திருப்பூர்: திருப்பூர் அருகே, நேற்று அதிகாலை, சினிமா பாணியில், காரில் கயிறு கட்டி இழுத்து, ஏ.டி.எம்., மெஷினை, 'அலேக்'காக கொள்ளையடித்து சென்ற கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் அருகே, கூலிபாளையத்தில், ஊத்துக்குளி நால் ரோடு பகுதியில், பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. அதே வளாகத்தில், ஏ.டி.எம்., மையமும் உள்ளது. நேற்று காலை, பொதுமக்கள் சிலர், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கச் சென்றபோது, ஏ.டி.எம்., மெஷின் மாயமாகி இருந்தது.தகவலறிந்து, ஊத்துக்குளி போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் அங்கு வந்தனர். ஏ.டி.எம்., மையத்துக்குள் இருந்த, 'சிசிடிவி' கேமராவில், ரசாயனம் தெளிக்கப்பட்டிருந்தது. இதனால், காட்சிகள் தெளிவாக பதிவாகவில்லை.
நடந்தது என்ன?வளாகத்தில் இருந்த, மற்றொரு கேமராவை பார்வையிட்ட போது, கொள்ளையடித்த காட்சிகள் பதிவாகியிருந்தன. ஆட்கள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின், ஐந்தாறு பேர் அடங்கிய கொள்ளை கும்பல், அதிகாலை, 4:15 மணியளவில், ஏ.டி.எம்., மையத்துக்கு வருகிறது.
அவர்கள் வந்த, 'டாடா சுமோ' காரை, மையம் அருகே நிறுத்துகின்றனர்.காரின் பின்பகுதியில், கிரேனில் பயன்படுத்தப்படும் இரும்பு கயிற்றின் ஒருமுனையை கட்டுகின்றனர்; மற்றொரு முனையை, ஏ.டி.எம்., மெஷினை சுற்றி இறுக்கமாக கட்டுகின்றனர்.பின், மூன்று முறை, காரை முன்பக்கமாக இயக்குகின்றனர். இருப்பினும், ஏ.டி.எம்., மெஷினை வெளியில் எடுக்க முடியவில்லை. நான்காவது முறை, காரை அதிவேகமாக இயக்குகின்றனர். இழுத்த வேகத்தில், ஏ.டி.எம்., மெஷின், மைய கதவை உடைத்து, வெளியே வந்து விடுகிறது. மெஷினை காரில் எடுத்து போட்டு, கும்பல் தப்பிச் செல்கிறது.இந்த கொள்ளை நடந்தபோது, சாலையில் வாகனங்கள் கடந்து கொண்டிருந்ததும், கேமராவில் பதிவாகியுள்ளது.'பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' என்ற ஆங்கில படத்தில், காரில் சங்கிலி கட்டி, ஏ.டி.எம்., மெஷின் கொள்ளை அடிக்கப்படும். இதே பாணியில், கொள்ளை நடந்துள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர்.
மோப்ப நாய், 'அர்ஜுன்' வரவழைக்கப்பட்டு, அப்பகுதியில் விசாரணை நடந்தது.கடந்த, 18ம் தேதி, ஏ.டி.எம்., மெஷினில், 13 லட்சம் ரூபாய் நிரப்பப்பட்டிருந்தது. தற்போது கொள்ளை போன ஏ.டி.எம்., மெஷினில், 1 லட்சம் ரூபாய் இருந்தது. வங்கி முதுநிலை மேலாளர் கிரிதர் புகாரில், ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'வங்கியில் இரவு நேர செக்யூரிட்டி இல்லை. ஓராண்டுக்கு முன், இதே வங்கிக்கு எதிர்புறம் உள்ள வணிக வளாகம் ஒன்றில், நான்கு கடைகளின் பூட்டை உடைத்து பணம், 'லேப்டாப்' உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டன' என்றனர்.
கார் சிக்கியது
போலீசார் கூறியதாவது:விஜயமங்கலம் பைபாஸ் ரோட்டில், டாடா சுமோ கார் ஒன்று, நின்று கொண்டிருந்தது. அது, பெருந்துறையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது கார் என தெரிந்தது.அவரது வீட்டு முன் நிறுத்தியிருந்த காரை திருடி வந்து, கொள்ளைக்கு பயன்படுத்தியுள்ளனர். ஏ.டி.எம்., மெஷினை காரில் எடுத்துச் சென்று, விஜயமங்கலத்தில் மற்றொரு வாகனத்திற்கு மாற்றியதும், திருடப்பட்ட காரை விட்டு சென்றுள்ளனர். தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரிக்கப்படுகிறது. ஏ.டி.எம்., மெஷினை, கொள்ளையர் கொண்டு சென்றாலும், அதை உடைப்பது சிரமமானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE