வாஷிங்டன்: பேஸ்புக் நிறுவனம் கடந்த வியாழன் அன்று மியான்மர் நாட்டு ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கமான டாட்மெடா-வை நிரந்தரமாக நீக்கியது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய இரண்டு செயல்களிலும் மியான்மர் ராணுவத்தின் பக்கம் விதிமீறல் காரணமாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் தேதிமுதல் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டு அங்கு அந்நாட்டு ராணுவம் மக்களை கட்டுப்படுத்தி வருகிறது. முன்னதாக நடந்துமுடிந்த ஜனநாயக தேர்தல் சரியாக நடத்தப்படவில்லை என்று ராணுவம் குற்றம்சாட்டிய நிலையில் இந்த அவசர நிலையை கொண்டு வந்துள்ளது.
இது அந்நாட்டு ஜனநாயக ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்தது. இதன் விளைவாக யாங்கன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த துவங்கினர். ஜனநாயக ஆதரவாளர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முக்கிய நகரங்களில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டது. மியான்மர் குடிமக்கள் போராட்டம் குறித்த புகைப்படங்களையும் தாங்கள் படும் அவலங்களையும் இணையம் வாயிலாக வெளியே தெரிவிக்க முடியாமல் தடுமாறினர். இந்நிலையில் உலக நாடுகள் பல, மியான்மர் ராணுவம் நடத்தும் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இரண்டு ஜனநாயக ஆதரவாளர்கள் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதை அடுத்து பேஸ்புக் நிறுவனம் மியான்மர் நாட்டு ராணுவத்தின் அதிகாரபூர்வ பக்கமான டாட்மெடா-வை நிரந்தரமாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் இருந்து முடக்கியுள்ளது. மனித உரிமை மீறலில் ஈடுபட்டுவரும் ராணுவத்தினருக்கு ஆசிய நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் பேஸ்புக்கின் இந்த செயல் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE