பெங்களூரு : நாட்டின் நகரங்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அபிவிருத்தி செய்யும் நோக்கில், மத்திய அரசு செயல்படுத்திய, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் சேர்க்கப்பட்ட, ஏழு மாவட்டங்களில் பணிகள், இதுவரை முடியாத நிலையில், கர்நாடகாவின் மேலும் நான்கு மாவட்டங்கள் சேர்க்கப்படுகிறது.
நாட்டின் நகரங்களை, படிப்படியாக அபிவிருத்தி செய்யும் வகையில், மத்திய அரசு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை வகுத்துள்ளது. 2016, ஜனவரியில், தாவணகரே, பெலகாவி, ஹூப்பள்ளி - தார்வாட், மங்களூரு, ஷிவமொகா, துமகூரு நகரங்கள், இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டது. பெங்களூரு நகர், 2017 ஜூனில், தேர்ந்தெடுக்கப்பட்டது.இந்நிலையில், கலபுரகி, மைசூரு, விஜயபுரா, பல்லாரி மாவட்டங்களை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் சேர்க்கும்படி, கர்நாடக நகர அபிவிருத்தித்துறை, மத்திய அரசிடம், 2020 ஜூனில், கோரியிருந்தது.ஆனால், கொரோனா ஊரடங்கால், பணிகள் நடக்கவில்லை. எனவே, மீண்டும் மத்திய அரசிடம், கோரிக்கை அனுப்ப, நகர அபிவிருத்தித்துறை, முடிவு செய்துள்ளது.மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து, ஏழு நகரங்கள், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
ஆனால், இந்த நகரங்களில் எதிர்ப்பார்த்த அளவில் பணிகள் வேகமடையவில்லை.பணிகளுக்கு டெண்டர் முடிவு செய்வதில், தாமதமாகிறது. பெரும்பாலான பணிகளுக்கு, பல முறை டெண்டர் கோரப்படுகிறது. சில இடங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு, மாநகராட்சிகளே, முட்டுக் கட்டை போடுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, மாநிலத்தின் ஏழு நகரங்களில், ஐந்து ஆண்டுகள் கடந்தும், 50 சதவீதம் பணிகள் கூட முடிவடையவில்லை.அதிக ஊழல், அரசியல் தலைவர்களின் தலையீடு, மாநகராட்சிகள், அதிகாரிகளின் பொறுப்பின்மை, ஒப்பந்ததாரர்கள் இடையிலான பனிப்போர், தொழிலாளர் பற்றாக்குறை என, வெவ்வேறு காரணங்களால், பணிகள் மந்தமாக நடக்கிறது.
திட்டங்கள் செயல்படும், அனைத்து நகரங்களில், பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு, ஓராண்டுக்கு மேலாகியும் அதை சரி செய்யவில்லை. இதனால், பொது மக்கள், வாகன பயணியர் அதிக பாதிப்படைகின்றனர்.நகர வல்லுனர் ஒருவர் கூறியதாவது:அபிவிருத்தியை காணாத நகரங்களின் மக்களுக்கு, குடிநீர், தரமான சாலை, துாய்மை, சுத்தமான குடிநீர், சாக்கடை, மின்சார வசதி, போக்குவரத்து, சிறந்த தொழில்நுட்பம் உட்பட, அனைத்து அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை செயல்படுத்தியது.இத்திட்டங்களுக்கு தேர்வு செய்யப்படும் நகரங்களுக்கு, நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. ஆனால் நிர்ணயித்தபடி, பணிகள் நடக்காததால், மத்திய அரசின் நோக்கம் நிறைவேறவில்லை.பல நகரங்களில் பணிகள், மிகவும் நிதானமாக நடந்து வருகிறது. திட்டங்களை விரைந்து முடிக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவிட வேண்டும்.ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் தலைவர்களின் தலையீடு இல்லாமல், பார்த்துக் கொள்ள வேண்டும்.நிர்ணயித்த காலக் கெடுவுக்குள், பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தனிக்குழு அமைக்க வேண்டும்.அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும், ஐந்து ஆண்டுகளானாலும், பணிகள் முடியாது.ஏற்கனவே, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு, தேர்வு செய்யப்பட்ட நகரங்களை அபிவிருத்தி செய்யாமல், மேலும் நான்கு மாவட்டங்களை இத்திட்டத்தில் சேர்க்கும்படி, மத்திய அரசிடம் அரசு கோருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE