புதுடில்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே.வங்கத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும், தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது சுனில் அரோரா கூறியதாவது: கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு வரும் ஆண்டாக 2021 உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்னைகளை சமாளித்து வருகிறோம். தேர்தலை சுமூகமாக நடத்துவதில், டாக்டர்கள், நர்சுகள், அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த 2020ம் ஆண்டில் பீஹார் சட்டசபை தேர்தலை நடத்தி உள்ளோம். கொரோனா காலம் கருதி முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடத்துகிறோம்
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் கருதி வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 18.68 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளவர். ஓட்டுச்சாவடிகளில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால், தபால் ஓட்டு போடலாம்.
ஓட்டுப்பதிவு மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம் என தேர்தல் ஆணையம் கருதுகிறது. வேட்புமனு தாக்கலின் போது 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வீடு வீடாக 5 பேர் மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கலுக்கு வர அதிகபட்சம் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். 5 வாகனங்களுக்கு அதிகமாக சென்று பிரசாரம் செய்ய அனுமதி இல்லை
5 மாநிலங்களுக்கும் மத்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மத பண்டிகைகள், விழாக்கள், சிபிஎஸ்இ தேர்வு கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு நேரத்தை நீட்டிப்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 88,936 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். இது கடந்த தேர்தலை காட்டிலும் 34.73 சதவீதம் அதிகம். கடந்த தேர்தல்களில் வேலூர், ஆர்கே நகரில் அதிக பணப்பட்டுவாடா இருந்தது. தமிழகத்தில் அதிக தேர்தல் செலவு நடக்கும் என்பதால் முக்கியமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கு தேர்தல் செலவின பார்வையாளர் மதுமஹான் மற்றும் பாலகிருஷ்ணா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சிறப்பு அதிகாரியாக அலோக் வர்தன் நியமிக்கப்பட்டு உள்ளார். ஐபிஎஸ் பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மே.வங்கத்திற்கு மட்டும் சிறப்பு அதிகாரிகளாக 2 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

5 மாநிலங்களில் 2.7 லட்சம் ஓட்டுப்பதிவு மையங்கள் உள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டும். ஓட்டு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இருக்கும். ஓட்டுச்சாவடிகள் தரை தளத்தில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். அங்கு முககவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி தொடர்பாக நாளிதழ், ஊடகங்களில் காட்சி விளம்பரங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். புதுச்சேரி தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஒரு தொகுதிக்கு ரூ.30.80 லட்சம் வரை மட்டுமே தேர்தல் செலவு செய்ய வேண்டும். புதுச்சேரியில் அதிகமாக 22 லட்சம் ரூபாய் செலவு செய்யலாம். சி-விஜில் ஆப் மூலம் மக்கள் ஆதாரத்துடன் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து புகார் அளிக்கலாம். தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை. வேட்பாளர் அல்லது வாக்காளராக இருந்தால் வாக்குச்சாவடிக்கு அமைச்சர்கள் செல்லலாம். சாதி, மத, மொழி, இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரை செய்யக்கூடாது. வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக் கூடாது. மாற்று கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள், ஆட்சியை விமர்சிக்கலாம். மாற்று கட்சியின் தனி நபர்களின் சொந்த வாழ்க்கையை விமர்சிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்
தேர்தல் தேதி விபரம்:
அசாமில் 3 கட்ட தேர்தல்
அசாம் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கும். முதல் கட்டம் - மார்ச் 22
2ம் கட்டம் - ஏப்.,1
3ம் கட்டம்- ஏப்.,6
ஓட்டு எண்ணிக்கை -மே 2
கேரளா
கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்., 6 ல் தேர்தல் நடக்கும்.
மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.
தமிழகம்
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,6ல் தேர்தல் நடக்கும்.
ஓட்டு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்கும்
புதுச்சேரி
புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்., 6ல் நடக்கும். மே 2 ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.
மே.வங்கம்
மே.வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
முதல் கட்டம் - மார்ச் 27
2ம் கட்டம் -ஏப்.,1
3ம் கட்டம்- ஏப்.,6
4ம் கட்டம்-ஏப்.,10
5ம் கட்டம்-ஏப்.,17
6ம் கட்டம்-ஏப்.,22
7 ம் கட்டம்- ஏப்.,26
8 ம் கட்டம்-ஏப்.,29
ஓட்டு எண்ணிக்கை -மே 2
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE