ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடக்கும் பகலிரவு டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்னுக்கு சுருண்டது. சுழலில் அசத்திய அக்சர் படேல் ஆறு விக்கெட் சாய்த்தார்.
![]()
|
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட், ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மைதானத்தில் துவங்கியது.
'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது சிராஜ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு பும்ரா, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப் பட்டனர். இங்கிலாந்து அணியில் லாரன்ஸ், ஸ்டோன், மொயீன் அலிக்குப் பதில் பேர்ஸ்டோவ், ஆர்ச்சர், ஆண்டர்சன் இடம் பெற்றனர்.
அக்சர் அபாரம்
இங்கிலாந்து அணிக்கு சிப்லே, கிராலே ஜோடி துவக்கம் கொடுத்தது. இஷாந்த் வீசிய போட்டியின் 3வது ஓவரில் சிப்லே 'டக்' அவுட்டானார். கிராலே வேகமாக ரன்கள் சேர்த்தார். மறுபக்கம் அக்சர் படேலை அழைத்தார் கோஹ்லி. இவரது முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 'டக்' அவுட்டானார்.
கிராலே அரைசதம்
கிராலே, ஜோ ரூட் இணைந்தனர். பும்ரா, இஷாந்த் பந்துகளில் பவுண்டரிகளாக விளாசிய கிராலே, அக்சர் பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். 68 வது பந்தில் கிராலே அரைசதம் எட்ட, இங்கிலாந்து ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் அஷ்வின் விரித்த வலையில் ஜோ ரூட் (17) சிக்கினார்.
அஷ்வின் கலக்கல்
மறுபக்கம் இந்திய பவுலர்களுக்கு தொல்லை தந்த கிராலேயை (53), அக்சர் படேல் வெளியேற்றினார். அடுத்து வந்த போப்பை (1), அஷ்வின் அவுட்டாக்க, அபாயகரமான ஸ்டோக்சை (6), அக்சர் படேல் 'பெவிலியன்' அனுப்பி வைத்தார். அடுத்து வந்த ஆர்ச்சர் (11), லீச் (3) நிலைக்கவில்லை.
ஸ்டூவர்ட் பிராட்டை (3) அவுட்டாக்கிய அக்சர் படேல், டெஸ்ட் அரங்கில் இரண்டாவது முறையாக ஐந்து விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து அசத்திய இவர், போக்சையும் (12) போல்டாக்கினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்னுக்கு சுருண்டது. இந்தியாவின் அக்சர் படேல் 6, அஷ்வின் 3, இஷாந்த் 1 விக்கெட் சாய்த்தனர்.
![]()
|
ரோகித் அரைசதம்
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி துவக்கம் கொடுத்தது. இரு முறை தப்பிப்பிழைத்த சுப்மன் கில், 27 வது பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கினார். இவர் 11 ரன்னுக்கு அவுட்டானார். புஜாரா வந்த வேகத்தில் 4வது பந்தில் 'டக்' அவுட்டானார். டெஸ்ட் அரங்கில் 9வது முறையாக (83 டெஸ்டில்) புஜாரா, இப்படி அவுட்டானார். ரோகித் சர்மா டெஸ்டில் 12வது அரைசதம் எட்டினார். கோஹ்லி (27) போல்டானார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து 13 ரன்கள் பின்தங்கி இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE