புதுடில்லி:உச்ச நீதிமன்றத்தில்,சட்டக்கல்லுாரி மாணவர், 'யுவர் ஹானர்' என, அழைத்ததை, தலைமை நீதிபதி எஸ். ஏ.பாப்டே நிராகரித்தார்.
'நாட்டில், குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதித்துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்' என, சட்டக்கல்லுாரி மாணவர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, சட்டக்கல்லுாரி மாணவர் நேரில் ஆஜராகி, நீதிபதிகளை, 'யுவர் ஹானர்' என, அழைத்தார். உடனே தலைமை நீதிபதி, ''அமெரிக்க நீதிமன்றங்களை கருத்தில் வைத்து, யுவர் ஹானர் என, அழைக்கிறீர்கள். ''அங்குள்ள நீதிமன்றங்களில் தான், இதுபோன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு, அதுபோல் அழைக்க வேண்டாம்,'' என்றார்.

அதற்கு மன்னிப்பு கோரிய மாணவர், 'யுவர் லார்ட்ஷிப் என, அழைக்கலாமா' என, கேட்டார். இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, ''எதுவாக இருந்தாலும், பொருத்தமற்ற சொற்களை நீதிமன்றத்தில் பயன்படுத்த வேண்டாம்,'' என்றார்.
பின், மனுதாரர் தன் கோரிக்கை குறித்து கூறினார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், 'இதே கோரிக்கையுடன் ஏற்கனவே வழக்கு விசாரணையில் உள்ளது. 'அதுதொடர்பாக, சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. எனவே வழக்கில் ஆஜராகும் முன், அதுகுறித்த முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்' எனக் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE