தஞ்சாவூர்:கும்பகோணத்தில், மாசிமக திருவிழாவை முன்னிட்டு, மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும், ஆண்டுதோறும், மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று, மாசிமக விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மாசிமக விழா, கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று காலை, ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட, 12 சிவாலயங்களில் இருந்து, சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன், ரிஷப வாகனங்களில், மகாமக குளத்தின் நான்கு கரைகளில் எழுந்தருளினர்.அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு மஞ்சள், பால், விபூதி உள்ளிட்ட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அஸ்திர தேவர்கள், மகாமக குளத்தில் தீர்த்தவாரி கண்டருளினர்.
தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.'கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மகாமக குளத்தில், பக்தர்கள் நீராட அனுமதி இல்லை' என, நேற்று முன்தினம் போலீசார் தெரிவித்தனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று காலை முதல் பக்தர்கள் நீராட அனுமதி அளித்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE