மதுரை: மதுரை மாடக்குளத்தில் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்திற்கு பாத்தியப்பட்ட ரூ.ஒரு கோடி மதிப்புள்ள 26 சென்ட் இடம், 59 ஆண்டுகளுக்கு முன் போலி பத்திரம் தயாரித்து 7 பிளாட்களாக பிரித்து விற்று மோசடி செய்தது தற்போது தெரிய வந்துள்ளது.
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகே நம்பிள்ளை ஜீயர் சன்னதி உள்ளது. இது வானமாமலை ஜீயர் மடத்தின் பராமரிப்பில் உள்ளது. 1939ல் ஆண்டாள் என்பவர், நம்பிள்ளை சன்னதியை பராமரித்த திருமாலிருஞ்சோலை ஜீயர் பெயரில் நந்தவனம் தோட்டம் அமைக்க மாடக்குளத்தில் 26 சென்ட் இடத்தை தானமாக கொடுத்தார். நாளடைவில் இந்த இடம் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியது.
இதுகுறித்து மடத்தின் பிரதிநிதி அப்பாத்துரை 85, கூறியதாவது: கூடலழகர் கோயில் அருகேயுள்ள நம்பிள்ளை ஜீயர் சன்னதி இடத்தை அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் ஆக்கிரமித்தார். அதற்காக தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி, கடந்தாண்டு பிப்.,14ல் அந்த இடத்தை மீட்டோம். இதற்கான ஆவணங்களை தேடியபோதுதான் மாடக்குளத்தில் மடத்திற்கு சொந்தமான 26 சென்ட் இருப்பது தெரிந்தது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.ஒரு கோடி.
மாநகராட்சி ஆவணங்களிலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமும் தேடியபோது 1962ல் ஆண்டாள் கையெழுத்திட்டு கொடுத்தது போல் போலி பத்திரம் தயாரித்து இடத்தை சிலர் ஆக்கிரமித்தனர். பின்னர் 1980ல் சிலருக்கு இடத்தை விற்றுள்ளனர். தற்போது மடத்தின் இடத்தை 7 பிளாட்களாக பிரித்துள்ளனர். இதில் 2 பிளாட்களில் வீடு கட்டப்பட்டுள்ளன. ஒரு பிளாட்டில் தொழில் நிறுவனம் உள்ளது. மீதி இடம் காலியாக உள்ளது.ஆவணங்களின் அடிப்படையில் இந்த இடத்தை மீட்க மீண்டும் ஒரு சட்டபோராட்டத்தை இந்த 85 வயதில் மேற்கொள்ள உள்ளேன், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE