மதுரை: மதுரை மார்க்கெட்டில், வெங்காயங்களை தொடர்ந்து திருடி விற்ற மூவர், கைது செய்யப்பட்டனர்.
மதுரை, அன்பு நகரைச் சேர்ந்தவர் அக்பர், 43. பரவை காய்கறி மார்க்கெட்டில் வெங்காயம், உருளை கிழங்கு மொத்த வியாபாரம் செய்கிறார். சில நாட்களாக மார்க்கெட்டில், அக்பர் உட்பட சிலரது கடைகளில் வெங்காயம் திருடுபோனது.கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, பிப்., 27ல் மூன்று பேர், 5 கிலோ வெங்காய மூட்டைகளை ஆட்டோவில் திருடிச் சென்றது தெரிந்தது. அதில் ஒருவர், ஏற்கனவே மார்க்கெட்டில் வேலை செய்த, தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த இத்ரீஸ், 21, எனத் தெரிந்தது.
கூடல்புதுார் போலீசார் கூறியதாவது:கடந்த ஐந்து ஆண்டுகளாக, இத்ரீஸ் பரவை மார்க்கெட்டில் வேலை செய்தார். கொரோனா ஊரடங்கால், வேலை இழந்தார். ஊரடங்கு தளர்வுக்கு பின், வேலைக்கு வரவில்லை.மார்க்கெட்டில் அதிகாலைக்குள், சில்லரை வியாபாரிகளிடம் காய்கறிகளை விற்று, மொத்த வியாபாரிகள் சென்று விடுவர். அந்த காய்கறி மூட்டைகள், கடைகளுக்கு முன் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அந்த மூட்டைகளை தான் இத்ரீஸ் திருடியுள்ளார்.வெங்காய விலை அதிகரித்ததால், அதை திருடி, ஓட்டல்களில் விற்று வந்துள்ளார். இவருக்கு உடந்தையாக, அதே ஊர் ஆட்டோ டிரைவர் ராஜேஷ்குமார், 31, நண்பர் மாசானகுமார், 28, இருந்துள்ளனர். மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE