லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ம.க., பேச்சு நடத்தியது. கடைசி நேரத்தில், அ.தி.மு.க.,பக்கம் சாய்ந்து, தி.மு.க., தலைமைக்கு, 'ஷாக்' கொடுத்தது.
அந்த அதிர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க., மறந்து வரும் வேளையில், 'முரசொலி பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ளது பஞ்சமி நிலத்தில்' என்ற பூதத்தை கிளப்பி விட்டு, தி.மு.க.,வின் பழைய புண்ணை பா.ம.க., நோண்டியது. இந்த புதிய வலியில் இருந்து, தி.மு.க., இன்னும் மீளவில்லை.
'வன்னியர்களின் ஒட்டுமொத்த ஒரே பிரதிநிதி என்ற ஹோதாவில் தானே, 'ராமதாஸ் அன் சன்' இந்தளவுக்கு ஆட்டம் காட்டுகின்றனர்; இந்த தேர்தலில் அந்த பலுானை உடைப்போம்' என, அறிவாலய மீட்டிங்கில் போர் பிரகடனம் செய்திருக்கிறார், ஸ்டாலின். அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணி தொடர்ந்தால், வட மாவட்டங்களில், தி.மு.க., கூட்டணிக்கு நஷ்டம் என்பதை அவர் சொல்லிக் காட்டவில்லை.

மாறாக, வன்னியர்கள் மத்தியில், பா.ம.க., ஓட்டு வங்கியை சிதைக்கவும், ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் செயல்பாடு பிடிக்காத அதிருப்தியாளர்களின் ஓட்டுகளை அறுவடை செய்யவும் வியூகம் வகுக்க, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்.
அதன்படி, பா.ம.க.,வில் இருந்து விலகி சென்ற வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மற்றும் பிரிந்து கிடக்கிற வன்னியர் அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து கொம்பு சீவும் பணிகள் தொடங்கி விட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE