சென்னை: 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ - மாணவிகளும் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், கொரோனா பரவலால், புதிய கல்வி ஆண்டு துவங்கியும், ஏழு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அதன்பின் நிலைமை சீரானதால், ஜனவரி, 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும், பிப்.,8 முதல், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கின. வாரத்தில் ஆறு நாட்கள் வீதம், பாடங்களை நடத்தி முடிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே, 3ல் துவங்கும் என, அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.

10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்காததால், தேர்வு நடத்தப்படுமா, ரத்தாகுமா என, மாணவர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில், இன்று (பிப்.,25) சட்டசபையில் பேசிய முதல்வர் பழனிசாமி, விதி எண் 110ன் கீழ் இது குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதில், பொதுத்தேர்வு இன்றி 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்தாண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு வயது அதிகரிப்பு:
அதேபோல், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதையும் அதிகரித்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில், அதனை 60 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு மே 31ம் தேதிக்குள் ஓய்வு பெறும் அனைவருக்கும் புதிய ஓய்வு வயதுவரம்பு பொருந்தும் என்றும் அறிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE