சென்னை : தமிழகத்தில், ஒன்பது, 10, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, ஆதரவுக்கரம் நீட்டியுள்ள முதல்வர், 'இந்தாண்டும் தேர்வு கிடையாது' என்ற, தாராள அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் வெற்றிக்காக, துாண்டில் போடும் விதமாக, நடப்பு கல்வியாண்டிலும் அனைவரும் தேர்ச்சி என, அள்ளி வீசியுள்ளார்.
தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச்சில் பள்ளிகள் மூடப்பட்டன. ஊரடங்கு காரணமாக, பொதுத் தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், 10ம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, தமிழக அரசு அறிவித்தது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது, கொரோனா பாதிப்புகள் குறைந்ததால், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.மற்ற வகுப்புகளுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதிரடி அறிவிப்பு
இந்தாண்டு, ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படுமா; தேர்வு பட்டியல் எப்போது வெளியாகும் என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், தமிழக அரசு, ஒன்பது, 10, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, 'ஆல் பாஸ்' என்ற அதிரடி அறிவிப்பை, நேற்று வெளியிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை, 'ஹாட்ரிக்' வெற்றி பெற வைத்து, மூன்றாவது முறையாக, ஆட்சியை கைப்பற்ற வேண்டும்; மீண்டும் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்பது, முதல்வர் இ.பி.எஸ்.,சின் இலக்கு. அந்த இலக்கை அடைய, மக்களை கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்தல் வெற்றிக்காக, மக்களுக்கு துாண்டில் போட்டு வருகிறார்.
'ஆல் பாஸ்' தொடர்பாக, நேற்று சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில், 2020 மார்ச், 25 முதல், ஊரடங்கு உத்தரவு, பல்வேறு தளர்வுகளுடன், அமலில் இருந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, 2020 - 21ம் கல்வியாண்டில், பள்ளிகள் மூடப்பட்டன.
கொரோனா நோய் தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஜன., 19 முதல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, 'வைட்டமின்' மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த கல்வியாண்டு முழுதும், கல்வி தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே, அரசு பள்ளி மாணவர்கள் பாடங்கள் படித்தனர்.
தொலைக்காட்சி, இணையதளம் வாயிலாக, கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் வைத்து, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட, அசாதாரண சூழல், பெற்றோர் கோரிக்கை, கல்வியாளர்கள் கருத்து போன்றவை பரிசீலிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், 2020 - 21ம் கல்வியாண்டில், ஒன்பது, பத்து மற்றும், பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் அனைவரும், முழு ஆண்டு தேர்வு மற்றும் பொதுத் தேர்வு எதுவும் இல்லாமல், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள், அரசால் விரிவாக வெளியிடப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.
சி.பி.எஸ்.இ.,க்கு பொருந்துமா?
தொற்று பாதித்ததால், 2019- - 20ம் ஆண்டுக்கான, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, ஒன்பது முதல் பிளஸ் 1 வரை, பொதுத்தேர்வு மற்றும் முழு ஆண்டு தேர்வு, இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு, மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கு மட்டும் தான் பொருந்துமா அல்லது மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்துமா என, பெற்றோர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
அரசு பணியாளர் ஓய்வு 60 வயதாக அதிகரிப்பு!
முதல்வர் வெளியிட்ட, மற்றொரு அறிவிப்பு: தமிழக அரசு பணியாளர்கள், ஒய்வு பெறும் வயது, 58ல் இருந்து, 59 ஆக, கடந்த ஆண்டு மே மாதம் உயர்த்தப்பட்டது. தற்போதுள்ள, 59 வயது, 60 வயதாக உயர்த்தப்படும். இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட, அனைத்து பொதுத் துறை நிறுவன பணியாளர்களுக்கும் பொருந்தும். தற்போது, அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும், வரும், மே, 31ல் ஓய்வுபெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.
பள்ளிகள் இயங்கும்- பாடங்கள் தொடரும்
பள்ளி கல்வி இயக்குர் கண்ணப்பன் கூறியதாவது, ஆண்டு இறுதி தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு தடை விதிக்கவில்லை. மேல் வகுப்புகளுக்கு செல்லும் போது இந்த ஆண்டுக்கான பாடங்களை தெரிந்திருக்க வேண்டும். எனவே பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். மாணவர்களும் வர வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE