தமிழக அரசியல் களத்தை, நீண்ட காலமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த கருணாநிதி, ஜெயலலிதா என்ற, இரு பெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில், ஒரு மாறுபட்ட தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டுஇருக்கிறது, தமிழகம்.
கடந்த, 1967க்கு பின், அ.தி.மு.க., அல்லது தி.மு.க., தான் என்ற நிலை, தமிழகத்தில் காணப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் - ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் - தே.மு.தி.க., - விடுதலை சிறுத்தைகள் என, பல கட்சிகள், நம் மாநிலத்தில் உள்ளன. ஆனால், இந்த கட்சிகள் எந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலோ அல்லது கூட்டணியே வைத்துக் கொள்ளாமல் தனித்து போட்டியிட்டாலோ, தமிழக அரசியல் நிலைமை மாறப் போவதில்லை. காரணம், ஆட்சிக்கு அவர்கள் வரப்போவதில்லை. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் இருப்பை, இந்த கட்சிகள் காட்டிக் கொள்கின்றன.
பதிலே இல்லை
இந்த கட்சிகளின் துணையோடு அல்லது துணையின்றி, இரு பெரும் கட்சிகளான,அ.தி.மு.க., அல்லது தி.மு.க., தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்றால், எதற்காக தேர்தல் நடத்த வேண்டும்... எந்த தேர்தல் வந்தாலும், இவ்விரு கட்சிகளில் ஒன்று தான், தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் என்றால், தேர்தலுக்காக ஏன் இவ்வளவு அதிக தொகையை, கட்சிகள் மற்றும் அரசு செலவிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.இவ்விரு கட்சிகளும் தான், இந்த மாநிலத்தை ஆளத் தகுதி உடைய கட்சிகளா; இந்த கட்சிகள் செய்த ஆட்சி தான் சிறந்த ஆட்சிகளா; இந்த ஆட்சியாளர்கள் தவறு செய்யவில்லையா; இவர்களால் எப்படி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர முடிகிறது...
ஓட்டு முறையில் தவறு இருக்கிறதா அல்லது ஓட்டளிக்கும் மக்கள் மத்தியில் தவறு இருக்கிறதா என்பது தெரியவில்லை.
அதுபோல, கேரளாவில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையில் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, தேர்தல் மூலம் மாநிலத்தில் ஆட்சிக்கு வருகின்றன. அறிவுஜீவிகள் நிறைந்த அந்த மாநிலத்திலும் நிலைமை அப்படித் தான். பிற கட்சிகளாலோ அல்லது நியாயமான ஒரு தலைவராலோ ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இந்த இரண்டு கட்சிகள் தான், ஆட்சி செய்ய தகுதி உடையவையா; இவர்கள் ஆட்சியில், மாநிலம் உச்ச நிலையை அடைந்து விட்டதா என்ற கேள்விகளுக்கு பதிலே இல்லை.
தேர்தல் என்பது, கொள்கைகள், செயல்பாடுகள், கட்சிகளின் வாக்குறுதிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஆனால், அதற்கெல்லாம் இந்த காலத்தில் வாய்ப்பே இல்லையோ என்ற ஏக்கத்தை, பல மாநில சட்டசபை தேர்தல்கள் ஏற்படுத்துகின்றன.தமிழகத்தில் எத்தனையோ நியாயவான்களும், நடுநிலையாளர்களும், படித்த மேதாவிகளும் அவ்வப்போது கட்சி துவக்குகின்றனர்; ஆனால், அவர்களால், ஆட்சியை பிடிக்க முடியவில்லை.ஒவ்வொரு தேர்தலிலும், அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகள் தான், மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன.பிறகு எதற்கு தேர்தல் நடத்த வேண்டும்; சீட்டு குலுக்கி போட்டு, அ.தி.மு.க., அல்லது தி.மு.க.,வை, ஆட்சி அமைக்க தேர்ந்தெடுத்து விட வேண்டியது தானே...
வெற்றிக்கனி
'நான் அரசியலுக்கு கட்டாயம் வருவேன்' என, நேரடியாகவும், படங்களில் பல ஆண்டுகளாக மறைமுகமாக பேசி வந்த நடிகர் ரஜினி, திடீரென, 'அரசியலுக்கு வரப் போவதில்லை' என்று அறிவித்து விட்டார். 'அவர் வயதையும், உடல் நிலையையும் கருதி இந்த முடிவை எடுத்துள்ளார்' என, ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அப்படியானால், படத்திற்கு படம், அரசியல் வசனம் வைத்தது எதற்காக; அப்போதெல்லாம் அவருக்கு, வயதாவது தெரியாமல் போயிற்றா?
அதுபோல, நடிகர் கமலும், மூன்றாண்டுகளாக கட்சி நடத்தி வருகிறார். அவர் நியாயமான ஆள் தான் என்றும், தனிப்பட்ட வாழ்க்கை தவிர்த்து, நேர்மையானவர் தான் என்றும் பொதுவான எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. அவரால் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற எண்ணத்தில், ஏராளமான வல்லுனர்கள், மெத்த படித்தவர்கள் அவர் கட்சியில் இணைந்து வருகின்றனர். ஆனால், அவராலும் ஆட்சியை பிடிக்க முடியாது; அ.தி.மு.க., - தி.மு.க.,வில் ஏதாவது ஒன்று தான், ஆட்சிக்கு வரும் என்கின்றனர்.
அப்படியானால், பல மாதங்களாக அவர் நடத்தி வரும் பிரசாரம், தேர்தல் அணுகுமுறை, வேட்பாளர் தேர்வு, தேர்தலுக்காக செலவழிப்பது போன்ற பணம் வீண் தானா என்ற கேள்விக்கு யார் பதிலளிக்கப் போகின்றனர்?
அ.தி.மு.க., நிறுவனர், எம்.ஜி.ஆர்., ஊழல் செய்யவில்லை; பணம் சேர்க்கவில்லை என்பது போலவே, அவருக்கு பின் கட்சி தலைமைக்கு பொறுப்பேற்ற ஜெயலலிதாவும், சம்பாதிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், ஜெயலலிதா பெயரை சொல்லி, அவருடன் இருந்த கும்பல், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, சொத்துக்களை வாங்கி போட்டுள்ளதே; அது, எந்த வகையில் நியாயம்?
அதுபோல, தி.மு.க.,வின் முன்னணி தலைவர்கள் சிலர், பல தொழில்களில் முதலீடு செய்தும், சாராய ஆலைகளை நடத்தியும், வருமானத்தை பெருக்கி வருகின்றனரே, அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது பணம்?
இப்படி பல கேள்விகள், தமிழகத்தில், நடுநிலையாளர்கள் மத்தியில் சுற்றி வருகின்றன. மாறி மாறி, இந்த இரண்டு கட்சிகளும் தான் ஆட்சிக்கு வரும் என்றால், நாம் ஏன் ஓட்டு போட வேண்டும் என்ற நியாயமான கேள்வியும், நடுநிலையாளர்கள் மனதில் தோன்றுகிறது.
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என அறிவித்து, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விலிருந்து ஏராளமான, வி.ஐ.பி.,க்களை இழுத்து போட்டுள்ள, பா.ஜ.,வும் தனித்து போட்டியிட்டு, வெற்றிக்கனியை ருசிக்க தயாராக இல்லை. அ.தி.மு.க.,வுடன் இணைந்தே தேர்தலை சந்திக்கப் போகிறதாம். பிறகு எதற்கு இத்தனை முஸ்தீபுகள், முயற்சிகள்... பிரதமரை, அடிக்கடி அழைத்து வந்து பிரசாரம் வேறு செய்கின்றனர்.
ஆந்திராவில் சில ஆண்டுகளுக்கு முன், ஜெயபிரகாஷ் நாராயணன் என்ற ஒற்றை மனிதன், யாருடனும் கூட்டு சேராமல், மாநிலத்தின் அத்தனை தொகுதிகளிலும் போட்டியிட்டு, ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றும் காட்டினார். அந்த துணிச்சல் கூட, பா.ஜ.,விடம் இல்லை. பிரதமர் மோடியை காட்டி, அவர் போல நேர்மையான ஆட்சியை வழங்குவோம் எனக் கூறும், பா.ஜ., தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கிறது; கூடுதல் இடங்களை தர வேண்டும் என கெஞ்சுகிறது; எதற்கு இப்படி கெஞ்ச வேண்டும்?
தனிமனித ஒழுக்கம்
மேலும், தமிழக மக்கள், இவ்விரு கட்சிகள் தவிர்த்து, பிறரை தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாதவர்களா என்ற கேள்வியும் எழுகிறது. தமிழக மக்களுக்கு அந்த திறன் இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிபடுத்தக் கூட, எந்த கட்சிகளும் முன் வரவில்லை.
சில நேரங்களில், மூன்றாவது அணி என்ற பெயரில், முற்றிய கட்சிகளும், ஊழல் கறை படிந்த கட்சிகளும், ஜாதிவாத அமைப்புகளும் ஒன்று சேர்கின்றன. அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியாது என்ற போதிலும், ஓட்டுகளை பிரித்து, மீண்டும் அ.தி.மு.க., அல்லது தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தி, திருப்திபட்டுக் கொள்கின்றன.இந்த கோளாறுகளை எப்படி சரிசெய்து, நியாயமானவர்கள், ஆட்சி பொறுப்புக்கு எப்போது வருவரோ என்ற ஏக்கம், தமிழக நடுநிலையாளர்களுக்கு ஏற்பட்டு விட்டது.
எனினும், அது இப்போதைக்கு எட்டாக்கனி தான் என்ற நிலையே தென்படுகிறது.அதுபோல, தனிமனிதர்களுக்கு அவசியமான ஒழுக்கம், தாம் ஆதரிக்கும் கட்சி தலைவரிடம் இருக்கிறதா என்றும் கட்சியினர் பார்ப்பதில்லை. கண்மூடித்தனமாக தலைவர்களை ஆதரிக்கின்றனர். அதனால், குறுநில மன்னர்கள் போல, அரசியல் தலைவர்கள் உருவாகி விடுகின்றனர்.மன்னர் ஆட்சியின் போது கூட, இத்தகைய முறைகேடான தலைவர்கள் இருந்ததில்லை போலும்; இப்போது நிறைய தலைவர்கள், தனிமனித ஒழுக்கம் இன்றி உள்ளனர்.அவர்களுக்கும் ஏராளமானோர் ஆதரவு அளிப்பதும், தேர்தல்களில் ஓட்டளிப்பதும், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வருகிறது.
மாற்றம், நம்மில் இருந்து தான் துவங்க வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது என்பர். தமிழக அரசியல் வரலாற்றில், காமராஜரின் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்ட பின், பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது தமிழகம்.பெருகி வரும் லஞ்சம், ஊழல், வேலையில்லா திண்டாட்டம், வழிப்பறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், வணிகமயமாகிவிட்ட கல்வி.
வியத்தகு மாற்றங்கள்
மேலும், கொள்ளைபோகும் கோவில் சொத்துக்கள், மதுவால் சீரழியும் இளைய சமுதாயம், அடிப்படை தேவைகளுக்கே அல்லாடும் கிராமங்கள், அரசியல்வாதிகளின் கண்ணியமற்ற பேச்சுக்கள், பணத்துக்கு விலை போகும் வாக்காளர்கள்... இவை தான் அந்த வியத்தகு மாற்றங்கள். இது போன்ற அவலங்கள் அடியோடு மாற வேண்டும் என்பதே நேர்மையாளர்களின் நீண்ட கால கனவாக இருந்து வருகிறது. இரு கட்சிகளின் ஆட்சி தான் மாறி மாறி வர வேண்டும் என்றால், தேர்தல் எதற்காக என்ற கேள்விக்கு பதில் எங்கே?
மாற்றத்தை எதிர்நோக்கும் மக்கள் முதலில் மாற வேண்டும். நம்மில் மாற்றம் வராமல் அரசியல்வாதிகள் மட்டும் மாற வேண்டும் என்று எண்ணுவது மடமை அல்லவா? அவர்கள் கொடுக்கும் அஞ்சுக்கும் பத்துக்கும் ஆலாய்ப் பறந்துவிட்டு, 'அரசியல்வாதி லஞ்சம் வாங்குகிறான்' என்று புலம்புவது, எந்த வகையில் நியாயம்? இலவசங்களை பெற வரிந்துகட்டி வரிசையில் நின்று விட்டு, 'கல்வியை வியாபாரமாக்கி விட்டனர்' என்று குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?மாற்றத்தை ஏற்படுத்த நாம் தயாராக வேண்டும் என்கிறோம். ஆனால், மாற்றம் தான் எப்போது வரும் என்ற ஏக்கம் தீருவது எப்போது? நயத்தகு மாற்றம் நம்மிலிருந்தே துவங்கட்டும்!
டாக்டர் டி.ராஜேந்திரன் எம்.டி.,
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:
மொபைல்: 75488 71411
இ - மெயில்: rajt1960@gmail.com