ஆமதாபாத்: டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட், ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்கள் எடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து 13 ரன்கள் பின்தங்கி இருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 145 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா 33 ரன்கள் மட்டும் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்துக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. அக்சர் படேல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் கிராலே (0) போல்டானார். மூன்றாவது பந்தில் பேர்ஸ்டோவ் (0) போல்டாக, ரன் கணக்கை துவக்கும் முன் 2 விக்கெட்டுகளை இழந்தது. சிப்லேயும் (7), அக்சர் 'சுழலில்' சிக்கினார்.
![]()
|
அஷ்வின் ‛400'
வழக்கம் போல ஸ்டோக்சை (25), வெளியேற்றிய அஷ்வின், ஆர்ச்சரை 'டக்' அவுட்டாக்கினார். இதையடுத்து டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். தவிர இலங்கையின் முரளிதரனுக்கு (72 டெஸ்ட்) அடுத்து குறைந்த போட்டிகளில் இந்த இலக்கை எட்டிய இரண்டாவது வீரர் ஆனார் அஷ்வின். இவர் 77 டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டினார். இந்தியாவின் கும்ளே (619), கபில் தேவ் (434), ஹர்பஜனுக்கு (417) அடுத்து, 400 விக்கெட் சாய்த்த இந்திய பவுலர் ஆனார் அஷ்வின்.
தற்போது இங்கிலாந்து அணி, 76 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE