'தி.மு.க., கூட்டணியில், 40 தொகுதிகளுக்கு குறைவாக வாங்கக்கூடாது' என, மேலிட பார்வையாளர்களிடம், தமிழக காங்., முன்னணி தலைவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், தி.மு.க., - காங்., இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு, சென்னை அறிவாலயத்தில், இன்று துவங்கியது.
கூடுதல் தொகுதி
தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு, 20 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' ஒதுக்க, தி.மு.க., மேலிடம் விரும்புகிறது. ஆனால், கூடுதல் தொகுதிகளை பெற வேண்டும் என, தமிழக காங்., நினைக்கிறது.
இதுதொடர்பாக விவாதிக்க, சென்னை சத்தியமூர்த்தி பவனில், நேற்று இரவு, தமிழக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர்கள், செயல் தலைவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உட்பட, 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற காங்., நிர்வாகிகள் அனைவரும், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களின் தொகுதியையும் சேர்த்து, 40 தொகுதிகளுக்கு குறையாமல் பெற வேண்டும் என, வலியுறுத்தினர்.
இதையடுத்து, இன்று காலை அறிவாலயத்தில், தொகுதி பங்கீடு குறித்து, தி.மு.க., - காங்., இடையே பேச்சு நடைபெற்றது.
இதில், தி.மு.க., சார்பில் துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும், காங்., சார்பில் உம்மன்சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE