மதுரை : இந்தியாவில், 1.56 லட்சம் பேரின் உயிர் குடித்த கொரோனா ஆட்டம், பெருமளவு குறைந்திருக்கிறது. தமிழகத்தில் இதுவரை, 8.49 லட்சம் பேரை வைரஸ் தாக்கியுள்ளது.
8.32 லட்சம் பேர் மீண்டு விட்டனர். 4,074 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12, ஆயிரத்து 472 பேரின் உயிரை, நம் மாநிலம் பறி கொடுத்துள்ளது.

2வது அலை பீதி
தமிழகத்தில் தினசரி, 50 ஆயிரம் பேர் சோதிக்கப்படுகின்றனர். இதில் உறுதியாகும் பாதிப்பு, 500க்கும் குறைவு தான். பாதிப்பு விகிதம், 0.89 சதவீதமாக உள்ளது. தற்போதைய சூழலில், தமிழகம் பாதுகாப்பான நிலையில் இருப்பதை, இப்புள்ளி விபரம் காட்டுகிறது. ஆனால், இன்னும்
எத்தனை நாளுக்கு என்பது தான் தெரியவில்லை. ஏனெனில் மஹாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களில் மீண்டும் பாதிப்பு எகிற துவங்கியுள்ளது.
விழிக்குமா தமிழகம்
பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டதால், தமிழக அரசும் கொரோனா விஷயத்தில் அசந்து விட்டது. வரவிருக்கும் சட்டசபை தேர்தல் பணிகள் தான் மும்முரமாக நடக்கின்றன. இரண்டாவது அலை வீசும் ஐந்து மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு தாராள போக்குவரத்து நடக்கிறது. விமானங்கள், ரயில்கள், பஸ்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்குகின்றன. குறிப்பாக, மஹாராஷ்டிரா, கேரளாவில் இருந்து கொத்து, கொத்தாக தமிழகத்திற்கு மக்கள் வருகின்றனர். இவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கூட கிடையாது.கேரளாவை போல, அசட்டையாக இருந்து, தமிழகமும் மெத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. இப்போதே விழித்து, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
* தற்போது, இரண்டாவது அலையில் சிக்கி உள்ள ஐந்து மாநிலங்களில் திடீரென கொரோனா மீண்டும் உயர்வதால், இம்மாநிலங்களை உடனடியாக, 'ஹாட்ஸ்பாட்' பகுதிகளாக அறிவிக்க, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
* சட்டசபை தேர்தல் சமயத்தில், இரண்டாம் அலை தாக்கிவிடக் கூடாது. எனவே வைரஸ்பரவல் அதிகமுள்ள கேரளா, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களை, 'ஹாட் ஸ்பாட்' பட்டியலில் சேர்த்து, உடனடியாக முன்னெச்சரிக்கை பணிகளை துவங்க வேண்டும்.
* இம்மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர், 'கொரோனா தொற்று இல்லை' என்ற சான்று வைத்திருக்க வேண்டும். விமான நிலையங்கள் வந்த பிறகும் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும்.
* தொற்று இருப்பது உறுதியானால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை முழுமையாக தேடி பிடித்து சோதிக்க வேண்டும். இம்மாநிலங்களில் இருந்து ரயில், பஸ் மூலமாக, தமிழகம் வருவோருக்கும் இக்கட்டுப்பாடுகள் அவசியம்.
* கேரளாவில் கொரோனா வெறியாட்டம் நடத்தி வரும் இவ்வேளையில், மீண்டும் எல்லைகளை மூடுவதே சரியான நடவடிக்கையாக இருக்கும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாம். கர்நாடக எல்லையிலும் கண்காணிப்பு மேற்கொள்வது அவசியம்
முதல்வர் கவனிப்பாரா
பொதுக்கூட்டம், ஊர்வலம், பிரசார கூட்டம் என மாநிலமே தேர்தல் கோலம் பூண்டுள்ளது.இச்சூழலில் இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ள மாநிலங்களில் இருந்து, சர்வசாதாரணமாக போக்குவரத்தை அனுமதித்தால், கொரோனாவின் திடீர் தாண்டவம் தமிழகத்தையும்தாக்கும். முதல்வர் பழனிசாமி அவசர அவசியமாக, இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கேரள எல்லையில் வைரஸ் விளையாட்டு!
கொரோனா பீதி உச்சத்தில் இருந்த காலத்தில் தமிழக - கேரள எல்லைகள் மூடப்பட்டன. இப்போது தாராளமான போக்குவரத்து நடக்கிறது. கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு இல்லை. தேனி மாவட்டம், குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு எல்லைகளை மட்டும் தினசரி 20 ஆயிரம் பேர் கடக்கின்றனர்.
சுற்றுலா தலங்களை கேரள அரசு திறந்துள்ளது. எல்லைகளில் இறங்கி, சில அடி நடந்து அடுத்து மாநில பஸ்சில் ஏறி பயணத்தை தொடரலாம். இப்படியாக எல்லையில் கொரோனா வைரஸ் உள்ளே, வெளியே ஆட்டம் ஆடுகிறது. இதில் தப்பிக்க, மீண்டும் எல்லைகளை மூடுவது நல்லது.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மட்டும் அனுமதித்து, டிரைவர், கிளீனர்கள்களுக்கு தினமும் காய்ச்சல், இருமல் பரிசோதனை மேற்கொள்ளலாம். சீரான இடைவெளியில் ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனையும் அவசியம்.
கொடைக்கானலில் 'கேரள வைரஸ்'
தமிழக அரசு தற்போது கொடைக்கானலை திறந்துள்ளது. கர்நாடக, கேரள பயணியர் தான்அதிகம் வருகின்றனர். பெரும்பாலான வாகனங்களில் கேரள பதிவு எண் தென்படுகிறது. எவ்வித பரிசோதனையும் இன்றி கொடைக்கானலை கொண்டாடுகின்றனர். சனி, ஞாயிறுகளில் கூட்டம் அலைமோதுகிறது. நம் அரசின் மெத்தனம் தொடர்ந்தால் கேரள கொரோனா கொடைக்கானலில் குடிபுகுந்து விடும்.

இந்திய விமான நிலையங்களில் என்ன நடக்கிறது
கொரோனா தாண்டவம் குறைந்த பின் எல்லா நாட்டு விமானங்களையும் இந்திய அரசு அனுமதித்தது. திடீரென பிரிட்டன் வைரஸ் மிரட்டத் துவங்கியதால் ஐரோப்பிய விமானங்களுக்குமட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விமான நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய புதிய நடைமுறைகளை பிப். 17ல் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: பிரிட்டன், இதர ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், பிரேசில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து வருவோருக்கு கட்டாயம் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை - ஆர்.டி.பி.சி.ஆர். - மேற்கொள்ள வேண்டும்.
இதில் பிரேசில், தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன் பயணியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும். இவர்களின் சளி மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி தாக்கியது மரபணு மாறிய வைரஸா என்பதை ஆராய வேண்டும். தொற்று இல்லாதோருக்கு 14 நாட்கள் வீட்டுத்தனிமை கட்டாயம். இடையில் ஏழாவது நாள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இம்மூன்று நாடுகள் தவிர ஐரோப்பிய மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருவோருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அவசியம். தொற்று இருந்தால் சிகிச்சையளிக்க வேண்டும். இல்லையெனில் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்க வேண்டும்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பிற நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை. இவர்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த வேண்டும். இடைப்பட்ட நாட்களில் அறிகுறி தென்பட்டால் பரிசோதனைக்கு
வரவழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மாற்றம் கொண்டு வருவது
அவசியம். அனைத்து நாடுகளில் இருந்து வருவோருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை
மேற்கொள்வது தான் சரியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
விழிக்கும் மாநிலங்கள்... முழிக்கும் தமிழகம்...
தீவிரமடையும் கொரோனா பரவலை தடுக்க மஹாராஷ்டிரா, கேரளம் போன்ற மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. மஹாராஷ்டிராவில் அரசியல், ஆன்மிக, சமூக அமைப்பு கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு பிறப்பிக்கலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், மார்ச் 1 வரை குறைவான இருக்கைகளுடனே திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு பட்டியலில் இருக்கும் மத்திய பிரதேசமோ, மஹாராஷ்டிராவில் இருந்து தங்கள் எல்லைக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனையைகட்டாயமாக்கியுள்ளது.
டில்லி:
மஹாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டில்லிக்குள் நுழைய பிப்., 26 முதல் மார்ச் 15 வரை, 'கொரோனா இல்லை' என்ற சான்று
வைத்திருக்க வேண்டும்.
உத்தரகண்ட்
கேரளா, சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இருந்து, உத்தரகண்ட் மாநிலத்திற்குள் யார் நுழைந்தாலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
குஜராத்
இங்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை எல்லையில் தடுத்து நிறுத்தி, அதில் இருக்கும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா
கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வருவோர் அனைவருக்கும், 72 மணி நேரத்திற்குள் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்திருக்க வேண்டும் என சுகாதாரத் துறைக்கு கர்நாடக மாநிலம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான்
ஜோத்பூர் நகரில் மார்ச் 21 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திருமணம் போன்ற விழாக்களில், 100 பேர் மட்டுமே கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம்
நம்ம மாநிலம் மட்டும் தான் கொரோனா தாண்டவமாடும் கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் அனைவரையும், எவ்வித பரிசோதனையும் இன்றி பெருந்தன்மையுடன் அனுமதிக்கிறது. இந்த பெருந்தன்மை நீடித்தால், இரண்டாவது முறையாக, தமிழகத்தில் கொரோனா வெற்றி நடை போடும்.

தமிழகம் அனுமதிக்கும் 'ஹாட்ஸ்பாட்' விமானங்கள்
*மஹாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் இருந்து தான், எக்கச்சக்கமான விமானங்கள் தமிழகத்திற்குள் நுழைகின்றன.
*மும்பையில் இருந்து மட்டும் தினமும், 12 முதல் 14 நேரடி விமானங்கள் சென்னை வருகின்றன. மும்பையில் துவங்கி டில்லி, கோவா, பெங்களூரு போன்ற இடங்களை கடந்து, சென்னை வரும் விமானங்கள் எண்ணிக்கை மட்டும் 60ஐ தொடும்.
*கேரள மாநிலம், கொச்சியில் இருந்து நான்கு, திருவனந்தபுரத்தில் இருந்து இரண்டு நேரடி விமானங்கள் சென்னைக்கு பறக்கின்றன. கொச்சி, திருவனந்தபுரத்தில் இருந்து பிற பகுதிகள் வழியாக, 18 விமானங்கள் சென்னை வருகின்றன.
*எஞ்சிய மூன்று, 'ஹாட் ஸ்பாட்' மாநிலங்களில் இருந்து வரும் விமானங்கள், சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு வரும் விமானங்களை கணக்கெடுத்தால், இந்த எண்ணிக்கை இன்னும் உயரும்.
* எப்படிப் பார்த்தாலும் தினசரி, 100 'ஹாட் ஸ்பாட்' விமானங்களாவது நம் மாநிலத்திற்குள் வந்து செல்கின்றன. இதன் மூலம், 7,000 முதல் 10 ஆயிரம் பேர் வரை வருகின்றனர். இவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தா விட்டால், இரண்டாவது அலையிடம் சிக்குவதை தடுக்க
முடியாது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE