மோடி வந்தாரே; கூட்டம்எப்படியிருந்துச்சு! இதுவே, கோவை மண்ணில், எங்கு பார்த்தாலும் பேச்சு. மோடி வருகிறார் என்றாலே, தமிழகமே திரும்பிப் பார்க்கும்; அதுவும், எதிர்க்கட்சியினர் அவரது ஒவ்வொரு அசைவையும்உற்றுநோக்குவர். அப்படித்தான், கோவை 'விசிட்' டையும் கவனித்தனர்.
'கொடிசியா' அருகே உள்ள மைதானத்தில் நடந்த கட்சி கூட்டத்தில், 35 ஆயிரம் இருக்கைகளில் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். பிளஸ், 5,000 பேர் சுழற்சியில் இருந்ததாக சொல்கிறது, உளவுத்துறை கணக்கு. இது, எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. காங்., எம்.பி., ராகுல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும், தேர்தல் பரப்புரைக்கு கோவை வந்து சென்று விட்டனர். அவர்களுக்கு இத்தகைய கூட்டம் கூட வில்லை.
உளவுத்துறை, 'ரிப்போர்ட்' கூறிய, 40 ஆயிரம் பேர் கணக்கை ஏற்க மறுப்போர், அ.தி.மு.க.,வினர் மூலமாக அழைத்து வரப்பட்டவர்கள் என, நொண்டி காரணம் சொல்வதை காண முடிகிறது. அதுவல்ல, உண்மை என்பதை, தொண்டர்களின் முழக்கம் ஊருக்கு எடுத்துக் காட்டியது. மோடி 'மைக்' பிடித்ததும், 'பாரத் மாதா கி... ஜே' என்கிற கோஷமும், 'வீரவேல்... வெற்றி வேல்...' என்கிற முழக்கவும், வந்தே மாதரம் பாடலுக்கு அமர்ந்திருந்தோர் அனைவரும் எழுந்து நின்று, பாடியதும், மைதானத்தை அதிர வைத்தது. இதுவே எதிர்க்கட்சியினரை மிரள வைத்திருக்கிறது.

பிரதமர் மோடி, கோவைக்கு இரண்டு மணி நேரமே ஒதுக்கினார். அரசு விழாவுக்கு ஒரு மணி நேரம்; கட்சி பொதுக்கூட்டத்துக்கு ஒரு மணி நேரம். கட்சி விழாவிலும், அவர் பேசியது, 15 நிமிடமே; மொழி பெயர்த்தது, 15 நிமிடம்; அவ்ளோ தான்! அந்த, 15 நிமிட பேச்சில், தி.மு.க., கூடாரத்தையே அலற வைத்து விட்டார். ஆம், அவரது பேச்சுக்கான எதிர்வினை, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் எதிரொலித்ததை கேட்க முடிந்தது.
ஏன்? அந்தளவுக்கு பயம்!
'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சமூக விரோதி சக்திகள் தலைதுாக்குவர்' என்கிற பகிரங்க குற்றச்சாட்டை தி.மு.க., மீது சுமத்திய மோடி, 'பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது' என்பதை, ஜெ.,வுக்கு நேர்ந்த கொடுமையை சுட்டிக் காட்டி, நினைவுபடுத்தியதால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசியல் ரீதியாக, தி.மு.க., கூடாரத்தை அசைத்த மோடி, மத்திய அரசால் செய்யப்படும் வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டதோடு, சிறு குறு நிறுவனங்களையும், ஜவுளி தொழில் துறையினரையும் ஈர்த்தார்.
மோடியின் வருகை, பா.ஜ.,வினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க., கூட்டணியில், விருப்பப்பட்ட தொகுதிகளை கேட்டுப்பெறலாம் என்கிற தெம்புடன் உலா வருகின்றனர். அவர்களிடம் பேசும்போது, 'இது ஒரு ஆரம்பமே. தேர்தல் அறிவித்து விட்டதால், மீண்டும் தமிழகம் வருவார் மோடி; தேர்தல் பிரசாரத்துக்காக, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்க வருவார்; அப்போது, எதிர்க்கட்சியினருக்கான சூடு இன்னும் அதிகரிக்கும்' என்கின்றனர், பா.ஜ.,வினர்.
-நமது நிருபர்-