திண்டிவனம்:பா.ஜ.,வில் சேர்ந்துள்ள ரவுடிகள் பட்டியலை கூறி, பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனுாரில் நடந்த, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' கூட்டத்தில், அவர் பேசியதாவது:மோடி, தான் பிரதமர் என்பதை மறந்து, தரமற்ற முறையில், தி.மு.க.,வை விமர்சித்து பேசியதை, வன்மையாக கண்டிக்கிறேன்.மோடி சொல்கிறார், தி.மு.க., ஆட்சியில் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டதாகவும், அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழக பெண்கள் தான் என்று.என்ன ஆதாரத்தை வைத்து மோடி பேசுகிறார்?
அராஜகத்தை பற்றி யார் பேசுவது. 2002ம் ஆண்டில், குஜராத்தில் நடந்த பச்சை படுகொலையை இந்திய நாடே இன்னும் மறக்கவில்லை.குஜராத்தை விட்டு டில்லிக்கு வந்துவிட்டால் மறந்து விடுவரா? அந்த பாவங்கள் துடைக்கப்பட்டு விடுமா?கொள்ளையடிப்பதே தொழிலாக கொண்டுள்ள டெண்டர் பழனிசாமியையும், பாதபூஜை பன்னீர்செல்வத்தையும் மிரட்டி, பணிய வைத்து, அப்பாவி அ.தி.மு.க., ஓட்டுகளை திருடிப் போக வந்துள்ள மோடிக்கு, தி.மு.க.,வைப் பற்றி பேச உரிமையில்லை.
நாட்டின் அதிகாரமிக்க பதவியில் இருக்கிற மோடி, சமீபகாலமாக தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.,வில் சேர்ந்து வருபவர்களின் பின்னணி என்ன என்பதை, மத்திய உளவுத்துறை மூலம் விசாரித்து பாருங்கள். நான் ஆதாரத்துடன் சொல்கிறேன்.புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை, கல்வெட்டு ரவி, புதுச்சேரி எழிலரசி, சீர்காழி சத்யா, சேலம் முரளி, நெற்குன்றம் சூர்யா, புதுச்சேரி சோழன், விக்கி, பாம் வேலு, டோக்கன் ராஜா, குரங்கு ஆனந்த், குடவாசல் அருண், சீர்காழி ஆனந்த்.சென்னை பாலாஜி, குடந்தை அரசன், தஞ்சை பாம் பாலாஜி, அரியமங்கலம் ஜாகிர் உசேன், குடவாசல் சீனு, பாக்கெட் ராஜா, பல்லு கார்த்திக், பூண்டு மதன்.
இவர்கள் எல்லாம் யார் என்று, மோடி தயவு செய்து விசாரிக்க வேண்டும். இவர்கள் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விசாரிக்க கூறுங்கள். வாய்க்கு வந்தபடி, தி.மு.க.,வைப் பற்றி பேசுவதை, மோடி இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெ., தான் என்று மோடி பேசியிருக்கிறார்.
நல்ல வேளை, இதைக் கேட்க ஜெ., உயிரோடு இல்லை. 'ஜெ.,யின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது.'ஊழல் நிறைந்த ஆட்சியை மாற்ற வேண்டும்' என, 2006ல் ஓசூர், சென்னையில் தான் பேசியதை, மோடி மறந்து விட்டாரா? 'குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாலில் இருந்து, பெரியவர்கள் குடிக்கும் மதுபானங்கள் வரைக்கும் ஊழல் செய்தவர் ஜெ.,' என்று பேசியவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
ஜெ., இறந்த பிறகு அவரது படத்திற்கு பூ அள்ளி போட்டு அ.தி.மு.க., வினரை ஏமாற்ற வந்திருக்கிறார் மோடி. தனது கொள்ளையில் இருந்து தப்பிக்க, மோடியை ஆதரிக்கிறார் முதல்வர் இ.பி.எஸ்.,அ.தி.மு.க.,வின் அப்பாவி தொண்டர்களை ஏப்பம் விட வருகிறார் மோடி. இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றனர். மக்கள் ஏமாற மாட்டார்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.
ஊடகங்கள் மீது பாய்ச்சல்
நிகழ்ச்சியில் ஸ்டாலின் மேலும் பேசியதாவது:இந்த பயணத்தின் வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாத சில ஊடகங்கள், தி.மு.க.,வை குறைச் சொல்லி எழுதி, முதல்வரை திருப்திபடுத்து கின்றன. அப்படி செய்வதால், அவர்களுக்கு அரசு விளம்பரம் கிடைக்கிறது. அதன்மூலம் அவர்களுக்கு பணம் வருகிறது.அதனால் திட்டி எழுதுகின்றனர்.
அப்போதும் ஸ்டாலின், உங்களுக்கு நன்மைதான் செய்து வருகிறான்.ஸ்டாலின் மனுக்களை வாங்குகிறார். பெட்டியில் போடுகிறார். மனு கொடுத்த சிலரை மட்டும் பேச சொல்கிறார். பின், பெட்டியை பூட்டி சாவியை, தன் சட்டைப் பையில் போட்டுக் கொள்கிறார் என ஒரு நாளிதழில் எழுதுகின்றனர். இது என்ன மாதிரியான நிகழ்ச்சி என்று அவர்களது மூளைக்கு புரியவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்.
கல்லுாரி பேராசிரியர் பாடம் நடத்துகிறார். தேர்வு வைக்கிறார். பாஸ் போடுகிறார். இது எல்லாம் ஒரு கல்லுாரியா என்று எழுதினால், மூளை வளர்ச்சி இல்லை என்றுதான் அர்த்தம். அப்படித் தான் அந்த நாளிதழ் எழுதுகிறது. நீங்கள் எழுதுவதன் மூலம், நாங்கள் சரியாகத்தான் செயல்படுகிறோம் என்று அர்த்தம்.
எப்படியேனும், தி.மு.க.,வின் வெற்றியை தடுத்தாக வேண்டும் என்பதே அவர்களது முயற்சி. அப்படி எழுத, எழுதத்தான் தி.மு.க., உற்சாகமாக, எழுச்சியாக வேலை செய்ய முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE