உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திராவிட அரசியல்வாதிகள், காழ்ப்புணர்ச்சியால் ஆத்திரத்தில் அறிவிழந்து, ஒரு அடிப்படை விபரத்தைக் கூட சரிபார்க்காமல், கருத்து சொல்வது வாடிக்கை; வேடிக்கையான விஷயமும் கூட.
'மாக்மில்லன்' என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள, சி.பி.எஸ்.இ., எட்டாம் வகுப்பு பாட நுாலில், திருவள்ளுவரை, உச்சிக் குடுமியுடன் சித்தரித்துள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிடும் பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் நாட்டில் உள்ள எந்த பதிப்பகமும், பாட நுால் வெளியிடலாம்; இதற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த விபரம் அறியாத திராவிட அரசியல்வாதிகள், இதற்கு மத்திய அரசு தான் காரணம் என, பொங்கி எழுந்துள்ளனர். அதாவது, உச்சிக் குடுமி என்பது, அந்தணர் குறியீடாம். 'திருவள்ளூவருக்கு எப்படி பார்ப்பனச் சாயம் பூசலாம்' என்பது தான், அவர்களின் ஆத்திரத்துக்கு காரணம்.
எதையும் பேசுவதற்கு முன்னால், தீர ஆராய வேண்டும்; கண்மூடித்தனமாக குறை கூறுவது முட்டாள்தனம். ஈ.வெ.ரா., வழி வந்த திராவிடக் கட்சிக்காரர்கள், திருவள்ளுவரை சொந்தம் கொண்டாடுவதே கொடுமை. திருவள்ளுவர், 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் எப்படி இருந்தார் என, யாருக்கும் தெரியாது. குடுமி, தாடி, காவி துண்டு, திருநீறு, பூணுால் என்ற அடையாளத்தோடு இருந்தோ இல்லாமலோ, அவர் வாழ்ந்திருக்கலாம்; அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அதுவா முக்கியம்? உலகமே வியந்து போற்றும், அவரது குறள் தானே முக்கியம்!
ஆங்கில இலக்கியம், 'எழுதியவரை நினைக்காதே; எழுதியதை மனதில் வை' என்கிறது. எழுத்தாளன் மரணம் அடைவான்; அவன் எழுத்துக்கள் மறையாது. இதன்படி பார்த்தால், நாம், திருவள்ளுவரை விட திருக்குறளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.ஆனால், நம்மூர் மேதாவிகள், வள்ளுவரின் தோற்றம் பற்றித் தான் அதிகம் சிந்திக்கின்றனர்.

வெறும் நுனிப்புல் மேயும் இந்த திராவிட அரசியல்வாதிகள், திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள ஹிந்து கடவுள்கள் பற்றிய கருத்துக்களை அறிவரா? மும்மூர்த்திகளைப் பற்றிய குறிப்பும், வேதம் மற்றும் உபநிஷத் பற்றிய குறிப்பும், குறளில் உள்ளது என, சான்றோர் பலர் எடுத்துரைத்துள்ளனர். ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு மனிதனையும் கடிச்ச கதை மாதிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இந்த விவகாரத்தில், பரிமேலழகரையும் சாடியிருக்கிறார்.
திருக்குறள் உரையில், பரிமேலழகர், தன் ஆரியக் கருத்துகளையும் திணித்துள்ளார் என்கிறார். இருக்கட்டுமே; அதிலென்ன தப்பு? ஒரு பாடலுக்கு, பலர் உரை எழுதியிருந்தால், எல்லாம் ஒரே மாதிரி இருக்காது. அவரவர் கண்ணோட்டத்தில் படித்து, எழுதியிருப்பர். வைகோவும், அவர் பாணியில், திருக்குறளுக்கு ஓர் உரை எழுதட்டுமே... யார் தடுத்தது?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE