அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
கரூர் மாவட்டம், பெரிய மஞ்சுவளி கிராமம், கிரியப்பநாயக்கனூர் என்ற நடுப்பட்டி கிராமத்தில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக கருப்புசாமி, 63, என்பவர் பிராய்லர் கறி கோழிப்பண்ணை அமைத்து, தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில் கோழிப்பண்னையில் தீப்பிடித்தது. இதையறிந்த கருப்புசாமி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டார். ஆனால், தென்னங்கீற்று, தகர சீட்டுகளை கொண்டு கோழிப்பண்ணை அமைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவென பரவியது. இதையடுத்து, அரவக்குறிச்சி தீயணைப்பு துறை வீரர்கள், சம்பவ இடத்துக்கு வந்து, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில், கோழி வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள், பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் நெட்லான் வலைகள், மேற்கூரை, கோழி தீவனங்கள் உள்ளிட்ட, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் எரிந்து சாம்பலாகின. இரு தினங்களுக்கு முன்புதான், கோழிப்பண்ணையில், 4,000க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் வளர்ப்புக்காக கொண்டு வந்து விடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.