புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் ஆகியோரின் செயல்பாடுகளில், கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதையடுத்து, கட்சி மேலிடத்துக்கு எதிராக, அவர்கள் மீண்டும் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
கடந்த, 2019ல், லோக்சபாவுக்கு நடந்த தேர்தலில், காங்., மீண்டும் படுதோல்வியடைந்தது. இதையடுத்து, தலைவர் பதவியிலிருந்து, ராகுல் விலகினார். இடைக்கால தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டார். ராகுல் பதவி விலகி, இரண்டு ஆண்டுகள் முடிய உள்ள நிலையிலும், கட்சிக்கு முழு நேர தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், லோக்சபா தேர்தல் தோல்வியை அடுத்து, காங்கிரஸ், பல மாநில சட்டசபை தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு, காங்., பலவீனத்தை சுட்டிக் காட்டி, கட்சிக்கு வலுவான தலைமை தேவை என, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட, 23 முக்கிய தலைவர்கள், சோனியாவுக்கு கடிதம் அனுப்பினர். அப்போது அவர்களை அழைத்து சமாதானம் செய்த, காங்., தலைமை, இப்போது, மெல்ல மெல்ல ஒவ்வொருவராக ஓரம் கட்டி வருகிறது.இந்த வரிசையில், சமீபத்தில் சேர்ந்திருப்பவர், குலாம் நபி ஆசாத். சமீபத்தில், அவரது ராஜ்ய சபா பதவிக் காலம் முடிந்தது. அவருக்கு மீண்டும், 'சீட்' தர, தோழமை கட்சிகள் முன்வந்த போதும், அதை காங்., தலைமை நிராகரித்து விட்டது.
காஷ்மீர் அரசியல்
இதையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பின், குலாம் நபி ஆசாத், மீண்டும் காஷ்மீர் அரசியலுக்கு திரும்பியுள்ளார். வழக்கமாக, தமிழகத்தில் கூட்டணி கட்சியான, தி.மு.க., உடன், 'சீட்' ஒதுக்கீடு தொடர்பாக பேச, குலாம் நபி ஆசாத் தான் காங்., மேலிடத்தால் அனுப்பி வைக்கப்படுவார். ஆனால், இம்முறை, அவருக்கு பதிலாக, ரன்தீப் சுர்ஜேவாலாவை, காங்., முன்னிறுத்தியுள்ளது.
குலாம் நபி ஆசாத் போலவே, இன்னொரு மூத்த தலவைரான ஆனந்த் சர்மாவும் கடும் அதிருப்தியில் உள்ளார். அவரது ராஜ்ய சபா பதவிக் காலம், ஓராண்டு மட்டுமே உள்ளது. அதனால், தனக்கு ராஜ்ய சபா எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்கும். அதன் மூலம், மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினராகலாம் என, அவர் கணக்கு போட்டிருந்தார்.
ஆனால், ராகுலுக்கு மிகவும் நெருக்கமான, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, ராஜ்ய சபா எதிர்க்ட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்படி, காங்., தலைமைக்கு எதிராக, ஆக்கப்பூர்வ கருத்துக்களை தெரிவித்த தலைவர்கள் ஒவ்வொருவராக, ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர்.
அது மட்டுமின்றி, தேர்தல் வியூகம் வகுப்பதில் கூட, தங்களை ஆலோசிப்பதில்லை என்பது, மூத்த தலைவர்கள் பலரின் குமுறலாக உள்ளது.
காங்.,கில், குலாம் நபி ஆசாத், கபில் சிபல், விவேக் தன்கா, அகிலேஷ் பிரசாத் சிங், மணிஷ் திவாரி, பூபிந்தர் ஹூடா, ஆனந்த் சர்மா ஆகிய, ஏழு முக்கிய அதிருப்தியாளர்களின் கை, தற்போது ஓங்கியுள்ளது. அவர்கள், சோனியா, ராகுலின் செயல்பாடுகளில் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர். இதையடுத்து, கட்சி மேலிடத்துக்கு எதிராக, அவர்கள் மீண்டும் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
உரிமை இல்லை
இந்நிலையில், குலாம் நபி ஆசாத்தின், 'காந்தி குளோபல் பேமிலி' அறக்கட்டளை சார்பில், ஜம்முவில், 'அமைதி மாநாடு' என்ற தலைப்பில், மூன்று நாள் நிகழ்ச்சி, நேற்று துவங்கியது. இதில், கபில் சிபல், ஆனந்த் சர்மா, விவேக் தன்கா, பூபேந்தர் சிங் ஹூடா, மணிஷ் திவாரி உட்பட, கட்சி தலைமைக்கு கடிதம் எழுதிய தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில், ஆனந்த் சர்மா பேசியதாவது:காங்கிரஸ் கட்சி பலமாக இருந்ததை, நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால், கடந்த, 10 ஆண்டுகளாக கட்சி பலவீனமடைந்துள்ளதை, எங்களால் பார்க்க முடியவில்லை. எங்களுக்கு வயதாகிவிட்டது. புதிய தலைமுறை தான், கட்சியை வலுப்படுத்த வேண்டும்.நாங்கள், ஜன்னல் வழியாக கட்சிக்குள் நுழைந்து, பதவிகளை பெறவில்லை. வாசல் வழியாகவே கட்சிக்குள் நுழைந்து, கடின உழைப்பால் பதவிகளை பெற்றோம்.மாணவராக இருக்கும் போதே, கட்சியில் சேர்ந்தவன் நான். அதனால் கட்சிப் பற்று, தலைமை பற்று ஆகியவை பற்றி, என்னை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.
ராகுலின், வடக்கு - தெற்கு எம்.பி., பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த மூத்த தலைவர்கள், இப்போது, சோனியா, ராகுலின் செயல்பாடுகளுக்கும், பகிரங்கமாகவே அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்களின் கவனம், தமிழகம் உள்ளிட்ட, ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் பக்கம் திரும்பியுள்ளது. இத்தேர்தலில், காங்., பெறும் இடங்களை வைத்து, தலைமை மாற்றத்தை மீண்டும் வலியுறுத்த, அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
'தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு சாதகமாக இருந்தால், சோனியா, ராகுலுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது; இல்லாவிடில், கட்சியில் பெரும் மோதல் வெடிக்கும்' என, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
'பயன்படுத்தி கொள்ளவில்லை'
இன்னொரு காங்., தலைவர் கபில் சிபல் பேசியதாவது:காங்கிரஸ் பலவீனமாகி கொண்டே வருகிறது. அதனால் தான், இங்கு கூடியுள்ளோம். இதற்கு முன்பும் நாங்கள் கூடினோம். கட்சியை வலிமையாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட நிலவரத்தை நன்கு அறிந்தவர், குலாம் நபி ஆசாத். ஒவ்வொரு மாவட்டம் வரையிலும், கட்சியின் நிலவரம் அவருக்குத் தெரியும். அவர், பார்லிமென்டில் இருந்து விடுவிக்கப்பட்டது, வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரை மீண்டும் எம்.பி.,யாக்கியிருக்க வேண்டும். அவரது அனுபவத்தை, கட்சி தலைமை பயன்படுத்தி கொள்ளாதது ஏன் என, தெரியவில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE