புதுடில்லி : ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் கடைசி வாய்ப்பை பயன்படுத்தியோருக்கு மறுவாய்ப்பு அளிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுதுவதற்கு, சில வரம்புகள் உள்ளன. பொதுப் பிரிவினர், 32 வயது வரை, ஆறு முறை தேர்வு எழுத வாய்ப்பு தரப்படுகிறது. ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினர், 35 வயது வரை, ஒன்பது முறை தேர்வு எழுதலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 37 வயது வரை, எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், கடந்தாண்டுக்கான தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால், அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.இந்நிலையில், 'வைரஸ் பரவல் இருந்ததால், தேர்வுக்கு சரியாக தயாராக முடியவில்லை. அதனால், தேர்வு எழுத கடைசி வாய்ப்பு முடிந்தவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை, 2021 தேர்வில் அளிக்க வேண்டும்' என, சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.'ஒரு முறை வாய்ப்பாக, தேர்வு எழுதுவதற்கான வயது உச்ச வரம்பை, ஒரு ஆண்டு உயர்த்த முடியுமா' என, விசாரணையின் போது, அமர்வு கேள்வி எழுப்பியிருந்தது. 'கொள்கை அளவில், எந்த சலுகையும் அளிக்க இயலாது' என, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி, தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை தாண்டாத, அதே நேரத்தில் தேர்வு எழுதுவதற்கான கடைசி வாய்ப்பை பயன்படுத்தியோருக்கு மட்டும், ஒரு வாய்ப்பு அளிக்க, மத்திய அரசு முன் வந்தது.இந்த நிலையில், 'எந்தப் பிரிவினருக்கும், தேர்வு எழுத மறுவாய்ப்பு அளிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE