திருநெல்வேலி:''70 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த பலம் வாய்ந்த ஆங்கிலேயர்களை விரட்டியது போல் மக்கள் நினைத்தால் மோடியையும் நாக்பூருக்கு அனுப்ப முடியும்'' எனமுன்னாள் காங்., தலைவர் ராகுல் எம்.பி., பேசினார்.
தென்மாவட்டங்களுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வந்த ராகுல் நேற்று முன்தினம் துாத்துக்குடியில் பிரசாரம் செய்தார். இரவில் திருநெல்வேலி தனியார் ஓட்டலில் தங்கியவர் 2வது நாள் பிரசாரத்தை நேற்று துாய சவேரியார் கல்லுாரியில் பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார். கலைமனைகளின் அதிபர் பாதிரியார் ஹென்றி ஜெரோம் வரவேற்றார்.
ராகுல் பேசியதாவது:
இந்திய கல்வி முறை என்பது மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடல் கருத்தையறிந்து உருவாக்கப்படுவதாக இருக்க வேண்டும். தற்போது வேறு எங்கோ வடிவமைக்கப்பட்டு திணிக்கப்படுவதாக உள்ளது.அரசியல் பாடவகுப்புகளில் எந்த மதத்தையும் தவிர்க்க தேவையில்லை. ஒரு மதம் குறித்து பேசுவதால் எந்த பிரச்னையும் எழப்போவதில்லை. ஒருவரது கருத்தை பேசவிடாமல் தடுப்பதுதான் சிக்கல். ஆரோக்கியமான ஜனநாயகத்தில் அனைத்து விஷயங்களையும் பேசலாம்.
மத்திய அரசு ஹிந்து மதத்தை முன்னிலைப்படுத்தி செயலாற்றுகிறது. ஆனால் மக்களை துன்புறுத்துங்கள், கொலை செய்யுங்கள் என ஹிந்து மதத்தில் எங்கேயும் கூறப்படவில்லை. சகமனிதன் மீது அன்பு காட்டுங்கள். மற்றவருக்கு மதிப்பளியுங்கள் என்று தான் அனைத்து மதங்களும் கூறுகின்றன.
மத்தியில் எங்கள் ஆட்சி அமையும் காலத்தில் ஏழைகள், பெண்களுக்கு கட்டணமில்லாத கல்வி அளிப்போம். கல்வித்துறையை எளிமைப்படுத்துவோம். மாணவர்கள் சர்வதேச தரத்துடன் தொழில்நுட்பங்கள் அறிந்து கொள்வதோடு, இந்திய கிராமப்புறங்களின் தேவையை உணர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஆசிரியராவேன் என மாணவர்கள் கூறும் அளவுக்கு கல்வியாளர்களின் ஊதியம் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு அறிவு, ஞானத்தை வெறும் கம்ப்யூட்டர்கள் தந்துவிடாது. கற்பித்தல் வழியாக ஆசிரியர்களால் தான் வழங்க முடியும்.ஆட்சி மாற்றத்திற்காக தான் நான் மக்களை சந்திக்க வந்துள்ளேன். நானும் நீங்களும் இணைந்தால் நிச்சயம் நடக்கும். நம் கனவுகள் மிகப்பெரியவையாக இருக்க வேண்டும். மோடி அரசு நம் மீது எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், அவதுாறுகள் செய்தாலும் பரவாயில்லை. வன்முறையில்லாமல் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைப்போம்'' என்றார்.
துாய சவேரியார் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் பாதிரியார் ஜான்கென்னடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்லுாரி முதல்வர் பாதிரியார் மரியதாஸ்,
செயலர் பாதிரியார் அல்போன்ஸ் மாணிக்கம், துணைமுதல்வர் இஞ்ஞாசி ஆரோக், ராகுலுக்கு கல்லுாரி சார்பில் நினைவு பரிசு வழங்கினர். ஆங்கிலத்துறை தலைவர் லிசி வில்லியம்ஸ் நன்றி கூறினார்.
மக்கர் மைக்; ராகுல் கமென்ட்
* திருநெல்வேலி துாய சவேரியார் கல்லுாரியில் செல்பி எடுக்க விரும்பிய சிறுவன்
அப்துல்லாவை அழைத்த ராகுல் விரல் பிடித்து மேடையில் நடந்து சென்றார்.
*பேராசிரியர் ஒருவர் பேசுகையில் மைக் மக்கர் செய்தது. அப்போது, 'அதை பெரிதாக எடுக்க வேண்டாம். பார்லிமென்டில் நாங்கள் பேசும்போது பலமுறை மைக் கட்டாகிவிடும்' என ராகுல் கமென்ட் செய்தார்.
* 'வெற்றி நடை போடும் தமிழகமே' என்ற தமிழக அரசின் விளம்பர பாடல் குறித்த கேள்விக்கு 'யாருக்கு வெற்றி நடைபோடுகிறது' என பதில் கேள்வி கேட்டார்.
* திருநெல்வேலி டவுன் மேலரத வீதியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
* ஆலங்குளம் செல்லும் வழியில் ரோட்டோர கடையில் நிர்வாகிகளுடன் இளநீர் குடித்து
வியாபாரிக்கு ரூ.500 கொடுத்தார்.
*அடைக்கலபட்டணத்தில் ரோட்டோர கடையில் டீ குடித்து கடைக்காரருடன் ராகுல் புகைப்படம் எடுத்து கொண்டார்.மக்கள் மனம் கவருவது எப்படி
* பாவூர்சத்திரம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பேசுகையில் "தமிழகம் வருகையில் பிரதமர் மோடி காதுகளை திறந்தும் வாயை மூடியும் குறைகள் கேட்டால் தான் மக்கள்
மனங்களை கவர முடியும்" என்றார்.
*தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சிறு தொழில் புரிவோருடன் ராகுல் கலந்துரையாடினார். அப்போது பீடிச்சுற்றும் பெண் ஒருவர், ''ஆண்களின் குடிப்பழக்கத்தால் பெண்கள் பாதிக்கப்
படுகின்றனர். என் கணவரும், மாமனாராலும் பிரச்னை ஏற்படுகிறது'' என்றார்.
இதை கேட்ட ராகுல், ''இதுபற்றி இங்கே பேசுவது உங்கள் கணவருக்கு தெரியுமா. பிரச்னை வராதா'' என வினவியதோடு, ''குடிப்பழக்கத்திற்கு எதிராக பேசுகையில் பெண்களிடம் இருந்து
கைத்தட்டல் வருகிறது. ஆண்களிடம் சத்தமே இல்லையே'' என கமென்ட் செய்தார்.
நெல்லையப்பர் கோவில்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு நேற்று காலை, 11:38 மணிக்கு சென்ற ராகுலுக்கு, திருநீறு பூசி மேளதாளம் முழங்க வரவேற்பு வழங்கப்பட்டது. ராகுல் சார்பில் வழங்கப்பட்ட பச்சை வண்ண பட்டுப்புடவை அணிந்திருந்த காந்திமதியம்மனை அவர் தரிசித்தார். சங்கிலி மண்டபம் பிரமாண்ட யாழி சிலை குறித்து கேட்டறிந்து, நெல்லையப்பர் சன்னிதிக்கு சென்றார்.
கோவில் பேஸ்கார் முருகேசன், இசைத் துாண்களை இசைத்து காண்பித்தார். துாண்களில் வித்தியாசமான ஓசை எழுந்ததை வியப்புடன் ரசித்த ராகுல், 'சூப்பர்' என்றார்.
நெல்லையப்பர் சன்னிதியில் ராகுல் பெயருடன் கேட்டை நட்சத்திரம், தத்தாத்ரேய கோத்திரம் சொல்லி, அர்ச்சனை செய்யப்பட்டது. ராகுலுக்கு மாலை அணிவித்து, பட்டு பரிவட்டம் கட்டி
மரியாதை செய்தனர்.நெல்லை கோவிந்தன் எனும் கிடந்தநிலை பெருமாளையும் வணங்கினார். ஹிந்தி தெரிந்த ரவிபட்டர் கோவிலின் தொன்மை, தல வரலாற்றை ராகுலுக்கு விளக்கினார்.
நேற்று முன்தினம், துாத்துக்குடி மாவட்டம், நாசரேத் செயின்ட் ஜான்ஸ் சர்ச்சில் ராகுல் பிரார்த்தனை செய்தார்.
இளநீர் வியாபாரிக்கு ரூ.500
*ஆலங்குளம் செல்லும் வழியில், ரோட்டோர கடையில் நிர்வாகிகளுடன், ராகுல் இளநீர்
குடித்தார். இளநீரை அரிவாளால் சீவிக்காட்ட கூறி ஆர்வத்துடன் பார்த்தவர், 'வியாபாரம் எப்படி உள்ளது' என கேட்டறிந்து வியாபாரிக்கு, 500 ரூபாய் கொடுத்தார்.
*அடைக்கலபட்டணத்தில் ரோட்டோர கடையில் டீ குடித்து, கடைக்காரர் விருப்பப்படி அவருடன் ராகுல் புகைப்படம் எடுத்துகொண்டார்.
'ஊழல்வாதியான தமிழக முதல்வர்மோடி முன்பு கைகட்டி நிற்கிறார்'
''தமிழக முதல்வர் ஊழல்வாதி என்பதால்தான் மோடி முன்பு கைகட்டி, தலைகுனிந்து நிற்கிறார்'' என காங்., முன்னாள் தலைவர் ராகுல் பேசினார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டையில் ராகுல் பேசியதாவது:
மோடி அரசில் சிறு, குறு தொழில்கள் நலிவடைந்துள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் மிகுந்த பாதிப்படைந்துள்ளார்கள். தமிழ் மொழி, கலாசாரம் குறித்து மோடிக்கு தெரியவில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் ஒரே மொழி, ஒரே கலாசாரம் தான். பல்வேறு கலாசாரங்களை கொண்டதுதான் இந்தியா. அனைத்து மொழி, கலாசாரத்தையும் மதிக்க வேண்டும்.
தமிழக அரசை மோடி டிவி பெட்டியாக கருதுகிறார். ரிமோட்டை கையில் வைத்து முதல்வரின் சத்தத்தை குறைக்கிறார். சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகள் இருப்பதால் ஊழல்வாதியான அவர் அச்சப்படுகிறார். முதல்வரிடம் இருந்து எதிர்ப்பு குரல் வராது என மோடிக்கு தெரியும். மோடி முன்பு கைகட்டி, தலைகுனிந்து நிற்பதை தமிழக முதல்வர் விட்டுவிட்டு மக்கள் முன்பு
அவ்வாறு செயல்பட வேண்டும்
காமராஜ் முதல்வராக இருந்தபோது அரசு திட்டங்களை மக்களிடம் கேட்டு செய்தார். அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் அதிக செலவாகும் எனக்கூறியும் மதிய உணவு
திட்டத்தை காமராஜ் வெற்றிகரமாக செயல்படுத்தினார். அவரை பின்பற்றி பிற மாநிலங்களில் மதிய உணவு திட்டம் அமல் படுத்தப்பட்டது.தலைவர் என்பவர் எளிமையாகவும், மக்கள்
உணர்வுகளை புரிந்து கொள்பவராகவும் இருக்க வேண்டும்'' என்றார்.தொடர்ந்து புளியங்குடியில் எலுமிச்சை உற்பத்தியாளர்கள், பனை தொழிலாளர்கள், பீடிச்சுற்றும் பெண்களின் குறைகளை கேட்டறிந்தார்.
போரடித்த பேராசிரியர்கள்-எரிச்சலடைந்த ராகுல்
இந்த கலந்துரையாடலின்போது கொரோனா காலத்தில் ஊதியம் கிடைக்கவில்லை. பேராசிரியர் நியமனத்தில் லட்சக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள் என பல்கலை செனட், சிண்டிகேட்
கூட்டங்களில் பேசுவதை போல பேராசிரியர்கள் பேசி போரடித்தனர்.மாணவரை கேள்வி எழுப்ப சொல்லுங்கள் என ராகுல் கூற, ''இல்லை சார்... எல்லோரும் பேராசிரியர்கள்'' எனக்கூறினர். இதனால் ராகுல் எரிச்சலடைந்ததோடு, கலந்துரையாடல் யதார்த்தம், சுவாரஸ்யம்
இல்லாமல் போனது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE