, சிறு குழப்பங்களை சரி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அடுத்த தேர்தலுக்கு, கட்சியை தயாராக்க வேண்டும்.
குறிப்பாக, மாநில தலைவர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஒன்றாக, பாதயாத்திரையில் பங்கேற்கும்படி கட்டளையிட்டுள்ளது.இதன்படி, பாதயாத்திரை நடத்த, தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக, 2018ல் கட்சி தோற்ற, 100 சட்டசபை தொகுதிகளில், பாதயாத்திரை நடக்கவுள்ளது.அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., தயாராகி வருகிறது. இதை பார்த்த காங்கிரசும், களத்தில் இறங்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE