அந்தியூர்: அந்தியூர் வனத்தில், தற்கொலை செய்து கொண்ட, வன காப்பாளரின் வாட்ஸ் ஆப் வீடியோ, சமூக வலைதளங்களில், பரவி வருகிறது.
மதுரை, நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் அன்பன். இவர், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனத்துறையில் வாட்ச்சராக பணிபுரிந்தபோது, 2015ல் இறந்தார். வாரிசு அடிப்படையில், எம்.பி.ஏ., பட்டதாரியான அவரின் மகன் பிரபாகரன், 28, என்பவருக்கு, 2016ல் வன காப்பாளர் பணி கிடைத்தது. தாயார் ராஜம்மாளுடன், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, வசித்தபடி பணியாற்றி வந்தார். அந்தியூர் வனத்துறையில் இரண்டாண்டு பணி புரிந்த நிலையில், சென்னம்பட்டி வனச்சரகத்தில், இரண்டாண்டாக வன காப்பாளராக பணிபுரிந்தார். உடல்நிலை சரியின்றி, இரண்டு மாதமாக பணிக்கு செல்லாமல் விடுப்பில் இருந்தார். நேற்று முன்தினம் அந்தியூர் அருகே, கொம்புதூக்கி மாரியம்மன் கோவில் வனப்பகுதியில், பிரபாகரன் சடலமாக கிடந்தார். உடற்கூறு ஆய்வில், விஷம் குடித்து, தற்கொலை செய்து கொண்டது கண்டறியப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன், 4:08 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்றை, நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: எல்லோருக்கும் வணக்கம். வனத்துறையில் போராடி ஜெயிக்க முடியாது. நேர்மையாக வேலை செய்தால் யாரும் மதிப்பதில்லை. இங்கு காசுதான், ஒண்ணும் பண்ண முடியாது. ஜால்ரா போட்டால் தப்பிக்கலாம். சில வன காப்பாளர்கள், வனச்சரக அலுவலர்கள் ஒரே இடத்தில், 10 ஆண்டு வரை பணியாற்றுகிறார்கள். ஆனால் புதிதாக பணியில் சேர்ந்தவர்களை, அடிக்கடி இடமாற்றம் செய்கிறார்கள். வனத்துறை காசுக்கு அடிக்ட், நான் மதுவுக்கு அடிக்ட்... என்னை யாரும் காப்பாற்ற முடியாது. ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்ற என்னை, ஒருவர் காப்பாற்றி விட்டார். இப்போது நானிருக்கும் இடத்தை கண்டறிய முடியாது. நீங்கள் வரும் போது பிணமாக இருப்பேன். இவ்வாறு வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.