உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பத்து லட்சம் கோடி ரூபாய் முதலீடு; 20 லட்சம் வேலை வாய்ப்பு என, மேடையில் தம்பட்டம் எல்லாம் வெகு ஜோராக அடிக்கும், இ.பி.எஸ்., முதல்வரா இல்லை மாயஜாலங்கள் செய்யும் மந்திரவாதியா?' என்று, நையாண்டி செய்கிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.

இவர் சொல்கிறார், 'நாங்கள், ஆட்சிக்கு வந்த, 100 நாட்களில், தமிழக மக்களின் குறை அத்தனையும் தீர்ப்பேன்' என்று. இவ்வளவு ஜால வித்தை காட்டும் ஸ்டாலின், அரசியல்வாதியா, இல்லை மந்திரவாதியா என, தமிழர்கள் கேள்வி கேட்க மாட்டாரா என்ன? 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாணவரின் கல்விக்கடனை ரத்து செய்வோம்; மகளிர் சுயநிதிக் குழுவின் கடனை ரத்து செய்வோம்' என, புரூடாக்களை அள்ளி விடும் ஸ்டாலின் தான், தமிழக மக்களுக்கு மந்திரவாதியாக தெரிகிறார். தி.மு.க., ஆட்சியில் நடந்த கொள்ளையை, அராஜகத்தை, மக்கள் இன்னும் மறக்காததால் தானே, 10 ஆண்டுகளாக, அக்கட்சி ஆட்சிக்கு வர முடியாமல் போனது.

தன்னை, பரம யோக்கியவனாக காட்டிக் கொள்ள ஸ்டாலின் போடும் நாடகங்கள் எல்லாம்எடுபடாது. திருக்குவளையில், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த கருணாநிதி, சாகும் போது பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபராகத் தானே இருந்தார்? அவரின் வாரிசுகள், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துடன் ஆடம்பரமாக வாழ்கின்றனரே. இவ்வளவு வசதி வாய்ப்புகளுடன் வாழ, கருணாநிதி, மந்திரக் கோல் எதுவும் வைத்திருந்தாரா என்ன? இதை எல்லாம், ஸ்டாலின் கொஞ்சம் யோசித்துப் பேச வேண்டாமா?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE