தேர்தலில் நிற்க, 'சீட்' கேட்டு விருப்ப மனு கொடுப்பது, சமீபத்தில் தோன்றிய புது பழக்கம். 'காஸ்ட்லி'யான பழக்கமும் கூட. ஏனென்றால், விருப்ப மனு கொடுக்க ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளன. சிறு கட்சிகளில், 5,000 ரூபாய். தி.மு.க.,வில் அதிகபட்சமாக, 25 ஆயிரம் ரூபாய். ஒருவரே எத்தனை தொகுதிகளுக்கு வேண்டுமானாலும் விருப்ப மனு போடலாம்.
முட்டி மோதுவது ஏன்?
ஒவ்வொரு தொகுதிக்கும் தலா, '25 கே' செலுத்த வேண்டும். அ.தி.மு.க.,வில், 10 ஆயிரம் ரூபாய். தி.மு.க.,வில், விருப்ப மனு விண்ணப்பத்துக்கே, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.இவ்வளவு, 'காஸ்ட்லி'யான விஷயத்துக்கு, இத்தனை பேர் முட்டி மோதுவது ஏன்? விசாரித்தோம்.
கதை சுவாரசியமாக இருக்கிறது. இதோ:
விருப்ப மனு போடும் ஒவ்வொருவருக்கும், இந்த தொகுதி இன்னாருக்குத்தான் கொடுக்கப்படும் என்பது தெரியும். அதனால், தான் செலுத்தும் கட்டணம் போய்விடும் என்பதும் தெரியும். இருந்தும், ஆயிரக்கணக்கில் செலுத்தி மனு போடுகின்றனர். ரசீதுடன் ஊருக்கு திரும்புகின்றனர்.
பிறகு தான் வேட்டை ஆரம்பம்.'தலைமை கழகத்தில் தலைவரை பாத்தேன். 'ஸோ அன் ஸோ' இந்த தடவ உங்க தொகுதில நிக்க மாட்டேனு சொல்லிட்டார் பா... உனக்குதான், 'சீட்'. போய், 'எலக் ஷன்' வேலைய பாரு'ன்னு சொல்லிட்டார்' என்பார். அப்பாவிகளை நம்ப வைக்க ஆதாரமாக, சென்னையில் தலைவருடன் எடுத்த போட்டோவையும், மனு கட்டண ரசீதையும் காட்டுவார்.
கறக்க வேண்டியது தான்
தலைவர் சொன்ன பிறகு, தேர்தல் வேலை தொடங்காமல் இருப்பதா? 'சரி, குடுங்க. மீதிய அப்புறமா குடுங்க, மறந்திடாதீங்க' என்று சொல்லி, தொழில் அதிபர்கள் தொடங்கி, தள்ளுவண்டி கடைக்காரர் வரை கறக்க வேண்டியது தான். சில திறமைசாலிகள், 20 லட்சம், 25 லட்சம் இலக்கு வைத்து வசூலித்து விடுகின்றனர்.வேறு நபர் வேட்பாளராக போடப்பட்டதும், எப்படி சமாளிப்பது? 'கூடவே இருந்து கவுத்துட்டாங்கண்ணே, கவுத்திட்டாங்க...' என மூக்கை சிந்தினால் போதாதா... கவிழ்த்தது யாராக இருக்கும் என, நிதி கொடுத்தவர் தலையை சொறியும்போதே, அண்ணன், 'எஸ்' ஆகி இருப்பார்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE