விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''2 ஜி மாறன் குடும்பத்தினர், 3 ஜி கருணாநிதி குடும்பத்தினர், 4 ஜி நேரு குடும்பத்தினர்,'' என, காட்டமாக விமர்சித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி, தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.
கவலை இல்லை
விழுப்புரம், ஜானகிபுரத்தில் நேற்று மாலை நடந்த, பா.ஜ., பிரசார பொதுக் கூட்டத்தில்,
அவர் பேசியதாவது:பாரத நாட்டின் புரதான மொழி மற்றும் இனிமையான தமிழ் மொழியில் பேச முடியாததால், வருந்துகிறேன். இந்த மண்ணில் பிறந்த பல மகான்கள், உலகம் முழுதும், தமிழகத்தின் பெயரை எடுத்து சென்றுள்ளனர்.
தற்போது, அ.தி.மு.க., வோடும், கூட்டணிகட்சியோடும் தேர்தலில் களமிறங்கியுள்ளோம். எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., ஆகியோரின் சிந்தனையோடு அ.தி.மு.க., அரசு செயல்படுகிறது.
எம்.ஜி.ஆர்., ஏழை, எளிய மக்களுக்கான சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து, மதிய உணவு கொடுத்தார்.எம்.ஜி.ஆர்., திட்டத்தை அதன் பின் வந்த ஜெ.,யும் செயல்படுத்தினார். இதை, தற்போது நாடு முழுதும் மோடி செயல்படுத்தி வருகிறார். தி.மு.க., - காங்., கட்சிகளுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. தி.மு.க., - காங்., கூட்டணி, குடும்பத்தை வழிநடத்த செயல்படுகிறது.
நான்கு தலைமுறைகள்
சோனியாவிற்கு தன் மகன் ராகுலை எப்படியாவது பிரதமராக்க வேண்டும் என கவலை. ஸ்டாலினுக்கு தன் மகனை முதல்வராக்க வேண்டும் என கவலை.ஊழல் பற்றிதி.மு.க.,
பேசும்போது சிரிப்பு வருகிறது. சற்று, தங்கள் குடும்பத்தை திரும்பி பாருங்கள்.
2ஜி ஊழல்செய்தது யார்?
காங்., தலைமையில், 12 லட்சம் கோடி ஊழல் நடந்தபோது, தி.மு.க., கூட்டணியில் இருந்தது. 2ஜி, 3ஜி, 4ஜி., என்பது தி.மு.க., - காங்., கட்சிக்கு பொருந்தும். 2ஜி மாறன் குடும்ப இரண்டு
தலைமுறைகள், 3ஜி கருணாநிதி குடும்பத்தின் மூன்று தலைமுறைகள், 4ஜி நேரு குடும்பத்தின் நான்கு தலைமுறைகள்.தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டுகள். நாட்டில் உள்ள சிறப்பான நிர்வாகத்தில் ஒன்று தமிழகம்.
அதேபோல் நல்லாட்சிக்கான விருதுகள் அதிகமாக தமிழகத்திற்கு கிடைத்து உள்ளது. நீர் மேலாண்மையில், அனைத்து மாநிலங்களைவிட சிறப்பாக செயல்பட்ட விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. மாவட்டங்களின் முன்னேற்றத்தில், தமிழகம் சிறப்பாக உள்ளது.இந்த நாட்டின் மிக சிறந்த நிதி அமைச்சர், தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன். நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழகத்தில் இருந்து வந்துள்ளார்.
'டபுள் இன்ஜின்'
இதனால், நீங்கள் பா.ஜ., கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டுமா, இல்லையா?மத்திய அரசோடு மோதல் போக்கோடு ஈடுபடும் அரசு வேண்டுமா, அல்லது மத்திய அரசோடு இணைந்து, 'டபுள் இன்ஜினாக' செயல்படும் அரசு வேண்டுமா என முடிவு செய்யுங்கள். ராகுலை பிரதமராக்க போகிறோமா அல்லது மோடியின் மக்கள் நல திட்டங்களுக்கு துணை நிற்க
போகிறோமா என, சிந்தித்து ஓட்டு போட வேண்டும்.
தேர்தலன்று தாமரைமற்றும் இரட்டை இலையில் பட்டன் அழுத்தி, வெற்றி பெற செய்ய
வேண்டும்.இவ்வாறு, அவர்பேசினார்.
காங்., காணாமல் போகும்
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில், பா.ஜ., சார்பில் நடந்த பிரசார கூட்டத்தில், அமித் ஷா
பேசியதாவது:புதுச்சேரியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, நாராயணசாமியின் அரசுக்கு,
15 ஆயிரம்கோடி ரூபாய் வழங்கி உள்ளது. ஆனால்,மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் வந்து
சேரவில்லை. அந்த பணத்தை, டில்லியில் உள்ள இந்திரா குடும்பத்திற்கு திருப்பி அனுப்பும் வேலையை தான் நாராயணசாமி செய்திருக்கிறார்.
புதுச்சேரி, காரைக்காலில் அதிக எண்ணிக்கையில் மீனவர்கள் உள்ளனர். அவர்களுக்கு
மிகப்பெரிய தொழில் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இங்கே வந்த ராகுல், மீனவர்களுக்கென தனி துறையை உருவாக்கவில்லை என, மோடியை பார்த்து கேள்வி எழுப்பினார். 2019ம் ஆண்டே மீனவர்களுக்கென தனி துறையை மோடி உருவாக்கியுள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக,மீனவர்களுக்கென தனி அமைச்சகமேநடந்து வருகிறது. அது தெரியாமல் உள்ள ராகுல் வந்து என்ன செய்ய போகிறார். அடிப்படை ஞானம், அறிவு இல்லாமல் இப்படி பேசிச்
சென்றுள்ளார்.
காங்., தலைவர்கள் தொடர்ந்து பா.ஜ.,வில் இணைவதற்கு காரணம் உள்ளது. காங்., கட்சியில் மகாராஜா மாதிரி குடும்ப ஆட்சி நடக்கிறது. பா.ஜ., அப்படி அல்ல. அது தான் காரணம் ஒழிய வேறு ஒன்றும் இல்லை. புதுச்சேரி மட்டுமல்ல, மொத்த இந்தியாவில் இருந்தும், காங்., கட்சி காணாமல் போகும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE