பொது செய்தி

தமிழ்நாடு

போதையின் பாதையில்... தொழிலாளர்களின் வருமானத்தை 'உறிஞ்சும்' மது அரக்கன்

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
பின்னலாடை ஏற்றுமதி மூலம், ஆண்டுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது; 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், உள்நாட்டு சந்தைக்கு ஆடை வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. தொழிலாளர் மற்றும் தொழில்முனைவோரின் கடின உழைப்பே, திருப்பூர் பின்னலாடை துறைக்கு, இத்தகைய வளர்ச்சியை பெற்றுத்தந்துள்ளது.புதியவர்களும்கூட, செக்கிங், டெய்லர் என, ஆடை உற்பத்தியின் ஏதேனும் ஒரு
போதையின் பாதை,தொழிலாளர்கள், வருமானம், உறிஞ்சும், மது அரக்கன், மதுக்கடை,  வளர்ச்சி, முட்டுக்கட்டை

பின்னலாடை ஏற்றுமதி மூலம், ஆண்டுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது; 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், உள்நாட்டு சந்தைக்கு ஆடை வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. தொழிலாளர் மற்றும் தொழில்முனைவோரின் கடின உழைப்பே, திருப்பூர் பின்னலாடை துறைக்கு, இத்தகைய வளர்ச்சியை பெற்றுத்தந்துள்ளது.

புதியவர்களும்கூட, செக்கிங், டெய்லர் என, ஆடை உற்பத்தியின் ஏதேனும் ஒரு பிரிவில் இணைந்து பணியாற்ற முடியும். நல்ல சம்பளம் பெற்று, தங்கள் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். ஆடை உற்பத்தி நுணுக்கங்களை கற்று, எதிர்காலத்தில், தொழில்முனைவோராக மாறமுடியும். திருப்பூரில் உள்ள ஆடை உற்பத்தியாளர்களில், 90 சதவீதம் பேர், சாதாரண தொழிலாளராக இணைந்து, அயராத உழைப்பால், தொழில்முனைவோராக மாறியவர்கள் என்பதே இதற்கு சாட்சி.ஆரம்ப காலங்களில், மதுரை, தேனி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட, தமிழக தொழிலாளர் மட்டுமே திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிந்தனர். கல்வியில் பின்தங்கியிருந்தாலும்கூட, அர்ப்பணிப்பு உணர்வுடன், இரவு பகல் பாராமல் உழைத்தனர்.கிடைக்கும் வருமானத்தை சிக்கனமாக செலவழிக்கும் பக்குவம்; தொழில்முனைவோராக மாறிவிடவேண்டும் என்கிற லட்சியம், தொழிலாளர் மத்தியில் ஓங்கியிருந்தது.

இதற்காக, அதிவேகமாக தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்ட தொழிலாளர்கள், ஆடை தயாரிப்பு, நிட்டிங், டையிங், பிரின்டிங் போன்ற, பின்னலாடை துறை சார்ந்த ஏதேனும் ஒரு நிறுவனத்தை துவக்கினர். தங்களிடம் தொழிலாளராக பணிபுரிந்தோரின் நிறுவனங்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் ஆர்டர் வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்துகின்றனர், ஆடை உற்பத்தி துறையினர்.மூலப்பொருளான நுால், நிட்டிங், டையிங், பிரின்டிங் போன்ற ஜாப்ஒர்க் சேவைகள் என அனைத்தும், கடனுக்கு கிடைக்கிறது. ஆடை தயாரிப்பு வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு அனுப்பும் பின்னலாடை நிறுவனங்கள், அதற்கான பணம் கிடைக்கும்போது, சார்பு நிறுவனங்களுக்குரிய தொகையை வழங்குகின்றன. இவையெல்லாம், ஆடை உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும், புதிய தொழில்முனைவோருக்கு, கூடுதல் பலம் சேர்க்கிறது.


போதை என்றொரு மாயை!கடந்த பத்து ஆண்டுகளாக, பின்னலாடை தொழிலாளர் மனநிலையில், பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான தொழிலாளர்கள், மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வரும் காசில், பெரும்பகுதியை குடிப்பதற்கு செலவிடுகின்றனர். இதனால், அவர்களது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, குடும்ப பொருளாதாரமும் சிதறடிக்கப்படுகிறது. அன்றாட செலவினங்களுக்கு கூட, கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் பெற்று, செலுத்த முடியாமல், கண்ணீர் வடிக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இரவு பகல் பாராமல், சுறுசுறுப்பாக பணிபுரிந்த தொழிலாளர்களின் உடலும், மனமும், இன்று, எட்டு மணி நேரத்துக்கு மேல் பணிபுரிய தயங்குகிறது. மது அருந்திவிட்டு பணிக்கு வருவது, அடிக்கடி விடுப்பு எடுக்கும் தொழிலாளரால், நிறுவனங்களின் உற்பத்தி திறனும் குறைகிறது; திட்டமிட்டபடி ஆடை தயாரிப்பை பூர்த்தி செய்யமுடியாமல், நிறுவனங்கள் திணறுகின்றன. இதனால், ஒரு சில நிறுவனங்களில் ஆடைகளின் தரமும் பாதிக்கப்படுகிறது.இதற்கு முக்கிய காரணமாக, திருப்பூர் மாநகராட்சி பகுதியில், மட்டும் 130 மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், மொத்தம் 4 கோடி ரூபாய்க்கு குறையாமல் தினமும் மது விற்பனை நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு கடை திறக்கப்படுகிறது என்றாலும் கூட, அதிகாலை, 5:00 மணி முதலே கள்ள மார்க்கெட்டில், மது மடை திறந்த வெள்ளமென விற்பனை செய்யப்படுகிறது.


திறனுள்ள தொழிலாளர்...இதனால், காலையில் பணிக்கு செல்லும் தொழிலாளரும்கூட, மதியம், மதுக்கடையிலேயே தஞ்சமடைகின்றனர். தொழிலாளர் நலனையும், தொழில் நலனையும் உறிஞ்சுவதால், மதுக்கடை எண்ணிக்கைகளை குறைக்கவேண்டும் என, திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர், அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்; ஆனால், தொழில் துறையினரின் இந்த கோரிக்கைக்கு, அரசு செவிசாய்க்கவில்லை.உலக அளவில், ஆயத்த ஆடை வர்த்தக சந்தை விரிவடைந்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உட்பட வெளிநாடுகள்; நாட்டின் பிற மாநிலங்களிலிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆடை உற்பத்திக்கான ஆர்டர் வருகை அதிகரித்து வருகிறது. வர்த்தக வாய்ப்புகள் பெருகி வரும் தற்போதைய சூழலில், நிறுவனங்கள், விரிவாக்க பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.உலகின் எந்த நாட்டிலிருந்தும், பல லட்சங்கள், கோடிகளை முதலீடு செய்து, அதிநவீன ஆடை உற்பத்தி மெஷின்களை தருவித்து கொள்கின்றனர். ஆனால், அவற்றை திறம்பட இயக்க, போதிய எண்ணிக்கையில், திறன் மிக்க தொழிலாளர் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.


தொழிலாளர் பற்றாக்குறைதிருப்பூர் நோக்கி இடம் பெயர்ந்து வந்து, ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிய, தற்போது தமிழக தொழிலாளர் தயங்கு கின்றனர். இதனால், ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநில தொழிலாளரை பணி அமர்த்துகின்றன, பின்னலாடை நிறுவனங்கள். ஆடை உற்பத்தி துறையில் தற்போது, 50 சதவீதம், வடமாநில தொழிலாளர் பணிபுரிகின்றனர்.போதிய தொழிலாளரின்றி, உற்பத்தி பாதிப்பு; உற்பத்தி செலவினம் அதிகரிப்பால், நிறுவனங்கள் தவிக்கின்றன. தொழிலாளர் அதிகமுள்ள வெளிமாவட்டம், வெளிமாநிலங்களை தேர்வு செய்து, ஆயத்த ஆடை நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி சார்ந்த விரிவாக்க கிளைகளை ஏற்படுத்திவருகின்றன. அந்தவகையிலேயே, 36 ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து, மத்திய, மாநில அரசு மானியத்துடன், வேதாரண்யத்தில், ஆயத்த ஆடை பூங்கா அமைக்கும் பணியில் களமிறங்கியுள்ளன.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 2020, மார்ச் மாதம், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சவாலான இந்த காலத்திலும், முக கவசம், முழு கவச ஆடைகள் தயாரித்து, தன்னை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டது, திருப்பூர். கொரோனாவால், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர் லட்சக்கணக்கானோர், சொந்து ஊர்களுக்கு சென்றனர். அவர்கள், மீண்டும் திருப்பூர் திரும்புவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது.ஆனால், போதிய தொழிலாளர் கிடைக்காததால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மதுவை ஒழிப்பதன்மூலம், பல லட்சம் தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீட்கப்படும்; திறன் மிக்க தொழிலாளர்களுடன், திறம்பட இயங்கினால், திருப்பூர் தொழில்துறை மென்மேலும் வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்கும்.


உரிய ஆலோசனை வழங்க வேண்டும்latest tamil newsதிருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு, தொழிலாளரே முதுகெலும்பாக உள்ளனர். பல்வேறு காரணங்களால், தொழிலாளர் பலர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். உடல் ஆரோக்கியத்தையும்; குடும்ப பொருளாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர். அடிக்கடி திடீர் விடுப்பு எடுப்பதால், நிறுவனங்களில், ஆடை உற்பத்தி பணிகளும் பாதிக்கப்படுகின்றன.ஆடை உற்பத்தி நிறுவனங்கள், மனோதத்துவ நிபுணர்களை கொண்டு, தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, மதுவால் ஏற்படும் பாதிப்புகள்; அதிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகளை வழங்கவேண்டும்.இலவச அரிசி; இலவச மின்சாரம்; நுாறு நாள் வேலை; பொங்கல் பரிசு; வீடு கட்டிக்கொடுப்பது என, அரசு, ஏராளமான இலவசங்களையும், சலுகைகளையும் வழங்குகிறது. அதனால், தமிழக தொழிலாளர்கள், வேலைக்காக இடம்பெயர்தலை விரும்பாதவர்களாக மாறிவிட்டனர்.இதனால், சில ஆண்டுகளாக, திருப்பூருக்கு, தமிழக தொழிலாளர் வருகை குறைந்துள்ளது; வடமாநில தொழிலாளரை பணி அமர்த்தவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

- ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல்-


மதுவின் பிடியிலிருந்து தொழிலாளரை காப்பாற்றணும்latest tamil news


Advertisement


திருப்பூர் பின்னலாடை துறைக்கு உகந்த தொழிலாளர் தமிழகத்திலேயே உள்ள னர். ஆனால், மதுப்பழக்கம் உட்பட தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி விடக்கூடாது, தங்கள் பண்பாடு, கலாசாரம் மாறக்கூடாது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், திருப்பூருக்கு வர தொழிலாளர் தயங்குகின்றனர்.பொருளாதார நெருக்கடிகளால், வேறுவழியின்றி, தொழிலாளர் பலர், இடம்பெயர்ந்து திருப்பூருக்கு வருகின்றனர். நாகை, தஞ்சை, துாத்துக்குடி போன்ற பல்வேறு மாவட்டங்களில், ஏராளமான தொழிலாளர் உள்ளனர். தொழிலுக்கு முதலாளியாக இருக்கப்போகிறோமா அல்லது நிறுவனத்துக்கு முதலாளியாக இருக்கப்போகிறோமா என்பதை, பின்னலாடை துறையினர் முடிவு செய்யவேண்டும்.குறிப்பாக, உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள், இந்த இடம் பெயர்தலை மேற்கொள்வது நல்லது. இதன்மூலம், இடம்பெயரும் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி திருப்பூரில் இயங்கும் நிறுவனங்களுக்கும் போதுமான அளவு தொழிலாளர் கிடைப்பர்; தொழிலாளர் பற்றாக்குறை நீங்கும்.தங்கள் பகுதி நிறுவனங்களில் பணிபுரிவதன்மூலம், தொழிலாளர்களுக்கு, உணவு, தங்குமிடம் செலவினங்கள் தவிர்க்கப்படும். நிறுவனங்களுக்கும், பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படும். மதுப்பழக்கம் தொழிலாளர் நலனையும், தொழில் நலனையும் கெடுக்கிறது; மதுவிலிருந்து தொழிலாளரை மீட்பது மிகவும் அவசியம். அது, அரசின் கைகளில்தான் உள்ளது.

- ஆடிட்டர் ராமநாதன்


கவுன்சிலிங் கொடுத்து மாற்றலாம்...
latest tamil newsமுதலில் பொழுதுபோக்காக ஆரம்பித்து, நாளடைவில் அது பழக்கமாகி, பின், மனிதர்களை அடிமையாக்கி விடுகிறது.முதலில், குடும்பத்தினரோடு அதிக நேரத்தை கழித்தல், வேலையில் முழு கவனம் செலுத்துதல், தன்னிடம் உள்ள கலைத்திறன்களை வெளிப்படுத்துதல் என, வேறு விதங்களில் மனதை ஈடுபடுத்தினால் குடிப்பழக்கத்தை எளிதாக கைவிட முடியும்.குடும்ப பிரச்னை, தொழில் பிரச்னையால் பலரும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். ஆனால், மதுவால் தீர்வு கிடைக்காது.மதுப்பழக்கத்துக்கு அடிமையான தொழிலாளர்களை, மீட்டெடுக்க டாக்டர்கள் மூலம் கவுன்சிலிங் தரப்படுகிறது. இதனால் பலர், மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்கின்றனர்.

- டாக்டர். கீர்த்தி தியாகராஜன்


தொழிலாளர்களின் குடும்பம் சீரழிகிறது...
latest tamil news
தொழிலாளர்களின் கடின உழைப்பே, திருப்பூர் பின்னலாடை துறையை உலக அரங்கில் உயர செய்துள்ளது. அரசு வழங்கும் சலுகைகள், தமிழக தொழிலாளர் மத்தியில், உழைக்கவேண்டும் என்கிற ஆர்வத்தை தடுக்கிறது. ஏராளமான தொழிலாளர்கள், மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். இதனால், உடல் நலனும்; அவர்களது பொருளாதாரமும், குடும்பமும் சீரழிகிறது. சமூகத்தில், தொழிலாளர் மதிப்பும் குறைகிறது.தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட, இவையே மிக முக்கியமான காரணிகளாக உள்ளன. போதை பழக்கத்திலிருந்து, தொழிலாளரை மீட்டெடுப்பது மிகமிக அவசியம். இதற்கு, மதுக்கடை எண்ணிக்கையை, 75 சதவீதம் குறைக்கவேண்டும். சோம்பேறியாக்கும் இலவசங்களுக்குபதில், வேலை வாய்ப்பு அளித்து, தொழிலாளர் வருவாய் ஈட்டுவதற்கு உகந்த சிறந்த திட்டங்களை வகுக்கவேண்டும்.மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலம், திருப்பூரில், பின்னலாடை தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. தொழிலாளர் மத்தியில், நேரம் தவறாமை, திட்டமிடுதல், சுய ஒழுக்கம் மேம்பட்டு வருகிறது.புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக, அரசு உதவியுடன், குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். மது குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, தொழிலாளரை மீட்பதன் மூலமாகவே, நிலையான தொழில் வளர்ச்சியை எட்டமுடியும்.

-- திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம்


மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது மிகமிக அவசியம்...
latest tamil news
திருப்பூர் மாவட்டம் முழுவதும், பின்னலாடை துறை பரவியுள்ளது. தொழிலாளர்கள், தங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள நிறுவனங்களில் பணிபுரியவே விரும்புகின்றனர். மாவட்டத்தின் கிராமப்பகுதி தொழிலாளர்களும் கூட, நகர பகுதிகளில் இயங்கும் நிறுவனங்களுக்கு வர தயங்குகின்றனர். ஏற்றுமதி வளர்ச்சியால், தொழிலாளர் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மதுக்கடைகள் எண்ணிக்கை அதிகரிப்பால், மது, மிக எளிதாக கிடைக்கிறது.அதனாலேயே, மது பழக்கத்துக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; இதனால், தொழில் வளர்ச்சியும், தொழிலாளர் நலனும் பாதிக்கவே செய்கிறது. மது கடைகள் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, பூரண மது விலக்கை நோக்கி தமிழகத்தை பயணிக்க செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

--- தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன்


தொழிலாளர்களுக்கு உரிய வசதி காலத்தின் கட்டாயம்...
latest tamil news
திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்களில், ஆண்டு முழுவதும் சீரான அளவில் ஆர்டர் இருப்பதில்லை. நிலையான வேலை, வருவாயை தொழிலாளர் பலர் இழந்துள்ளனர். மாதத்தில் சில நாட்கள், இரவு பகலாக பணிபுரிய வேண்டியுள்ளது. பெரும்பாலான நாட்கள், வேலை இல்லாத நிலை ஏற்படுகிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளதால், வடமாநில தொழிலாளர்கள், திருப்பூரை நோக்கி வருகின்றனர்.தொழிலாளர் தங்கும் விடுதி, குடியிருப்பு வசதி; இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்ட வேண்டும். தொழிலாளர் நல சட்டங்கடைபிடிக்க வேண்டும்.

-- சி.ஐ.டி.யு., பனியன் சங்க செயலாளர் சம்பத்

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
28-பிப்-202123:47:35 IST Report Abuse
கல்யாணராமன் சு. இந்த மதுக்கடைகளை உடனடியா ஒழிக்கணும்னா ஒரே ஒரு வழிதான் இருக்கு ........ நம்ம ஸ்டாலினை "நாங்கள் பதவிக்கு வந்தால் திருப்பூர், மற்றும் அதை சுற்றியுள்ள மதுக்கடைகளை மூடுவோம்" என்று சொல்ல சொல்லுங்கள் ........ அடுத்த நாளே நாம் EPS சட்ட சபையிலே அதை ஒரு சட்டமா அறிவிச்சுடுவார் ........... இப்பல்லாம் அப்படித்தானே நடந்துக்கிட்டிருக்கு ??? .....
Rate this:
Cancel
28-பிப்-202120:19:25 IST Report Abuse
சம்பத் குமார் 1). முதல் கட்டமாக DMK கள்ளு கடைகளை ஒழத்து சாராய கடைகள் கொண்டு வந்தபோது இதற்கு பிள்ளையார் சுழி போட்டார்கள்.2). அதை நல்ல முறையில் உரம் இட்டு வளர்த்த பெருமை சினிமா துறையை சாரும். 3). கடந்த இருபது ஆண்டுகளில் மது குடிக்கும் காட்சிகள் இல்லாத படத்தை விரல்விட்டு எண்ணிவிடலாம்.அதிலும் குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் சினிமா தரம் கெட்டுப் போனது.4). சினிமா துறை தற்சமயம் மேலைநாட்டு நாகரீக கருத்துக்களை பரப்பும் அடிமைகளின் கையில் உள்ளது. நன்றி ஐயா.
Rate this:
Cancel
Baskar - sollamudiyatha naadu,யுனைடெட் கிங்டம்
28-பிப்-202119:39:05 IST Report Abuse
Baskar டாஸ்மாக் டுமிழர்களால் ஒழுங்கான தலைவர்களை தேர்ந்து எடுக்க முடியுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X