மங்களூரு : மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் நலன் கருதி, மூன்று நாட்களுக்கு மட்டும், கொரோனா பரிசோதனை மருத்துவ சான்றிதழ் இல்லாமல், கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்குள் வருவதற்கு விலக்கு அளிக்கப்பட்டது.
மஹாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், தொற்று ஏற்படவில்லை என்று, மருத்துவ பரிசோதனை சான்றிதழ் கொண்டு வந்தால், மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, மாநில சுகாதார துறை உத்தரவிட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளா - கர்நாடக எல்லையான, தட்சிண கன்னடா மாவட்டம், தலப்பாடியில் அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா, கூறியதாவது:கேரளாவிலிருந்து வருவோர், 72 மணி நேரத்துக்கு முன், கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ் கொண்டு வர வேண்டும். திடீரென அறிவித்ததால், பரிசோதனை செய்வதற்கு நேரம் தேவைப்படுகிறது.
இதனால், மாணவர்கள், தினமும் பயணிக்கும் ஊழியர்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. எனவே, 23 முதல், 25 வரை, மூன்று நாட்கள் வரை, விலக்கு அளிக்கப்படும்.அதன் பின், கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வரலாம். இதையடுத்து, தினமும் வந்து, செல்வோர், 14 நாட்களுக்கு, ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இல்லையென்றால், கர்நாடகாவுக்குள் அனுமதிக்க முடியாது. மொபைல் போனில் வரும் குறுந்தகவலை காண்பித்தால் போதுமானது. பொது மக்களின் நன்மை கருதி தான், அரசு சில நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதையும் ஏற்காமல், அப்பகுதியினர் எல்லைப்பகுதியில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சை தடுத்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். உயர் அதிகாரிகள், சமாதானப் பேச்சு நடத்தி, போராட்டத்தை முடித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE