2 முறை விவசாய கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி பெருமிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

2 முறை விவசாய கடன் தள்ளுபடி: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (7)
Share
மேட்டூர் : ''கடந்த ஐந்து ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், இருமுறை விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.மேட்டூர் அணை உபரிநீரை, சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட, 100 ஏரிகளில் நிரப்ப, தமிழக அரசு, 2019ல், 565 கோடி ரூபாய் ஒதுக்கியது.மகிழ்ச்சிஇத்திட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை, 7:15 மணிக்கு, அணை
Edappadi Palanisamy, TN election, விவசாய கடன் தள்ளுபடி

மேட்டூர் : ''கடந்த ஐந்து ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், இருமுறை விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.

மேட்டூர் அணை உபரிநீரை, சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட, 100 ஏரிகளில் நிரப்ப, தமிழக அரசு, 2019ல், 565 கோடி ரூபாய் ஒதுக்கியது.


மகிழ்ச்சி


இத்திட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை, 7:15 மணிக்கு, அணை அருகிலுள்ள, திப்பம்பட்டியில், உபரிநீர் பாசன திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்து, பேசியதாவது:விவசாயிகள் கோரிக்கை மட்டுமின்றி, என் உள்ளத்திலும், உபரிநீர் பாசன திட்டத்தை, எப்பாடு பட்டாவது நிறைவேற்ற வேண்டும் என தோன்றியது. 2019 ஜூலை, 15ல் சட்டசபை மானிய கோரிக்கையில், இத்திட்டத்தை அறிவித்தேன். பணி, குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டு, தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி.

தினமும், 215 கன அடி வீதம், 30 நாட்களுக்கு அரை டி.எம்.சி., நீர் வெளியேற்றப்பட்டு, ஏரிகள் நிரப்பப்படும். இத்திட்டம் மூலம், 4,238 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும், 38 கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.சமீபத்தில், வறட்சி, வெள்ளத்தால் சாகுபடி பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கோரிக்கைப்படி, 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தோம். ஒரு அரசின் ஆயுள் காலம், ஐந்து ஆண்டு.

இந்த ஐந்து ஆண்டு ஆட்சியில், இருமுறை விவசாய கடனை தள்ளுபடி செய்த பெருமை, அ.தி.மு.க., அரசுக்கு உண்டு. 2016ல் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதிப்படி, விவசாய கடனை தள்ளுபடி செய்தார். தற்போது, தேர்தலுக்கு முன் என, இருமுறை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு, ஏப்., 1 முதல் மும்முனை மின்சாரம், 24 மணி நேரம் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


ஆர்ப்பாட்டம்


இதற்கிடையில், இத்திட்டத்தை கைவிடக் கோரி, நாகை மாவட்டம், மீனம்பநல்லுாரில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், கறுப்புக் கொடியுடன், குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.விவசாயிகள் கூறுகையில், 'மேட்டூர், சரபங்கா நீரேற்று திட்டத்தால், டெல்டா மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். டெல்டா விவசாய நிலங்கள் பாலைவனமாகும்.

'காவிரியை நம்பி உள்ள டெல்டா மாவட்டத்தில், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். டெல்டா விவசாயிகள் மற்றும் பொதுமக்களை வறட்சியில் இருந்து காக்க, சரபங்கா நீரேற்று திட்டத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X