'இதைச் செய்தால் தேர்தலில் நிச்சய வெற்றி; அடுத்தடுத்து பதவிகள் கிடைக்கும்' என, யார் சொன்னாலும், எதைச் சொன்னாலும், அதை செய்ய அரசியல்வாதிகள் தயாராக இருக்கின்றனர்.
அந்த வகையில், கன்னியாகுமரி சாமித்தோப்பு அய்யா வழி வைகுண்டரை தரிசிக்க அரசியல்வாதிகள் படையெடுத்து வருகின்றனர். 'இங்கு வந்து தரிசித்து செல்பவர்களுக்கு, உச்சபட்சமாக பிரதமர் பதவி கூட கிடைத்திருக்கிறது' என, வைகுண்டரை வழிபட செல்லும் பிரபலங்களிடம் பட்டியல் போட்டு பேசுகின்றனர்.
கடந்த, 1988ல், சாமித்தோப்புக்கு வந்து, அய்யா வழி வைகுண்டரை வழிபட்டு சென்றார், சந்திரசேகர். சில மாதங்களில் பிரதமராகி விட்டார். அதேபோல, 1995ல் வழிபட்டு சென்ற தேவகவுடா, யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். அடுத்து, 2001, 2010ல் சாமித்தோப்புக்கு வந்து சென்றார், ஜெயலலிதா. அடுத்தடுத்து நடந்த சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, முதல்வரானார்.
கன்னியாகுமரி தொகுதி எம்.பி.,யாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், 2014க்கு முன், தொடர்ச்சியாக அய்யா வழி வைகுண்டரை தரிசனம் செய்தார். விளைவு, மத்திய அமைச்சர் பதவி. ஐந்தாண்டு காலம் தமிழகம் சார்பில் ஒரே மத்திய அமைச்சர். தி.மு.க.,வில், திருச்செந்துார் தொகுதி எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்துாரில் அய்யாவழி வைகுண்டருக்கு அமைக்கப்பட்டிருக்கும் பதிக்கு தொடர்ந்து சென்று வழிபட்டு வருகிறார்.
இப்படி, அய்யாவழி வைகுண்டரை வழிபடுகிறவர்களுக்கு எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்கிறது என்ற, 'சென்டிமென்ட்' பரவ, தற்போது அரசியல் பிரபலங்கள் சாமித்தோப்பு நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர். வரும், 4ல், வைகுண்டரின் அவதாரத் திருநாள் வருகிறது. அன்றைய தினம், சாமித்தோப்புக்கு செல்கிறார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். அவரோடு சில அமைச்சர்களும், அ.தி.மு.க., பிரமுகர்களும் செல்கின்றனர்.இதே போன்ற எதிர்பார்ப்போடு தான், தமிழக பா.ஜ., தலைவர் முருகனும் சமீபத்தில் சாமித்தோப்புக்கு வந்து சென்றிருக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE