சென்னை :''தேசிய மருத்துவ ஆணையம் வெளிப்படை தன்மையுடன் செயல்படும். ஆறு ஆண்டுகளில், 80 சதவீத மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன,'' என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி பேசினார்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 33வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாக வெள்ளி விழா கூட்டரங்கில், நேற்று நடந்தது.மனித குல 'ஹீரோ'க்கள்பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக, காணொலி வாயிலாக பங்கேற்று, பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.அவர் பேசியதாவது:இன்று, 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில், பட்டம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
குணப்படுத்தும் நேரம்
இதில், 70 சதவீதம் பேர் பெண்கள்; அவர்களை பாராட்டுகிறேன். இதை பார்க்கும் போது, அனைத்து துறைகளிலும், பெண்கள் முன்னணியில் இருப்பது தெரிகிறது.இன்று பட்டம் பெறும் நீங்கள், வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் இருந்து, மற்றொரு கட்டத்திற்கு செல்கிறீர்கள். அதாவது, கற்றலை முடித்து, நோயாளிகளை குணப்படுத்தும் நேரம். தேர்வில் மதிப்பெண் பெறுவதில் இருந்து விடுபட்டு, சமூகத்தில் மதிப்பெண் பெற வேண்டிய நேரம்.கொரோனா தொற்று உலகில் யாருமே எதிர்பாராத ஒன்று. தொற்றை பொறுத்த மட்டில், இந்தியாவில் குணமானோர் எண்ணிக்கை அதிகம்; இறப்பு எண்ணிக்கை மிகக்குறைவு. உலகிற்கே, கொரோனா தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து வழங்குகிறது.சிகிச்சை என்பது நோயாளிகள், டாக்டர்கள், பராமரிப்பாளர்கள், மருந்து ஆகியவற்றை உள்ளடக்கியது என, திருவள்ளுவர் கூறியுள்ளார். பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், இந்த நான்கு துாண்களும், கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை வீழ்த்த போராடுவதில், முன்னணியில் இருந்தன.
ஆறு ஆண்டுகளில்
கொரோனா வைரசை எதிர்த்து போராடிய அனைவரும், மனித குலத்தில் 'ஹீரோ'க்கள்.மத்திய அரசு, மருத்துவ கல்வி மற்றும் சுகாதாரத்துறையை முழுமையாக மாற்றியமைத்து வருகிறது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவ துறையில் வெளிப்படை தன்மையை உருவாக்கும்.புதிய மருத்துவ கல்லுாரிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை, இந்த ஆணையம் மேற்கொள்ளும். மருத்துவ துறையில் தரம் மற்றும் மருத்துவ துறைக்கு தேவையான மனித வளங்களை, இத்துறை மேம்படுத்தும்.மத்திய அரசு அனுமதிகடந்த, ஆறு ஆண்டுகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ்., இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன; இவை, 2014ம் ஆண்டை ஒப்பிடும் போது, 50 சதவீதம் அதிகம். மருத்துவ மேற்படிப்புகளின் எண்ணிக்கையும், 24 ஆயிரமாக உயர்ந்து உள்ளது;
இது, 2014ஐ ஒப்பிடுகையில், 80 சதவீதம் அதிகம்.கடந்த, 2014ல், ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள்இருந்தன. ஆறு ஆண்டுகளில், நாடு முழுதும், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.தமிழகம் மருத்துவக் கல்விக்கு பெயர் பெற்றது. தமிழகத்தில், 11 புதிய மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது, மருத்துவக்கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லுாரிகள் நிறுவப்படும். இதற்காக, 2,000 கோடி ரூபாய் அளிக்கப்படும்.மக்களுக்கு சேவை செய்வது இறைவனுக்கு பணிவிடை செய்வது போன்றது என, ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியுள்ளார்.இந்த உன்னதமான லட்சியத்துடன் வாழ வாய்ப்பு உள்ளவர்கள், மருத்துவ நிபுணர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. சவால் மிகுந்த மருத்துவ துறையில், நீங்கள் நல்ல குறிக்கோளுடன் வாழ விரும்புகிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விழாவில், தமிழக கவர்னரும், பல்கலை வேந்தருமான பன்வாரிலால் புரோஹித், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழா மேடையில் ஒருவரும், மேடையின் கீழ், 31 பேரும் பட்டங்கள் பெற்றனர். இந்தாண்டு, மொத்தம், 21 ஆயிரத்து, 858 பேர் பட்டங்களை, அவரவர் கல்லுாரிகளில் பெற்றனர்.விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE