அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரிக்கு ஏப்ரல் 6 சட்டசபை தேர்தல்!

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, நேற்று அறிவித்தார். தமிழகம், புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக, வரும், ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்களிலும், மே 2ல் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து, தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களிலும், தேர்தல்
TN election, EC, Election Commission, தமிழகம், புதுச்சேரி, ஏப்ரல் 6, சட்டசபை தேர்தல்

தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, நேற்று அறிவித்தார். தமிழகம், புதுச்சேரிக்கு ஒரே கட்டமாக, வரும், ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், மே 2ல் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து, தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள், நேற்று முதல் அமலுக்கு வந்தன.தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கான தேதிகள் குறித்த அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் நிலவி வந்தது.

அடுத்த மாதம், 5ம் தேதிக்கு பின்பே, தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு, தலைமை தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்தது. டில்லி விஞ்ஞான் பவன் அரங்கில், சக தேர்தல் கமிஷனர்களுடன் இணைந்து, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, செய்தியாளர்களை சந்தித்தார்.


latest tamil news
மனு பரிசீலனை


அப்போது அவர் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டசபை தேர்தல்கள், ஏப்ரல் 6ம் தேதியன்று, ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும்.வேட்பு மனு தாக்கல், அடுத்த மாதம், 12ல் துவங்குகிறது. மனு மீதான முடிவு, 19ல் அறிவிக்கப்படும். வேட்பு மனு பரிசீலனை, மார்ச் 20ல் துவங்குகிறது. மனுவை வாபஸ் பெற, 22ம் தேதி கடைசி நாள். அசாம் சட்டசபை தேர்தல், மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில், மூன்று கட்டங்களாக நடக்கிறது.

கடந்த முறை, ஏழு கட்டங்களாக நடத்தப்பட்ட மேற்கு வங்க சட்டசபை தேர்தல், இம்முறை எட்டு கட்டங்களாக நடக்கிறது.முதல்கட்டமாக, மார்ச் 27ல், 30 தொகுதிகளுக்கும்; இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1ல், 30 தொகுதிகளுக்கும்; மூன்றாம் கட்டமாக, ஏப்ரல் 6ல், 31 தொகுதிகளுக்கும்; நான்காம் கட்டமாக ஏப்ரல் 10ல், 44 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்கின்றன.அதன் பின், ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு ஏப்ரல் 17ல், 45 தொகுதிகளுக்கும்; ஆறாம் கட்ட ஓட்டுப் பதிவு, ஏப்ரல் 22ல், 43 தொகுதிகளுக்கும்; ஏழாம் கட்டமாக ஏப்ரல் 26ல், 36 தொகுதிகளுக்கும்; எட்டாம் கட்டமாக, ஏப்ரல் 29ல், 35 தொகுதி களுக்கும் ஓட்டுப்பதிவு நடக்கின்றன.


latest tamil newsமேற்கு வங்கத்தில், இரண்டு சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர், தேவைப்பட்டால், மேலும் ஒருவரை நியமிக்கவும் திட்டம் உள்ளது.மேலும், தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் மலப்புரம் லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல் 6ல், இடைத்தேர்தல்கள் நடக்கின்றன. ஐந்து மாநில சட்டசபை தேர்தல், இரண்டு லோக்சபா இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள், மே 2ல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.


விதிமுறை


கொரோனா தொற்றை எதிர்த்து, அலுவலர்கள் துவங்கி, அதிகாரிகள் வரையில், களப்பணியாற்றி வரும் நிலையில், தேர்தல்களை நடத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.பீஹார் சட்டசபை தேர்தல், மிகுந்த சிரமத்திற்கு இடையே, அக்னி பரிட்சை போல நடத்தி முடிக்கப்பட்டது. பெண் வாக்காளர்கள், பெரும் எண்ணிக்கையில், வந்து ஓட்டளித்தனர். இந்த முறையும், ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள், போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகளுடன் நடத்தப்படும். அனைத்து ஓட்டுச்சாவடிகளும், தரைத்தளத்தில் மட்டுமே அமைக்கப்படும். பிரச்னைக்குரியதாக அடையாளம் காணப்படும் ஓட்டுச் சாவடிகளில், 'வெப்காஸ்டிங்' எனப்படும், இணையதளம் வழியாக ஓட்டுப்பதிவை நேரலை செய்யும் வசதி உருவாக்கப்பட உள்ளது.

வேட்பாளர்கள், 'ஆன்லைன்' வாயிலாக வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவருமே, முன்களப்பணியாளர்களாக கருதப்படுவர். எனவே, அவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்,பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். கொரோனா காரணமாக, ஐந்து மாநிலங்களிலுமே, ஓட்டுப் பதிவுக்கான கால அவகாசம் இம்முறை, ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. மேலும் கூடுதல் நேரம் தேவைப்பட்டால், அதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவு செய்வார்.பிரசாரத்தைப் பொறுத்தவரையில், வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்கும்போது, வேட்பாளர் உட்பட, ஐந்து பேர் வரை மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.


latest tamil news
அனுமதி


சாலையில் வாகனங்களில் சென்றபடி ஓட்டு சேகரிக்க, ஐந்து வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலின்போது, வேட்பாளருடன், இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், தபால் வாயிலாக ஓட்டு போட அனுமதியளிக்கப்படுகிறது. தபால் ஓட்டு கட்டாயம் அல்ல. அவர்கள் விரும்பினால், நேரில் வந்தும் ஓட்டு போடலாம். ஒரு ஓட்டுச்சாவடியில், அதிகபட்சமாக, 1,000 வாக்காளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஒரு வேட்பாளர், ஒரு தொகுதியில், 30.8 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவு செய்யலாம். புதுச்சேரி வேட்பாளர், ஒரு தொகுதிக்கு, 22 லட்சம் ரூபாய் வரை மட்டுமே, தேர்தல் செலவு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.தமிழகத்திற்கு என, தேர்தல் கமிஷன் சார்பில், தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திரகுமார், அலோக் வர்தன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதியில் இரண்டு முறை தேர்தல் ரத்தானது. வேலுார் லோக்சபா தொகுதியிலும் தேர்தல் ரத்தானது. நாட்டிலேயே மிகவும் அமைதியான மாநிலம் தமிழகம்தான். இருப்பினும் அங்கு தேர்தல் செலவு, அதிகமாக நடக்கிறது; அதை, தலைமை தேர்தல் கமிஷன் மிகுந்த கவனத்தில் வைத்துள்ளது; இதன் காரணமாகவே, இரண்டு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஐந்து மாநிலங்களிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தள்ளன. தமிழகம், 234, புதுச்சேரி, 30, கேரளா, 140, அசாம், 126, மேற்கு வங்கம், 294 சட்டசபை தொகுதிகளுக்கு பிரமாண்ட தேர்தல் திருவிழா துவங்குகிறது. இந்த ஐந்து மாநிலங்களில், மொத்தம், 824 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்குள்ள, 2.7 லட்சம் ஓட்டுச் சாவடிகளில், 18.68 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.

தமிழகத்தில், முதல்வர், இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சியும், கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியும் நடக்கிறது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரசும், அசாமில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான பா.ஜ.,வும், ஆட்சியில் உள்ளன. புதுச்சேரியில், ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது.


ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல தடை


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்த பேட்டி: தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. சட்டசபை நடத்த தடை இல்லை. ஆனால், புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது. தமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, முதல் கட்டமாக, 45 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். அவர்கள் தமிழக போலீசாருடன் இணைந்து பணியாற்றுவர்.

இன்னும் கூடுதலாக, துணை ராணுவ வீரர்கள் வருவர். தற்போது, 70 சதவீத மாவட்டங்களில், ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன; மற்ற மாவட்டங்களில் இன்று நிறைவடைந்துவிடும்.பணப் பட்டுவாடாவை தடுக்க, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்படும். 'சி விஜில்' மொபைல் ஆப்; 1950 என்ற தொடர்பு எண் வழியே, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

உடனடியாக அவற்றின் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திற்கு, இரண்டு செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வங்கி அதிகாரிகளுடன், பணப் பரிமாற்றத்தை தடுப்பது குறித்து ஆலோசித்துள்ளோம். அவற்றை கண்காணிக்க, தனிப்படைகள் அமைக்கப்படும். ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்ல, பல்வேறு விதிமுறைகள் உள்ளன; அவை பின்பற்றப்படும். ஒருவர், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால், அந்த பணத்தை எங்கிருந்து எடுத்து செல்கின்றனர் என்பதற்கான ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


அப்போ... இப்போ...64 நாள்

கடந்த, 2016ல், ஐந்து மாநில சட்டசபை தேர்தல், மார்ச், 4ல் அறிவிக்கப்பட்டது. முடிவு, மே, 19ல் வெளியிடப்பட்டது. தேர்தல் முடிய, 76 நாட்கள் ஆனது. இம்முறை, பிப்., 26ல் அறிவிக்கப்பட்டது. முடிவு மே, 2ல் வெளியிடப்படுகிறது. தேர்தல் நடவடிக்கை, 64 நாளில் முடிகிறது.


காத்திருப்பு நாள்

தமிழகம், கேரளா, புதுச்சேரியில், 2016 தேர்தலில், ஓட்டுப் பதிவு - தேர்தல் முடிவு என, இரண்டுக்குமான காத்திருப்பு, மூன்று நாட்கள் மட்டுமே. இது மேற்கு வங்கத்தில் 14, அசாமில், 37 நாட்களாக இருந்தது. தற்போது தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாமில், 27 நாள், மேற்கு வங்கத்தில் மூன்று நாளாக உள்ளது.


அவகாசம்

தமிழகத்தில், 2016ல் தேர்தல் அறிவிப்பில் இருந்து, வேட்புமனு தாக்கலுக்கு, 49 நாள் அவகாசம் இருந்தது. ஆனால் தற்போது, 14 நாட்கள் மட்டுமே உள்ளன. இதற்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என, அனைத்தையும் முடிக்க வேண்டிய கட்டாயம், அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.


பிளஸ் 2 தேர்வு

தமிழகத்தில் புதிய ஆட்சியின் கீழ், பிளஸ் 2 தேர்வு, மே, 3ல் நடக்கவுள்ளது.


மையங்கள்

தமிழகத்தில், 2016 தேர்தலில், 66 ஆயிரத்து, 007 ஓட்டுப்பதிவு மையங்கள் இருந்தன. தற்போது, 37 சதவீதம் அறிவிக்கப்பட்டு, 88 ஆயிரத்து, 936 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


வாக்காளர்கள்

தமிழகத்தில் இம்முறை, 6,28,23,749 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். கடந்த தேர்தலை விட, 49 லட்சம் வாக்காளர்கள் அதிகம். தமிழகத்தில் இம்முறை, 1.55 லட்சம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
27-பிப்-202116:32:09 IST Report Abuse
periasamy கடைசி கட்ட ஒட்டுப் பதிவில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரளாவில் வைத்திருக்கலாம் எதோ மரமாக இருக்கு
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-பிப்-202113:21:42 IST Report Abuse
Malick Raja ஓடி வருகிறான் உதயசூரியன் .. ஓடி ஒளிகிறார்கள் .. பிஜேபி அண்ட் கோவினர் ..
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
27-பிப்-202112:57:43 IST Report Abuse
sankar திமுக வாஸ் அவுட் ஆவது உறுதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X