ஆமதாபாத்: குஜராத்தில் மோதிராவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் மோதிராவில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம், உலகின் மிகப்பெரிய மைதானம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் பிராமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசுகையில், '2018ம் ஆண்டு நவம்பரில் நான் ஆஸ்திரேலியா சென்றபோது, 90 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் உலகிலேயே மிகப்பெரியது என்பதை அறிந்தேன். மோதிராவின் 1,32,000 இருக்கைகள் கொண்ட அரங்கமாக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமாக மாறியது இந்தியாவுக்கு ஒரு பெருமையான தருணம்,' எனக்கூறினார்.
அமித்ஷா பேசுகையில், 'உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கம் இங்கு கட்டப்பட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம். 1,32,000 இருக்கைகள் கொண்ட இந்த அரங்கம் நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று அழைக்கப்படும்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE